கரு.அழ.குசேகரன் - k.a.gunasekaran

வல்லிசையின் எளிய பறவை

  கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட எங்கள் பேச்சில் மீண்டும் அவரது அதே பாடலைப் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும்.

  விடிந்ததும் மாலதி மைத்திரி முகநூல் வழியாகச் செய்தி அறிந்து என்னிடம் சொன்னார், திகைப்போடும் அதிர்ச்சியோடும். உதட்டுக்குக் கொண்டுபோன தேநீர்க் கோப்பை மின்னல் தாக்குதலைப்போலத் தளும்பிச் சரிந்தது என் உடலின் மிகுதியான நடுக்கத்தால். இப்பொழுது வரை என்னால் அத்திகைப்பிலிருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து இரு நாட்களாக அவரது பாவும் வாழ்வும் நினைவுமாகவே கழிந்தன. மூன்றாம் நாள் அவர் இல்லை. பறந்து போன அப்பறவை பேராசிரியர்.கே.ஏ.குணசேகரன் என்னும் பெயர் கொண்டது. தன் இறுதிப் பறத்தலை எப்படி முன்னுணர்ந்து அன்பானவர்களின் உயிர் வழியாக உள்ளிறங்கித் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுச் சென்றது என்னும் என் கேள்விக்கு இதுவரை பதிலில்லை. பகுத்தறிவும் மருத்துவமும் அறிவியலும் சற்றே இளகுவது இம்மாதிரி அரிதான தறுவாயில்தான்.

  காலத்தின் பெருமதிப்பில் உயர்ந்த தடங்கள் குமுகத்தின் (சமூகத்தின்) இன்மைகளை நிறைவாக்கவே எப்பொழுதும் முயற்சி செய்கின்றன. அவற்றின் முனைப்புகளும் அசைவுகளும் குமுக (சமூக) மாற்றத்தின் தேவை கருதியே நடக்கின்றன. வாழ்வின் பெரும் பாரங்களையும் தன் வெளிப்பாடாக மாற்றி அவற்றைக் குமுகத்தின் தேவைக்கானவையாக மாற்றிவிடுகின்ற வல்லமை அத்தகைய தடங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வரலாற்றின் பக்கங்களில் அவை அழிக்கவியலாத் தன்மையுடையவையாக நிலைத்துவிடுகின்றன. அத்தகைய நிலைப்புகள் அடுத்த முன்னெடுப்புகளிலும் நகர்வுகளிலும் தொடர்ந்த செயல்பாட்டினைக் கொண்டிருக்கும் என்பது நாம் அறிந்திருக்கும் உண்மையாக இருக்கிறது.

  அப்படிப்பட்ட ஆளுமையாகப் படிநிலை எய்தியவர்; சிவகங்கை அருகே உள்ள மாறந்தை ஊரில் எளிமைக் குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக மாறி முதல் தலைமுறையிலேயே உயர்ந்த இடத்தை அடைவது சாதிய இறுக்கங்களும் ஒடுக்குமுறைகளும் மதிப்புக்குறைப்புகளும் நிறைந்த இந்தக் குமுக அமைப்பில் எளிமையானதன்று. அத்தகைய தடைகளைத் தகர்த்து அவரால் தன்னை வெளிப்படுத்த முடிந்திருக்கிறதென்றால் அவருக்குள் இருந்த வேட்கையும் விடுதலை உணர்வும்தான் காரணம்.

  ஒருமுறை பாண்டிச்சேரியில் அவருடனான சந்திப்பில் இளமையில் அவருக்கு நேர்ந்த சாதி சார்ந்த வன்தாக்குதல்கள் குறித்து விளக்கியபொழுது அவர் நிகழ்த்தும் எதிர்ப்பரசியலின் களமும் ‘எங்காண்ட…’ எனத் தொடங்கும்பாடலின் மூலமும் தெரிந்தன.

