ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் – 17
2. ஒளவையார் (தொடர்ச்சி)
ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,’ என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது! ‘மனிதனது ஒவ்வொரு செயலும் தன் எதிர்ச் செயலைக் கண்டே தீரும்,’ எனும் இயற்கையின் சட்டத்தை எவரே உடைக்க வல்லார்? தீயின் சுடர் வானோக்கி எரிவதும், வெள்ளம் கீழ் நோக்கி விரைவதும் போலன்றோ தவிர்க்க முடியாத தன்மையதாய் அவ்வியற்கையின் ஆற்றல் விளங்குகிறது? அதிகமான் மாண்டான். தகடூர் வீழ்ந்தது. வரலாறாகிவிட்ட இச்செய்திகளைப் பின் வரும் பதிற்றுப்பத்து அடிகள் விளங்குகின்றன:
‘பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானொ(டு)
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு‘ [1]
. . . . . . . . . . . . . . . . . . . .
‘வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கியவர்
ஒடுறு கடுமுரண் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலை ‘ [2]
———
[1]. பதிற்றுப்பத்து, 8-ஆம்,பத்து, பதிகம்
[2]. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து, 8-ஆம் பாடல்
———-
வீரமரணமடைந்த அதிகமான் பொன்னுடலம் ஈமச் சிதை ஏறியது. அதிகமானது அருமை மகன் பொகுட்டெழினி நீர் வடியும் கண்களோடும் குருதி கொதிக்கும் நெஞ்சோடும் தந்தையின் சிதைக்குத் தீயிட்டான். உற்றாரும் மற்றாரும், இரவலரும் இல்லோரும், பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் கோவெனக் கதறி அழுதனர். ஈமத்தீச் சுழன்று சுழன்று எழுந்தது; சுடர் விட்டு எரியலாயிற்று. ஒளவையாரின் அருள் உள்ளம் கொதித்துக் குமுறியது. அவர் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றவளைப்போல, துடிதுடித்து அழுது அரற்றினர்.
“அந்தோ! ஈம வெந்தீயே! நீ எந்தை உடலை எரிக்காது போயினும், அன்றி விண்ணுற எழுந்து எரித்து நீறாக்கினும், அவனுடைய ஞாயிறு அன்ன புகழை உன்னால் ஒரு நாளும் எரிக்க முடியாது. அதிகர் கோமானே, அருங்கொடை வள்ளலே, ஆர்வலர் புன்கண் தீர்த்த அருமருந்தே, ஈரநெஞ்சத்தோடு மாரி போல வழங்கிய கருணை முகிலே, நீயின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி என் வாழ்நாள் காணாது இருள் சூழ்ந்து ஒழியட்டும்; உனக்கு உற்றவர், நடுகல் நட்டு நாரால் அரிக்கப்பட்ட மதுவை நீ அருந்து வாயெனக் கருதிச் சிறு கலத்தினின்றும் உகுக்கின்றனர். கோடுயர் மலையுடன் நாடு முழுதும் கொடுப்பினும் கொள்ளாத பண்பினை உடைய நீயோ, இப்புல்லிய மதுத்துளிகளை நுகர்வாய்! ” என்னும் கருத்தமைந்த
‘எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினுங் குறுகுக; குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.’ (புறநானூறு, 231)
இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே;
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’ (புறநானூறு, 232)
என்னும் பாக்கள் ஒளவையாரின் அரற்றலை விளக்குவன.
இவ்வாறு எழுத்தறிவார் இதயத்தையெல்லாம் பாகாய் உருக்கிக் கண்ணீர் பெருக்கெடுத்தோடச் செய்யும் கையறுநிலைப் பாடல்களைப் பாடிய ஒளவையார், அதிகமான் மறைவிற்குப் பின்னும் சிலகாலம் “இன்னும் இறப்பு வரவில்லையே! சேண் உயர் உலகிலேனும் சென்று அதிகமானைக் காணோமோ!” என்ற கலகத்துடனையே வாழ்வை நடத்தியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
அதிகமான் மகன் பொகுட்டெழினி மிக இளையனாயிருந்தான். அதனால், அவனுடன் ஒளவையார் சூழ்ச்சித் துணைவராய்த் தங்கி, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோலனாய்’ அவன் விளங்க, அவனுக்கு உற்ற துணைவராய் விளங்கினார். பொய்யா ஈகைப் பொகுட்டெழினியும் தன் நிழல் வாழ்வோர் துன்ப இருள் சிறிதும் காணாதவாறு ஆட்சி புரிந்தான். மேலும், ‘இசை விளங்கு கவிதை நெடியோனா’ய் விளங்கிய அவன், தன் அருமைத் தந்தையைப் போன்றே விருந்திறை நல்கும் வள்ளியோனாயும் திகழ்ந்தான். அத்தகையோன் வீரம், கருணை, காதல் முதலிய புண்புகளையெல்லாம் போற்றியவாறு ஒளவையார் ஓரளவு தம் வாழ்வில் வீழ்ந்த பேரிடியால் விளைந்த பெருந்துயரை மறந்திருந்தார், பின்னர் அவர் ‘தமிழ் கூறும் நல்லுலக’த்தின் பல்வேறு பகுதிகளையும் காண விழைந்தார். அது காரணமாகத் தகடூரினின்றும் வெளிப்போந்தவர், வள்ளுவர் குடியில் தோன்றியவனும், நாஞ்சில் மலைக்கு உரியவனுமாகிய நாஞ்சில் வள்ளுவனைக் கண்டு, அவன் செம்மைசால் பண்பினன் என்பதை அறிந்து, அவன்பால் சென்று, பொன்னே துகிலோ ஏதும்பெற எண்ணாதவராய், உணவுக்குச் சிறிது அரிசியே வேண்டினார். அவனோ, அருந்தமிழ்ப் புலவர் வரிசை அறிந்து வழங்குபவன் ஆகலின், ஒளவையாரின் பெருமை யெல்லாம் உணர்ந்தவனாய் யானைப் பரிசில் அளித்தான். அது கண்டு ஒளவையார் அவன் கொடையை வியந்து, “செந்நாப் புலவீர், நாஞ்சில் மலை வேந்தன் மெல்லிய அறிவினனே, இஃது உறுதி. யாம் இலைக்கறிமேல் தூவச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் பரிசிலர்க்குதவும் வரிசை அறிதலால், எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தன் மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துப் பெரிய மலை போல்வதொரு யானையை அளித்தான். ஆதலால், ஒருவர்க்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப் பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோதான்! பெரியோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்!” எனக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவனைப் புகழ்ந்தார்.
பின்னர் ஒளவையார் உறையூரின் கண் சோழ அரசன் இராயசூய வேள்வி இயற்றுகின்றான் என்பது அறிந்து ஆங்குச் சென்றார். அவன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் சோழ வேந்தனோடு ஒருங் கிருக்கக் கண்டார். வாழ்நாளெல்லாம் தமிழ் வேந்தரும் தமிழ் வள்ளல்களும் தங்களுள் மாறுபாடு கொண்டு போரிட்டு மடிவதையே கண்டு மனம்வெந்திருந்த ஒளவையாருக்குத் தமிழகத்து முடியுடை மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி எல்லையில்லா இன்பத்தை அளித்தது. அவர் அவ்வின்ப உணர்வின் எல்லையில்நின்று அம் மூவேந்தரையும் அருந்தமிழ்க் கவிதையால் போற்றினார்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்
Leave a Reply