ezhuthaikaappoam_attai02

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)

 தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக் கற்பதைச் சுமையாகப் பலர் கருதுகின்றனர். அவ்வாறில்லாமல் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் வழங்கினால் அனைவரும் தமிழுக்கு முதன்மை அளிப்பர். எனவே, தமிழைக் கற்பதற்கும் வரிவடிவ எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. தமிழ் படிக்கத் தொடங்கிய யாரும் எழுத்துகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்றும் குறியீடுகள் சீர்மையாக இல்லை என்றும் கூறித் தமிழ் மொழிக் கல்வியை நிறுத்தினாரில்லை. இன்னும் சொல்லப்போனால், அயலக அறிஞர்கள் இங்கு வந்த பொழுது தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றித் தமிழைப் படித்துப் புலமை பெற்றார்களே அன்றி, ஒருவர்கூட, “தமிழைப்படிக்க முனைந்தோம்; எழுத்துச் சுமையால் கைவிட்டோம்” எனக் கூறினாரல்லர்.

தட்டச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஏறத்தாழ 42 விசைகளைக் கொண்டிருந்த விசைப் பலகைக்கேற்ப சப்பானியரும் சீனரும் நெடுங்கணக்கு எண்ணிக்கை மிகுதியாக உடைய பிற மொழியினரும் தத்தம் மொழியைச் சிதைக்கவில்லை. சான்றாகச் சப்பானியர் 3 அடுக்கு விசை இழுவைப் பலகையை அமைத்தனர். முதல் அடுக்கில் 1850 எழுத்துகள் + 351 குறியீடுகள் என 2201; இரண்டாம் அடுக்கில் 858 பட எழுத்து; மூன்றாம் அடுக்கில் 2297 பட எழுத்து என மொத்தம் 5356 எழுத்துகளுக்கான விசைகளை அமைத்தனர். இதனால் சப்பானிய எழுத்துகளைக் குறைத்ததாகப் பொருள் இல்லை. பயன்பாட்டு எண்ணிக்கைக்கேற்ப அடிக்கடி தேவைப்படுவன, அவ்வப்பொழுது தேவைப்படுவன, எப்போதாவது தேவைப்படுவன என்ற முறையில் பகுத்து வைத்துள்ளனர். பின்னர் அனைத்து சப்பானிய வரிவடிவங்களையும் பயன்படுத்தும் வகையில் கருவி அமைத்தனர். கணிணியையும் தம் வரிவடிவம் சிதைவின்றி அச்சிடப்படும் வகையில் அமைத்தனர்.

கஞ்சி எனப்படும் சீன அல்லது சப்பானிய பட எழுத்துகளை எழுதுவதாயின் ஒன்றிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வளைவுகளும் மடக்குகளும் உள்ளன. சான்றுக்குச் சில:

இச்சிக்கலான வடிவமைப்பால் அவர்கள் எழுத்துகளைச் சிதைக்கவில்லை. நாம் ஆங்கில எழுத்தில் கணியச்சிட்டால் தமிழ் எழுத்து வரும் முறையையும் கொண்டிருப்பது போல் அவர்கள் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத்தொலிக்கான விசையைக் கணியச்சிட்டால் படவெழுத்து அச்சிடப்படும் வகையில் கணியச்சை வடிவமைத்துள்ளனர். அஃதாவது தொப்பியின் அளவிற்கேற்பத் தலையை வெட்டி உயிரிழக்கும் அறியாமையில் மூழ்காமல் தலைக்கேற்றவாறு தொப்பியை வடிவமைத்துக் கொண்டனர். இங்குள்ள சிலரோ இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறிக் கொண்டு தொப்பிக்கேற்றவாறு தலையைச் சிதைக்க வேண்டும் என்கின்றனர். எனவே, வரி வடிவ எண்ணிக்கைக்கும் தமிழ்க் கல்வி குறைந்துபோவதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல,உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கும் இந்தியக் கூட்டரசிற்கும் உள்ளன. கடமையில் இருந்து தவறும் அரசுகளைக் கண்டிக்காமல் வரிவடிவ எண்ணிக்கையினால்தான் தமிழ் பயில்வோர் குறைவதாகக் கூறுவது ஏதோ தமிழ்ப் பற்றின் காரணமாக வரிவடிவச் சிதைவை வலியுறுத்துவதாக எண்ண வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு அல்ல.(எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா? : இலக்குவனார் திருவள்ளுவன்)

திபேத்திய மொழி, சீன மொழி, சப்பானிய மொழி முதலான மொழிகளில் கருவிகளைத் தங்கள் மொழிவடிவேற்கேற்ப அமைத்த அறிவார்ந்த பாங்கை விளக்குவதற்காக  விசைப்பலகைப் படங்கள்  தரப்பட்டுள்ளன.

