நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்இரா.இராகவையங்கார் : 15

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 14. தொடர்ச்சி)

3. ஔவையார் (தொடர்ச்சி)

 

ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார்.

இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து உணவின்றி வருந்தினராக, ஆங்குச் சென்ற ஆட்டிடையன் ஒருவன் அசதி என்பான், தானுண்டற்குக் கருதிக் கொணர்ந்துள்ள தெண்ணீரடுபுற்கையை இவர்க்கு உதவினான்; அந்நன்றி பாராட்டி அவன்மேற் கோவைநூ லொன்றுபாடிச் சென்றன ரென்ப. இவர் அசதிமேற் கோவை பாடினர் என்பது,

[* ஒளவையார் கோவில், வளவனாற்றின் கீழ்கரையில் துளசியார் பட்டினம் என்ற ஊரி லுள்ளது. அவ்வூர் திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் என்ற வூருக்குக் கீழ்த்திசையில் ஒரு கல் தூரத்தி லுள்ளது; தஞ்சை சில்லாத் திருத்தருப் பூண்டித் தாலுகாவைச் சார்ந்தது. ] அக்கோவிலில் ஒளவையார் விக்கிரக மானது விருத்தாப்பியவடிவாய் முகந்திரைந்து விளங்குகிறது. அதனுடன் இளம்பெண்ணுருவமான விக்கிரகமும் ஒன்றிருக்கிறது. அதை உப்பை என்கிறார்கள். இக்கோவிலுக்கு அவ்வையார் மானியம் என்று சில நிலங்களும் பாத்தியங்களும் உள. கோவிலில், பிற்காலத்தில் விசுவலிங்கப் பிரதிட்டை நிகழ்ந்துள்ளது. அவ்விலிங்கம் ஒளவையார் விக்கிரக மிருந்த இடத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அது தெற்குப்பார்த்த சந்நிதி; ஆதிசைவரால் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஔவையார் விக்கிரகம், பெயர்த்து மற்றொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வடமேற்கில் அரைமைல் துரத்தில் கொல்லன்திடல் என்று ஒரு மேடு இருக்கிறது. அதன்-

‘பன்னு மசதியன்பு பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே யௌவைமுன்பு சோமேசா’

என்னும் முதுமொழி வெண்பாவினால் அறியப்படும்.

அசதிக்கோவை

‘அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேன்
முற்றா இளநகை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதா ரிணக்கமுங் கைப்பொருளொன்
றற்றா ரிளமையும் [*] போலே கொதிக்கும் அருஞ்சுரமே.’

[*] கண் ஓராலமரமும் ஒரு மேடையும் உள்ளன. அங்கு ஒளவையாரைப் பிரார்த்தித்து இட்டசித்திகளைப் பெறுபவர்களாற் பச்சை பரப்புதல் மிகுதியாக நடைபெறுகிறது. அம்மேட்டிற் கொல்லன் ஒருவன் வீடுகட்டியிருந்தனனாகவும், அவ்வழியாக ஔவையார் மழையால் நனைந்து பசித்துவந்தாராக அவ்வூரார் ஒருவரும் இவரை ஆதரியாமற்போக, அக்கொல்லன் தன் உலைக்களத்து நெருப்பால் அவர் புடவையினை உலர்த்தி அவரையும் குளிர்காயச்செய்து அவர்க்கு உணவளித்தனனென்றுங் கூறுவர். அக்காலத்து வெள்ளம் மேலிட்டு ஊரெல்லாம் பரவியது. அப்போது இவனிடத்துண்டாய அன்பின் மிகுதியால் ஒளவையார், ‘வள்ளையுங் கொள்ளையாகி வளவனும் பேராறாகிக், கொல்லன் றிடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே’ என்று பாடி, அக்கொல்லன்றிடல் மட்டில் வெள்ளங் கொள்ளாமற் காத்தனர் என்பர். இதற்குச் சான்றாக இப்போதுஞ் சதுரமைல் நாலுக்கு எங்கும் வெள்ளமாகவே இருப்பது பார்க்கலாம். கடல் இக்கோவிலிருக்குமிடத்திற்குப் பத்துமைல் தூரத்துள்ளது. இவை மன்னார்குடிக் கல்லூரித் தமிழ்பண்டிதர் மகா-ள-ள-சிரீ சருக்கரை இராமசாமிப் புலவர் வாயிலாற் றெரிந்தன.

