நாள்மீன் அடிப்படையில் பெயர்

சூட்டுவது தமிழர் மரபா?

இப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைத் தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம்.

அஃதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 உடுக்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் உடுவுக்கும் உரியவையாகச் சில எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துகளில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும் நம் மக்கள் அப்படிப்பட்ட பெயர்களை இணையத்தில் தேடித் துழாவுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்துகளில் பெயர் கிடைக்காவிட்டால் அவற்றுக்கு மாற்றாகச் சோதிடம் பரிந்துரைக்கும் தொடர் எழுத்துகளிலாவது கிடைக்குமா எனத் தவிக்கிறார்கள்.

இப்படி உடு எழுத்தில் பெயர் வைப்பது தமிழ் மரபா?
இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?

இதோ, பார்க்கலாம்!

தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்!
இது தமிழர் வழக்கமா என்பதை நாம் அறிய வேண்டுமானால் பண்டைக் காலம் முதல் அண்மைக்காலம் வரையான பலரின் பெயர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆனால் அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவெனில், நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களைப் பற்றியவைதாம்; வரலாற்றிலோ மன்னர்களின் பட்டப்பெயர், பட்டமேற்புப் (பட்டாபிசேகம்) பெயர் போன்றவைதாம் காணப்படுகின்றனவே தவிர இயற்பெயர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இயற்பெயர் தெரிந்த மன்னர்கள் அல்லது மன்னரல்லாத பிறர் பற்றிய விவரங்களிலோ அவர்களின் பிறந்த உடு பற்றிய குறிப்பு இல்லை. இரண்டு விவரங்களும் ஒன்றாய்க் கிடைப்பது மிக மிகச் சிலரைப் பற்றித்தாம். அப்படிச் சிலரின் பெயர்களைப்பற்றி மட்டும் இங்கு காண்போம்.
முதலாம் இராசராச சோழன்:
தமிழ் இனத்தின் வீரம், பெருமை, பெருந்தன்மை போன்ற பலவற்றையும் உலகெங்கும் கொண்டு சேர்த்த மாபெரும் தமிழரசர். அதே நேரம், தமிழர் வீழ்ச்சிகள் அனைத்துக்கும் மூலக் காரணமான பார்ப்பனியப் பண்பாட்டுத் திணிப்பைத் தொடக்கி வைத்தவர் என்று சொல்லப்படுபவரும் கூட. இவரது இயற்பெயர் அருள்மொழி வருமன். பிறந்த உடு சதயம்; இதற்குச் சான்றாகத் தஞ்சைப் பெரிய கோயிலில் இன்றளவும் இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சதய உடுவுக்கான எழுத்துக்கள் கோ, ‘ஸ, ஸி, ஸு‘. தொடர் எழுத்துகள் தோ, தௌ. ஆனால் இவர் பெயரோ இவற்றுள் எதிலுமே இல்லாமல் ‘அ’வில் தொடங்குகிறது. ஆக, ஆனானப்பட்ட மாமன்னன் இராசராச சோழனின் பெயரே உடு முறைப்படி வைக்கப்பட்டது கிடையாது.

விக்கிரமச் சோழன்:
புகழ் பெற்ற இன்னொரு சோழ மன்னர். பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் இயற்றிய ‘மூவருலா’ எனும் தொகுப்பில், இவருக்காகப் பாடப்பெற்ற ‘விக்கிரமச் சோழன் உலா’தான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக வரலாறுகளில், அரசரின் இயற்பெயர் தெரிந்தால் அதைக் குறிப்பிடுவார்கள்; தெரியாவிட்டால் தெரியவில்லை என்றாவது குறிப்பிடுவார்கள். ஆனால் இவரைப் பற்றிய எந்த வரலாற்றுப் பதிவிலும் இந்த இரண்டுமே இல்லை; விக்கிரமச் சோழன் எனும் பெயரேதான் இயல்பாக முழுவதும் ஆளப்படுகிறது. எனவே இவருடைய சொந்தப் பெயரே இதுதான் என உணரலாம். இவரது பிறந்த உடு உத்திராடம்.

உத்திராடத்துக்கான எழுத்துக்கள் பே, போ, ‘ஜ, ஜி‘. தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ, ஔ. ஆனால் இவர் பெயர் தொடங்குவதோ வி எனும் எழுத்தில். ஆக இவர் பெயரும் உடுவின்படி அமைந்தது இல்லை.

