நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்11

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 10. தொடர்ச்சி)
3. ஔவையார் தொடர்ச்சி)

   அதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய ‘கபில ரதிகமான்’ என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு வேறு குடியினரென்பதுபற்றி, இவர்கள் ஆங்காங்கு வளர்ந்த குடிப்பெயர்களான் வழங்கப்பட்டனர் என்பவாகலான் அமையுமென்பது. உலகவழக்கி னன்றிச் சிறந்ததோர் நூல்வழக்கினும் இவ்வெழுவரது ஓருடற்பிறப்புக் காணப்பட்டவாற்றானே அவ்வரலாறு உண்மையெனக் கொள்ளத்தகும். பல்வேறிடத்தில் வேறு வேறு குடியில் வளர்ந்த இவர்களது ஓருடற்பிறப்புப் பின்பு உணரப்பட்டவாறு இங்ஙனமென்பதும் இவ்வெழுவரும் தம் ஓருடற்பிறப்பினை உணர்ந்தனராவர் என்பதும் இப்போது தெற்றெனப் புலப்படவில்லை.

எத்துணையோ நூற்றாண்டுகட்கு முன்பு நிகழ்ந்த இவ்வரிய செய்தியி னுண்மையை இப்போதுள்ள சுருங்கிய கருவிகளைக்கொண்டு தெளிதல் அரிது. ஆயினும் எத்துணையோ நல்லிசைப்புலவரும் வள்ளல்களும் உளராகவும் அவர்கள்பாலெல்லாங் காணாமல் இவ்வெழுவர்பாலே இக்கதை சிறப்பாகத் தொன்றுதொட்டு வழங்கப்படுதலால் இதன்கண் ஓருண்மை யுளதாவதில் ஐயமில்லை. ஒரு குடிப்பிறந்து ஒரு குடிக்கண் வளர்ந்து அவ்வளர்ந்த குடிக்கேற்ற பெயரும் ஒழுக்கமும் பூண்டு விளங்கினார், வடவாரிய ருள்ளும் பண்டைக்காலத்தே பலராதல்போல இத்தென்றமிழர்க்குங் கொள்ளத்தகும்.

இடங் குடி முதலியவற்றான் இக்கபிலர் முதலாயோர் வேற்றுமை பெரிதுடையரேனும், நுணுகிநோக்கின் இவர்கள் ஒருகாலத்தவர்களாதல் தெளிவாம். அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் அவ்விருவரும் ஒருகாலத்தவரென்பது தெரிவிக்கும். அவன் தகடூர்ப் பொருது வீழ்ந்தபோது அவன் பிரிவாற்றாது பாடிய அரிசில்கிழார், பேகனாற்றுறக்கப்பட்ட கண்ணகி என்பாளை அவன்பாற் சேர்த்தல்வேண்டி அப்பேகனைப் பாடினரென்பது 146 ஆம் புறப்பாட்டான் அறியப்படுவது. அக்கண்ணகி காரணமாகவே அப் பேகனையே கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் என்னும் இவர்களும் பாடியுள்ளாராதலின் (புறம் 143, 144, 145, 147), அதியமான் ஔவையார் அரிசில்கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் இவர்களனைவரும் ஒருகாலத்தவராதல் நன்கு தெளியலாகும். வள்ளுவர் திருக்குறள் அரங்கேற்றியபோது அதனைக் கபிலருங்கேட்டுச் சிறப்பித்துப் பாடியிருத்தலின்(திருவள்ளுவமாலை) இக் கபிலர் முதலிய நால்வரும் ஒரு காலத்தவரென்பது தெள்ளியது.

[*] பாரி பறித்த [+] கலனும் பழையனூர்க் காரியன் றீந்த களைக்கோலுஞ் சேரமான்
[++] வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும் நீலச்சிற் றாடைக்கு நேர். (தமிழ்நாவலர் சரிதை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      [+] ‘பறியும்’ [++] ‘வாரா யெனவழைத்த வாய்மொழியும்’ எனவும் பாடம்]