  நாட்டார் கலையின் மரபார்ந்த அறிவின் செறிவும் அவற்றின் வெளிப்பாட்டுப் பாங்கும் கே.ஏ.குணசேகரனின் வலிமைகளாக இருந்தன. ‘வாகான ஆலமரம்’ என அவர் தொடங்கும் பாடல் எல்லாப் பாட்டு முயற்சிகளையும் விட உயிரில் ஊறிவிடும் ஆற்றல் வாய்ந்தது. ‘ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி’ என ஒப்பாரியில் தொடங்கும் அந்தக் குரல் கேட்போரை அழ வைக்கும். கத்தும் குருவி கவலைப்படாமல் தன்மேல் இறுகியிருக்கும் வலையை அறுக்கும் ஆற்றலைப் பெற்றுவிடும். மக்கள் பாவலர் இன்குலாப்பின் ‘மனுசங்கடா’ என்ற பாடல் ஒடுக்கப்பட்டோரின் நாட்டுப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு கே.ஏ.குணசேகரனின் பாட்டுத்திறமே காரணம். தவில், பறைபோன்ற தோல் கருவிகள் மேடை ஏற்றப்படுவதற்கு முதன்மைக் காரணமாக அவர் இருந்தார். பல்வேறு நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் உருவாவதற்கு மூலமாக இருந்திருக்கிறார். நாட்டார் பாடல் வடிவில் குமுகப் பாடல்களை உருவாக்கி அதன் மூலம் விடுதலைக் கருத்தியலை முழக்கும் மேடைகளில் அவர் இல்லாமலேயே அவர் பாடல்கள் இசைக்கப்படும் உயர்வெய்தினார்.

  நாடகத்துறையில் அவரின் ‘பலியாடுகள்’ நாடகம் மிகவும் ஆழமானது. ஒடுக்கப்பட்டோர் ஓர்மையின் அடையாளமாக அது வெளிப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியன. நடத்திய சொற்பொழிவுகள், பல அரங்குகளில் அவர் அளித்த ஆய்வுக்கட்டுரையில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான இயலுமைகளை (சாத்தியங்களை) உண்டு பண்ணியவை.

  இவை அனைத்திற்கும் தேவையான தரவுகளை அவர், அவரின் வாழ்விலிருந்தே எடுத்துக் கொண்டார் என்பதுதான் அவரின் அனைத்துப் படிநிலைகளுக்கும் அடிகோலாக இருந்தது. ஒடுக்கப்பட்டோர் கலை, அரசியல் இவை கலந்த பண்பாட்டின் சுவடாக அவர் இருந்தார். அவரின் எழுத்துகள், பணி ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டைப் பொதுப்பண்பாட்டின் கூறாக மாற்ற வேண்டும் என்னும் ஊக்கத்துடனே இருந்தன.

 மராத்திய ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் ஆகப் பெரும்பேறாக இருந்த தன்வரலாறு (சுயசரிதை) தமிழ் இலக்கிய வகைமையில் இல்லை என்ற குறையைத் தன் ‘வடு’ என்னும் தன்வரலாறு மூலம் தீர்த்து வைத்தார். வடுவில் பதியப்பட்ட அவரின் வாழ்க்கை, மையத்தை நோக்கி நகரும் ஒடுக்கப்பட்டோர் ஒருவரின் வாழ்வாக இருந்தது.

  இசை, நாடகம், எழுத்து, பணி என்னும் எல்லாத் தளங்களிலும் பண்பாடு சார்ந்து தன் பங்களிப்பைச் செய்ததன் மூலம் இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி, மனித வரலாற்றிலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டோர் குமுகம் தன் அறிவார்ந்த முன்னோடிகளில் ஒருவராக அவரைப் பெரிதும் மதிக்கிறது.

  வரலாற்றின் வழி நெடுக இத்தகைய பண்பாட்டுப் போராளிகள் விடுதலைப் பெருவழிகளில் தொடர்கிறார்கள்; அவர்களில் தமிழ்ச்சூழலில் மிக முதன்மையானவராக கே.ஏ.குணசேகரன் மிளிர்கிறார்.

  இப்படி வலுவான இசையின் மூலமாகவும் மாற்று நாடகங்கள் மூலமாகவும் சாதிய நாற்றமெடுக்கும் நஞ்சான குமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மனித விடுதலைக்காக ஓயாமல் பாடிய ஒரு பறவை திரும்ப முடியாத இடத்திற்கு மூன்றாம் நாள் பறந்துவிட்டது. அந்த வல்லிசையின் எளிய பறவைக்குத் தெரியுமா தான் முதல் நாளே உயிர்த்தெழுந்தது பற்றி?

புலவர் சுகிர்தராணி - sukirtharani

– புலவர் சுகிர்தராணி

sukiertharani@yahoo.co.in

காலச்சுவடு.

அட்டை-காலச்சுவடு, பிப்.2016 - attai_kalachuvadu_feb2016

 

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02