திருமங்கையாழ்வார்:

பன்னிரண்டு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. சோழ மன்னனின் படைத்தலைவராக விளங்கிய இவர் வீரத்தை மெச்சி அரசன் இவரைத் திருமங்கை எனும் குறுநிலப் பகுதிக்கு அரசனாக்கி அழகு பார்த்தான். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலன் எனவும், கலியன் எனவும் இருவேறாகக் கூறப்படுகிறது. இரண்டில் எது சரி என்பது குறித்து நமக்குக் கவலையில்லை; இரண்டுமே உடு எழுத்துப்படி அமையவில்லை என்பதே இங்கு கவனத்துக்குரியது. இவர் பிறந்த உடு கார்த்திகை. இதன் எழுத்துக்கள் அ, இ, உ, எ; தொடர் எழுத்துகள் ஆ, ஈ. ஆக இவரும் பிறந்த உடு எழுத்துக்குரிய முறையில் பெயரிடப்படவில்லை.

ஆண்டாள்:
அறிமுகமே தேவைப்படாதவர்! திருப்பாவைபற்றிக் கேள்விப்படாதவர்கள் தமிழுலகில் யாரும் இருக்க முடியாது. அப்படி யாராவது இருப்பினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக அவர்களுக்கும் இவர் அறிமுகமாகியே இருப்பார்.

தமிழின் தனிப்பெரும் பெண் புலவர்களில் ஒருவர். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றித் தொழப்படுபவர். இவர் பெரியாழ்வாரால் துழாய்ப் (துளசி) புதரில் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைதான் என்றாலும் இவர் பிறந்த உடு பூரம் என்றுதான் கூறப்படுகிறது. கோயில்களில் ஆண்டாள் திருப்பிறப்பு (அவதாரம்) விழாக்களும் சிறப்புப் பூசைகளும் பூர உடு நாளில்தான் காலங்காலமாக நடைபெறுகின்றன. இவருக்குப் பெரியாழ்வார் சூட்டிய பெயர் கோதை. ஆனால் பூரத்துக்கான எழுத்துகளோ மோ, ட, டி, டூ; தொடர் எழுத்துக்கள் மொ, மௌ.
ஆக, நட்சத்திர நம்பிக்கை கொண்ட பிராமணரான பெரியாழ்வாரே தம் மகளுக்கு உடு எழுத்துப்படி பெயரிடவில்லை என்பது வெகுவாகக் கவனிக்கத்தக்கது!

கண்ணதாசன்:
வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்காமல் கொஞ்சம் அண்மைக்காலத்தையும் பார்க்கலாமே என்பதற்காகக் கவியரசரைத் தேர்ந்தெடுத்தேன்.
இலக்கிய நயமிகு கவிதைகளைத் திரையிசையிலும் கொடுக்க முடியும் எனக் காட்டிய பெருங்கவிஞர். அசுவினி உடுவில் பிறந்த இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ஆனால் அந்த உடுவின் எழுத்துகளோ சு, சே, சோ, ல; தொடர் எழுத்துகள் செ, சை.

ஆக அரசர் காலம் முதல் அண்மைக்காலம் வரை புகழ் பெற்ற பெருமக்கள் யாருமே பிறந்த உடுவுக்குரிய எழுத்தில் தொடங்கும்படி பெயர் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. பொதுமக்களில் கூட எல்லாரும் குப்பன், சுப்பன், மாயாண்டி, முனியாண்டி, செல்லம்மாள், பொன்னம்மாள் எனத் தெய்வப் பெயர்களையும் அழகியல் பெயர்களையுமே அதிகம் சூடியிருந்தனர் கடந்த தலைமுறை வரை. சொல்லப் போனால், இவற்றில் சில பெயர்களின் தொடக்க எழுத்துகள் உடு எழுத்துகளின் பட்டியலிலேயே இல்லை! எடுத்துக்காட்டாக ஐயனார், சூரியா, நெல்லையப்பன், பெரியநாயகி – இவையெல்லாம் அதிகம் காணக்கூடிய பெயர்கள்தாம். ஆனால் இவற்றின் தொடக்க எழுத்துகள் உடு எழுத்துகளின் வரிசையிலேயே கிடையா.

