ஒற்றுமையால் ஒடுக்குவோம்! 

 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே என்பர். குழந்தைகளும், தெய்வச் சிலைகளும் திருடப்படுவதும், விலைக்கு விற்கப்படுவதுமாகிய நிகழ்வுகள் நாடெங்கும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற குற்றங்கட்குத் தண்டனை விரைவில் கிடைத்து விடும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாமற் போனது. அண்மையில் மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற ஐந்து அகவைச் சிறுமி, அரசு மருத்துவ மனைமுன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஐந்து பேர் கொண்ட குழு அக்குழந்தையைக் கடத்திச் சென்று மகப்பேறு இல்லாத் தம்பதியருக்கு விற்று விட்டதாகவும் அறிந்தோம்.

காவல்துறை நடவடிக்கை சரியின்மையால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் அக்குழந்தையின் பெற்றோர் வழக்குத் தொடுத்ததில் நீதிமன்றமே வழக்கை விசாரித்துத், தனிப்படையின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தையைக் கண்டுபிடித்துப் பெற்றோரிடம் ஒப்படைத்தது என அறிந்து மகிழ்ந்தோம்.

 இது நிரந்தர மகிழ்வல்ல. இது போன்ற கடத்தல் தொழில் நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் மிகப்பெரிய பாதகச் செயலாகி, சமுதாயத்தை, குறிப்பாகப் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 நம் நாட்டில் பண்டைக் காலத்தில் பெண் குழந்தைகள் மணலில் வீடு கட்டுவார்கள். ஆண் பிள்ளைகள் அம்மணல் வீடுகளை அழித்து விளையாடுவர் என்று இலக்கியங்களால் அறிய வருகிறோம்.

 ஆனால் தற்காலத்தில் குழந்தைகட்கு சிறு வயதில் ஓடி விளையாடக்கூட பாதுகாப்பும் உரிமையும் இல்லை. இல்லத்தில் எந்நேரமும் அடைபட்டு, காற்றோட்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் உடல் உறுதியுடன் இருக்காது. மனத்தளவிலும் பாதிக்கப்படுபவர். நெல்லையில் இரண்டு வயது குழந்தை கடத்தப்பட்டு, கண்காணிப்புப் படப்பொறி மூலம் கண்டு பிடித்ததாக அறிகிறோம்.

  பெரும்பாலும் நகரங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து விலகி, பலர் தனிக்குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர். பெற்றோர், அவர்களின் மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகள், அவர்களது குடும்பம் என ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படும்.
அக்கூட்டுக் குடும்ப முறைகளில் பல நன்மைகள் இருந்தன. இடவசதியின்மை, உடன்பிறப்பிற்குள் ஒற்றுமையின்மை என்ற பல காரணங்களால் கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற தனிக்குடும்பம் என்ற முறையே பரவலாக இன்று காணப்படுகின்றன.
அக்காலத்தில், மகளிர் பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், குழந்தைகளைப் பேணுவதற்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தனர். தனி மரம் தோப்பாகாது! தனி மலர் மாலையாகாது! கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து வாழும் கூட்டு வாழ்க்கை சிறப்பான ஒன்றாக இருந்தது.


 இன்ப துன்பங்களில் இணைந்து பங்கேற்று, பிணைந்து வாழ்வதற்குத்தான் மனிதர்கள் துணையை நாடுவர். உணர்வுகள் காரணமாக மனிதர்களிடையே மாறுபட்ட கருத்துகளும், வேறுபட்ட கொள்கைளும் தோன்றுவது இயற்கை.

 குடும்பத்தில் மனத்தளவில் வேறுபாடுகள் இருப்பினும், ஒருவர்க்குத் துன்பமெனில் அனைவரும் பங்கு கொண்டு உதவிடுவர். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற ஒருமைப்பாடு கொண்ட பரந்த மனப்பான்மையால் விரிந்த நோக்கில் மனிதர்கள், அக்கம் பக்கத்தினருடன் ஒன்றுபட்டிருந்ததால் சமுதாயத்தில் எந்த ஊறும் இன்றி அன்று இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.

இன்றோ, வறுமை, பேராசை, உடல் உழைப்பின்மை, பழி வாங்கும் உணர்ச்சி, பொறாமை, குறுக்கு வழயில் பொருள் ஈட்டல் என்பன புற்றீசல் போல் நாளும் பல்கிப் பெருகியுள்ளன. குழந்தைகளைக் கடத்தி, பொருளீட்டி வாழப் பலரும் தலைப்படுவதும் கொடுஞ்செயல். இச்செயலைக் களைய முற்படுதல் வேண்டும்.

குழந்தைகளை உரிய, தெரிந்த பாதுகாவலருடன் பெற்றோர்கள் வெளியில் அனுப்ப வேண்டும். பள்ளி நிருவாகத்தினரும் பள்ளி நேரங்களில் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை வெளியில் விடக்கூடாது.

பெற்றோர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அதை எடுத்து வருபவருடன் குழந்தைளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பள்ளி நிருவாகம் பள்ளி வாயிலில் குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டிற்குப் போவதை கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 அனைத்துப் பள்ளிகளிலும், பேருந்து, தொடர்வண்டி நிலையங்கள், மக்கள் பெருவாரியாகக் கூடும் இடங்கள், அங்காடிகள் போன்ற இடங்களிலும் கண்காணிப்புப்படப்பொறிகள் பொருத்தப்பட வேண்டும்.

சட்டத்திற்கிணங்கக், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்களா என்பதைக் கணக்கீட்டு முறையில் ஆராய வேண்டும். இ.த.ச.பிரிவு 363, 365 ஆகிய காவல் துறைச் சட்டங்கள் குழந்தை கடத்துபவர்களை கண்டுபிடிக்க செயலாற்றுகின்றன.

  காவல்துறையினரின் கணக்கெடுப்பின் மூலம் இவ்வாண்டில் 2,345 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். என்றும் கடந்த 30 நாட்களில் 193 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் காவல் துறையினர் 75 விழுக்காடுகள் மீட்டு உரிய இடங்களில் சேர்த்து விட்டதாகவும் அறிய முடிகிறது.

திருட்டுக் கும்பல்களைக் கண்டு பிடிக்க காவல் துறை தனிப்படைகள் அமைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவர்கட்குத் தனிப் பயிற்சி வகுப்புகள் வட்டம், மாவட்டம் தோறும் நடத்தி, கடத்தப்பட்டோரை மீட்பதற்கான வழி வகைகளை விரைந்து மேற்கொள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொது மக்களும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.
சமுதாயம் சிறப்புற, அச்சமின்றி நடமாட அனைவரும் இணைந்து ஒற்றுமை யுடன் வாழ்தல் நன்று.

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

தி.வே.விசயலட்சுமி

தினமணி 30.10.2017