இவையும் மொழிப்பயன்பாட்டிற்காகத்தான் கருவிகளே தவிர கருவிகள் பயன்பாட்டிறக்காக மொழியல்ல என்பதை நன்கு விளக்கும். எனவே, அடிப்படை எழுத்துகள் 31 மட்டுமே உள்ள தமிழ்மொழியின் வரிவடிவ எண்ணிக்கையைக்காட்டி வரிவடிவச் சிதைவுமுயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.

“மாறுவது என்பது இயற்கை; எனவே, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதுவரை எத்தனையோ முறை மாறியுள்ள வரிவடிவத்தை இப்பொழுது மாற்றினால் என்ன?” என்பது போன்ற வாதங்களைச் சிதைவாளர்கள் எடுத்து வைக்கின்றனர். காலந்தோறும் கல்வெட்டுகளில் வரிவடிவங்கள் மாறி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் வரிவடிவம் மிகத் தொன்மையான காலத்தில் இருந்து மாறாமல் வந்துள்ளது. பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முதலானோர் இக்காலச் சுருக்கெழுத்துபோன்ற கல்வெட்டு வடிவங்கள் வேறு என்றும் பெரிதும் இவை தமிழறியா அயலவர்களால் செதுக்கப்பட்டவை என்றும் கூறுவர். தமிழ் இலக்கண நூல்களும், ‘தொல்லை வடிவின எல்லா எழுத்தும்’ எனக் கூறுகின்றன. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 – இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. எனினும் முதன் முறையாக, வீரமாமுனிவர் காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமது அறுவகை இலக்கணம் என்னும் நூலில் எகர ஒகர வடிவங்களில் புள்ளி நீக்கி எழுதப்படுவது குறித்துத் தெரிவித்துள்ளார். இகரத்தைச் சுழித்து ஈகாரம்ஆக்குதல் கூட்டெழுத்துகள் முதலான பிற பற்றியும் இந்நூலில் தெரிவித்திருந்தாலும் பரவலாக ஏற்கப்படாமை குறித்தும் கூறியுள்ளார். எனவே, உள்ளபடியே பிற வரிவடிவங்கள் காலந்தோறும் மாறிவந்திருந்தன எனில் இலக்கண ஆசிரியர்கள் அவை குறித்துக் கூறாதிருந்திருக்க மாட்டார்கள். ஆதலின் வரிவடிவங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன எனச் சிதைப்பாளர்கள் கூறுவது அறியாமையின்பாற்பட்டதே.

ஓலைச் சுவடிகளைக் காலந்தோறும் படியெடுத்து வந்துள்ளனர். சிதைப்பாளர்கள் கூறுவதுபோல் வரிவடிம் மாறியிருப்பின் வெவ்வேறுவகையான ஓலைச்சுவடிகள் நமக்குக்கிடைத்திருக்க வேண்டும். அறிஞர் சி.வை.தாமோதரனார், அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் தாம் ஓலைச் சுவடிகளை அச்சுவடிவமாக்கப்பட்ட இன்னல்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இவற்றையும் குறிப்பிட்டிருப்பர். ஆனால் பாட வேறுபாடுகள் இருப்பினும், எழுத்து முறையில் மாறுபட்ட ஓலைச்சுவடிகள் இல்லாமையே எழுத்து வடிவம் மாறாதிருந்துள்ளது என்பதற்குத் தக்க சான்றாகும்.

எழுத்துச் சிதைப்பாளர்கள் சிலர் பெரியார் முகமூடி அணிந்து கொண்டு எழுத்துச் சிதைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தேட முயல்கின்றனர். பெரியார் அன்பர்களும் பெரியாரின் பிற கொள்கைகளைப் பின்பற்றாத இத்தகையோரின் கூற்றுக்களை நம்பி வரிவடிவ மாற்றம் தேவை என நம்புகிறன்றனர். தந்தை பெரியார் அவர்கள் அச்சுப்பணியில், எழுத்துவடிவில் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது ஆகாரங்களுக்கு ஒன்றுபோல் துணைக்காலைப் பயன்படுத்தியும் ஐகாரங்களுக்கு ஒன்றுபோல் இரட்டைக் கொம்பினைப் பயன்படுத்தியும் வந்தார். ஆனால், அவர் எழுதும்பொழுது இம்முறையைப் பின்பற்றவில்லை என்பதைத் தமக்கு எழுதிய மடலைச் சான்றாகக் கொண்டு மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கியுள்ளார்கள். பகுத்தறிவு, தன்மான உணர்வு, இன உணர்வு முதலானவற்றில் பெரியார் பாதையில் செல்லாதவர்கள்தாம், பெரியார் வாழ்ந்தபோதும் அவரது கொள்கைகளுக்காக அவர் பின்னர் அணிவகுக்காதவர்கள்தாம் இப்பொழுது பெரியார் வழியில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதாகக் கூறுகின்றனர். எழுத்துச் சிதைப்பைப் பெரியாரின் இலக்கு எனத் தவறாக எண்ணும் பெரியார் அன்பர்கள் சிலரும் ஏமாற்றப்பட்டு இப்பாதையில் பார்வை செலுத்துகின்றனர். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு உடன்பாடானவர் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