ஆகவே உடு எழுத்தின்படி பெயரிடுவது என்பது மிக மிகப் பிற்காலத்தில் தோன்றிய வழக்கமே! தவிர, கிரந்த எழுத்துக்களிலும் டகர வரிசை, ரகர வரிசை எனச் சொல்லின் தொடக்கத்தில் வர முடியாத எழுத்துகளிலும் பெயர் சூட்டப் பரிந்துரைப்பதிலிருந்தே இந்த உடு எழுத்துப் பெயரிடல் முறை கண்டிப்பாகத் தமிழருடையதில்லை என்பதை நாம் உணரலாம்.

அப்படியானால், தமிழர் பெயரிடல் முறைதான் என்ன? பார்க்கலாம் வாருங்கள்!
தமிழர்களின் பெயரிடல் மரபு
தமிழர்களின் பெயர் சூட்டும் முறை மிக மிக எளிமையானது. தாத்தா – பாட்டியின் பெயரையே குழந்தைக்கும் வைத்து விடுவதுதான் அது. தன் அம்மா – அப்பாவின் நினைவாக அவர்கள் பெயரையே தம் பிள்ளைக்கும் சூட்டி மகிழ்வது ஆதி காலம் தொட்டே தமிழர் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் அந்த உறவுமுறையின் பெயரையே காட்டலாம்! ஆம், தாத்தாவின் பெயருக்கு உரியவன் என்பதால்தான் அவன் ‘பெயரன்’; பாட்டியின் பெயருக்கு உரிமையுடையவள் என்பதால்தான் அவள் ‘பெயர்த்தி’! இந்தச் சொற்கள்தாம் காலப்போக்கில் மருவிப் பேரன், பேத்தி என்று ஆயின என்பது பலரும் அறிந்ததே.

தவிர, அவரவர் குலத்தெய்வங்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டு. கருப்பசாமி, செல்லத்தாயி, சாத்தப்பன், மாரியம்மாள் என 90-கள் வரை கூட நாம் பெயர் வைத்துக் கொண்டுதான் இருந்தோம் (‘மாரி’ என ஒரு திரைப்படம் கூட அண்மையில் ஒன்றுக்கு இரண்டு பாகங்களாக வெளிவந்தது!). இந்தக் குலத்தெய்வங்கள் யார் என ஆராய்ந்து பார்த்தால் எல்லாருமே அந்தந்தப் பகுதியையோ குடும்பத்தையோ சேர்ந்த முற்கால உறுப்பினர்களாகத்தாம் இருக்கிறார்கள்.
ஆக, முன்னோரின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டுவதே தமிழர் மரபு! இப்படி முன்னோரைப் போற்றுதல் என்பது தமிழர் வாழ்வியலின் பல இடங்களில் பண்பாட்டின் முதன்மைக் கூறாக இருந்திருக்கிறது; இருந்து வருகிறது. தமிழர் சமயமே கூட முன்னோரைப் போற்றுவதாகத்தான் இருந்திருக்கிறது. கடவுள் என்பவர் எங்கோ வானுலகில் இருந்தபடி நம் எல்லாரையும் ஆட்டி வைப்பவர் என்றே உலக மக்கள் அனைவரும் நம்பி, அதன் அடிப்படையிலேயே தங்கள் சமயத்தை வகுத்து வைத்திருக்க, நம்மிடையே நமக்காக வாழ்ந்தவர்களும் உயிர் விட்டவர்களுமே கடவுள் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பே பகுத்தறிவுக்கு உகந்த சமயக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து வந்தவர்கள் தமிழர்கள்! முன்னோரைப் போற்றும் அந்த வழக்கத்தின் ஒரு பகுதியாகவே தமிழர்களின் இந்தப் பெயரிடல் முறையையும் கருத வேண்டியுள்ளது.

இதுதான் தமிழர் பெயரிடல் மரபு என்பதற்கு ஆதாரமாகத் துணை வருகிறது தமிழின் தலைசிறந்த வரலாற்று நூலான சிலப்பதிகாரம்! கோவலன் தன் மகளுக்கு வைத்த மணிமேகலை எனும் பெயரே அவரது குலத்தெய்வத்தின் பெயர்தான் என்கிறார் சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்பி, அதனால் ‘சிலம்புச் செல்வர்’ என்றே பட்டம் பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்கள் (பார்க்க: மணிமேகலையின் பிறப்பு – ம.பொ.சி.).