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* இஃது ஔவையார் திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்பார், மழையால் நனைந்த தமக்கு ஒரு நீலச்சிற்றாடை நல்கினபோது பாடியது: ஔவையார் பாரிபாற் பரிசில்பெறச் சென்றபோது இவரது பேரறிவுடைமையை வியந்து இவருடன் அளவளாவுதலே பேரின்பமாகக் கருதி இவரைப் பிரிதற்கு உடன்படாமையாற் பரிசில் நல்காது நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசீலீந்து விடுப்பவேண்ட, இவர் வேண்டுதலை மறுத்தற்கியலானாய்ச் சிறந்த கலன்பல நல்கிவிடுத்தும் இவரைப் பிரிந்துறைய லாற்றாப் பேரன்பால் இவர் தன்பாற்றிரும்பவும் எய்தற்கு இதுவே தக்கதோர் சூழ்ச்சியாகுமென்று தன்னுளத்துக்கருதிப் பிறர் சிலரை இவர் செல்நெறிவிடுத்து இவருடைய அருங்கலவெறுக்கை முழுதை யும்பறித்துக் கொடுவரச்செய்ய, இவர் அவனெண்ணியவாறே அவன்பால் மீண்டு நிகழ்ந்ததறிவிக்க, அவன் முகத்தானொந்து இவர் மீண்டெய்தியமைபற்றி அகத்தானுவந்து நெடுங்காலம் இவருடனளவளாவிப் பெருமகிழ்வெய்தி இவர்க்கு முன்னரினுஞ் சிறப்ப அரும்பொருள் பலவும் நல்கினன் எனவும், பழையனூரிற் காரிபால் இவர் பரிசில் பெற்றுத் தாம்வேற்றூர் புகுதற்கு விடைபெறவேண்டித் தன் கொல்லைப் புறத்துக் களையெடுப்புழி நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை இவர் கூறாமலே யுணர்ந்த அவன், இவரைப் பிரிதற்காற்றானாய், இவரை இன்னும் பலகாலந் தன்பால் வைத்துச் சிறப்பிக்க மனங்கொண்டு, இவர் இப்போது செல்லாமைக்கு இதுவே தக்கதாகுமென்று கருதி, அக் களையெடுத்த இடத்தை யளத்தற்குரிய அளவுள்ள களைக்கோலொன்றை இவர்பால் நல்கி, ‘இதனையளந்திடுக’ என்று கூறி, அவன் வேறு தொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே யளந்து, அன்று விடைபெறக் கூடாமையாற் பின்னும் அவன்பாற் சிலகாலந் தங்கினாரெனவும், சேரன் அரண்மனையில் ஓருழிப் பலருடன் இவரும் உண்டற்கிருந்தபோது, ஆங்கு வேற்றுவிருந்தினனொருவன் எய்தினனாக, சேரன் அவனுக்கு இடமொழிக்க நினைந்து ஆண்டுள்ள பலரும் பிறராதலின் ஒன்றுஞ் சொல்லானாய்த் தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வௌவையாரே யாதலால் இவரை நோக்கி, ‘ஔவையே வாராய்’ என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர் அப் பிறனுக்குத் தம்மிடத்தை நல்கிப் பின் அச்சேரனுடன் உண்டனர் எனவும் கூறுப.

இம்மூன்றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ அவ்வாறே நீலச்சிற்றாடை கொடுத்ததும் ஆதலின் இவை தம்முள் ஒக்குமென்றவாறு.

** என்னும் ஔவையார் பாட்டானும் ஔவையாரும், பாரியும் பெருநண்பினரென்பது தெளியப்படுதலால், அப் பாரிக்கு உயிர்த்துணைவராகிய கபிலரும் ஔவையாரும் ஒருகாலத்தவராதல் நண்குணரலாகும்.

ஒருகாலத்தவரெனத் தேர்ந்த இந்நால்வருள் ஒருவன் மகாவீரனும் பெருவள்ளலுமாய்ச் சிறந்தான். மற்றைமூவர் அறிவுவீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோரெனச் சிறந்தார். இம்மூவரது நல்லிசைப் புலமையே இச்செந்தமிழுலகாற் பண்டும் இன்றும் மிகவும் உயர்த்துப் புகழப்படுவதென்பது ஒருதலை. இம்மூவரும் பல்வகை மக்கட்கும் இன்றியமையாப் பொதுவாய ஒழுக்கங்கள் சில பலவற்றைத் தொகுத்தோதியவாற்றானே ஒருபடிப்பட்ட தன்மையினரென்பது உணரத்தகும். கபிலர் இன்னாநாற்பதும், வள்ளூவர் திருக்குறளும், ஔவையார் மூதுரை முதலியனவும் ஓதியவாறு பற்றியுணர்க. [*] நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் (72) ‘அட்டாலும் பால்சுவையிற் குன்றாது’ என்னும் வெண்பாவினை எடுத்தோதி, ‘இது மூதுரை’ என்று கூறியவாற்றானும், நீலகேசித்தெருட்டுரைகாரர் (கடவுள் வாழ்த்துரை) ‘விதியால் வருவ தல்லால்’ என்னும் பாடலை எடுத்து மேற்கோள் காட்டுதலானும், இம்மூதுரையின் பழமை உணரத்தக்கது. 

 ++++
[* பேராசிரியர் நூற்பெயர் கூறினாரில்லை.]

++++

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்

(இதழாசிரியர் குறிப்பு : மூல நூலில் சில பத்திகள் இடம் மாறியுள்ளன. படித்துணர்ந்து புரிந்து கொள்க.)