  தந்தை பெரியார் அவர்கள், எழுத்தைச் சிதைக்கவுமில்லை; புதிய குறியீடு எதையும் புகுத்தவுமில்லை. நடைமுறையில் உள்ள குறியீடுகளின் அடிப்படையில் ஒன்று போல் அமைக்கலாம் எனக் கருதி அவர் அதனை அச்சில் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் மெயில் என்னும் ஆங்கில நாளேடு தமிழ்ச்சிதைவு முயற்சியில் ஈடுபட்டபொழுது அதற்கு மறுப்பாகப் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய மறுப்பு மடலைத் தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ளார் என்பதில் இருந்தே பேராசிரியரின் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்துகள்தாம் தந்தை பெரியாருக்கு உடன்பாடானவை எனப் புரிந்துகொள்ளலாம்.

  இதே போல் திராவிட இயக்கப் பாவலரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1.2.1950 அன்று எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான கருத்தைப் பாடல்களில் பின்வருமாறு பதிந்துள்ளார்.

தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வது எதற்கு எனில்
தமிழன் நிலத்தைச் சுரண்டித்
தமது நிலையினை உயர்த்த வடவரின் உள்ளம் இதுதான்

சீர்திருத்தம்

எழுத்துத் திருத்தத்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துக்களைச் சீர்திருத்தும் ஆர்வலர்க்கு ஓர் விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்?
பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்
ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர்பெரியார் திருத்த்த்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!
கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்களது சீர்திருத்தம்?
தோல்விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?
மக்களெல்லாம் தாய் மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்கு
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கஒரு தகுதியினைப் பெற்றார்போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!

பெரியார் காலத்தில் அவர் பின்பற்றி வந்த வரிவடிவ மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பெரியார் அன்பரான முனைவர் பொற்கோ அவர்களும் இன்றைய கணினிஉலகச் சூழலில் உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச் சிதைவு தேவையில்லை என்றும் தமிழ் மொழியின் வரிவடிவங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (புதிய தலைமுறை (வார இதழ்), நாள்: மே 13, 2010). ஆதலின், தந்தை பெரியார் இன்றிருந்தால் இத்தகைய வரிவடிவச் சிதைவு முயற்சி இந்தியா முழுவதும் ஒரேமொழி – ஒரேவடிவம் என்பதற்கான பாதை எனப் புரிந்துகொண்டு கடுமையாக எதிர்த்திருப்பார்.

இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இல் மொழியையும் எழுத்து வடிவத்தையும் பேணிக்காக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவேதான் சமற்கிருதத்தில் 500க்கு மேற்பட்ட வரிவடிவம் இருப்பினும் பிற இந்திய மொழிகளில் வரிவடிவ எண்ணிக்கை 500க்குச் சற்றுக் குறைவாக அல்லது சற்றுக் கூடுதலாக அமைந்திருப்பினும் சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அறிவியல் முறையில் சீராகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழியிலும் வரிவடிவ நிலைப்பே தேவை. ஆதலின், அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக வரிவடிவச் சிதைவினை வலியுறுத்துவோர்க்குத் தண்டனை வழங்கவும் இத்தகைய படைப்புகளைத் தடை செய்யவும் நம் அரசு முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஒலிவடிவமாகிய உயிரைக்காக்க
வரிவடிவமாகிய உடலைப் பேணுவோமாக!
தமிழ் மொழியைக் காக்க, மொழிவழி தமிழ் இனத்தைக் காக்க
நாம் நமது வரிவடிவத்தைக் காப்போமாக!

 eahuththaikaappoam_nandri

ilakkuvanar_thiruvalluvan+9 – இலக்குவனார் திருவள்ளுவன்