ஆனால் தொன்று தொட்டு வந்த இந்தப் பெயரிடல் முறை பின்னாளில் சற்றே மாறியது. குழந்தை பிறக்க அல்லது மகப்பேறு (பிரசவம்) நல்லபடியாக நடக்கக் குலத்தெய்வமல்லாத வேறு ஏதேனும் ஒரு கடவுளைக் கூட வேண்டிக் கொண்டு, வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அந்தக் கடவுளின் பெயரையே வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாலாசி, சபரி, சாய், வெங்கட், வேளாங்கண்ணி போன்றவை இதன் எடுத்துக்காட்டுகள்.

இவை தவிர பழனி, தில்லி, சிதம்பரம் என ஊர்களின் பெயரைப் பிள்ளைக்கு வைக்கும் விந்தையான வழக்கமும் இருந்திருக்கிறது. பழந்தமிழ்க் கதைகள் எதிலும் இப்படிப்பட்ட பெயர் கொண்ட கதை மாந்தர்களை நாம் காண முடியவில்லை. எனவே இதுவும் மிகப் பிற்காலத்தில் தோன்றிய வழக்கம்தான்.

இப்படி முன்னோர் பெயர், கடவுள் பெயர், ஊர்ப் பெயர் போன்றவற்றையெல்லாம் அப்படிக்கப்படியே பிள்ளைகளுக்குச் சூட்டும் இந்த முறைகள், குழந்தை பிறந்த உடுவையெல்லாம் பொருட்படுத்தும் வழக்கமே தமிழர்களுக்கு இருந்ததில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன.

சரி, அந்தக் காலத்தில் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதற்காக இன்றும் அதையே தொடர வேண்டுமா என்று கேட்டால், இல்லைதான். வழக்கங்கள் மாறுதலும் மரபுகள் மீறுதலும் வரவேற்புக்குரியவைதாம். ஆனால் அவை இயல்பானவையாக, மக்களுடைய ஆர்வத்தின் அடிப்படையிலானவையாக இருக்க வேண்டும். உடு எழுத்தின்படி பெயர் வைத்தால்தான் நல்லது என மூடநம்பிக்கையின் பெயரால் ஏற்படுவது நல்ல மாறுதல் இல்லை. தாய்மொழியில் எழில் கொஞ்சும் பெயர்கள் எத்தனையோ இருக்க, பெற்றவர்கள் தங்கள் விருப்பம் போல் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாமல் யாரோ ஒரு சோதிடன் கொடுக்கும் ஓரிரு எழுத்துகளுக்குள் பெயர் தேடித் தவிப்பது பண்பாட்டு மாற்றம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உடு எழுத்துப்படி பெயர் வைப்பதுதான் தலைமுறை தலைமுறையாக நம் வழக்கம் என அண்டப் புளுகு சொல்லி இதை மக்கள் தலையில் சுமத்துவது பச்சையான பண்பாட்டுத் திணிப்பு!

இப்படி எத்தனையோ திணிப்புகளையும் திரிப்புகளையும் ஏற்று ஏற்றுத்தான் நம் சொந்த அடையாளங்கள் பலவற்றையும் இழந்து விட்டு நிற்கிறோம். எனவே மிக அண்மையில் முளைத்திருக்கும் இந்தத் திணிப்பையாவது தமிழர்கள் நாம் இப்பொழுதே கிள்ளி எறிவோம்!

உலக மக்கள் எல்லாரும் எத்தனையோ மொழிகளைக் கற்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் தங்கள் பெயரை யாரும் வேற்றுமொழியில் வைத்துக் கொள்வதாய்த் தெரியவில்லை. உடு எழுத்தில் பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று நாம்தாம் கூச்சமே இல்லாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
அதற்காக, எல்லாரும் அவரவர் பெற்றோர் பெயரையோ குலத்தெய்வப் பெயரையோதான் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. வடமொழியிலிருந்து இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒயிலான (stylish) பெயர்களுக்கெல்லாம் அறைகூவல் விடுக்கும் வகையில் புதுமையான பெயர்கள் இன்று தமிழிலும் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றைச் சூட்டுங்கள்! வாடாத் தமிழில் குழந்தையை வாயார அழைத்து மகிழுங்கள்!

சியார்சு ஆர்ட்டு, அசுகோ பார்போலா போன்ற எத்தனையோ வெளிநாட்டினர் தமிழுக்காக எவ்வளவோ செய்கிறார்கள். தமிழர்கள் நாம் இதையாவது செய்யலாமே?

இ.பு.ஞானப்பிரகாசன்
தினச்செய்தி, 31.07.2019