இவ்வாறு எளியரும் வலியரும் இவர்க்குதவி, இவராற் பெற்ற இனிய பாடல்கள் மிகப்பலவாம். இவரது செவ்விய நா ஒருவரைச் செய்யா கூறிப் புகழ்தலை ஒருபோதும் அறியாதாகும். அறிவும் புகழுமுடைய மூன்று பெருங்கோக்களும் அன்பும் அருமையும் உடைய பெருவள்ளல்களும், நல்லுபகாரிகளுமே இவரது திருப்பாடல் புனைந்தவராவார். இவரை ஒருகாற் சில புல்லறிவோர், தம்மைப் பாடுக என்றபோது, இவர்,

மூவர் கோவையு மூவிளங் கோவையும்
பாடின வென்றன் பனுவலா னெம்மையும்
பாடுக வென்றனிர்
நும்மையிங் கெங்ஙனம் பாடுகென் யானே.
களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீ
ரிலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீ
ரவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்
உடீஇ ருண்ணீர் கொடீஇர் கொள்ளீ
ரொவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே.’

எனப் பாடியதனானே, இவரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்துத் திட்பமும் ஒட்பமும் நன்கறியத்தகும். ‘செம்பொருளாயின் வசையெனப்படுபடுமே’ என்னுஞ் செய்யுளியற் சூத்திரவுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டிய ‘எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே’ என்னும் பாட்டு, ‘ஒளவையார் ஒருவனைப் பாடி, அவன் இகழ்ச்சிசொல்ல, அப்போதுபாடிய அங்கத அகவல்’ என்னுந் தலைப்பின்கீழ்த் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுவது.

இதனானும் இவரது மனவலியும் சொல்வலியும் ஆராயப்படும். இவர் பாடியருளிய,

எரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமா–யூருக்குச்
சென்று வாவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டா
லென்று முழவே யினுது.’ (தமிழ் நாவலர் சரிதை)

* ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காத லிருவர் கருத்தொத்துற்–றாதரவு
பட்டதே யின்பம் பானைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்றன் வீரமே வீரமா–மென்றானுஞ்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிற
ரேவாம லுண்பதே யூண்.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘அரியது கேட்குந் தனிநெடு வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையு
மூங்கையுஞ் செவிடுங் கூனுங் குருடும்
பேடு நீக்கிப் பிறத்தலு மரிதே
பேடு நீக்கிப் பிறந்த காலை
ஞானமுங் கல்வியும் நற்குற லரிதே
ஞானமுங் கல்வியு நற்குறு மாயினுந்
தானமுந் தவமுந் தரித்தலு மரிதே
தானமுந் தவமுந் தரித்தார்க் கல்லது
வானவ னாடு வழிதிற வாதே.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களான் இவரது அரிய பெரிய மனநிலை நன்குணரப்படும்.

இவர், சேரமண்டலஞ் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் இந் நான்கிலும் அவற்றின்
றலைநகர்களிலும் நெடுங்காலஞ் சரித்தனரென்பதும், இவர்காலத்துத் தொண்டைநாட்டிற் சான்றோர் பல ரிருந்தனர் என்பதும் இவர் பாடியருளிய,

‘வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து–பூழியர்கோன்
றென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து.’

‘வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற
னான்மாடக் கூடலிற் கல்வலிது
சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது.”

என்னும் பாடல்களான் அறியப்படுவன. இவை ஒளவையார் பாடியன என்பது,

‘அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையிலெளவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும்
வஞ்சி வெளிய வெனும்பா மொழிதொண்டை மண்டலமே.’

என வருந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெளியப்படும். நச்சினார்க்கினியர், ‘வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்’ என்னுஞ் சூத்திரவுரையில், ‘வஞ்சி வெளிய குருகெல்லாம்…காக்கை கரிது’ இவை ஔஒளவையுங், காரைக்காலம்மையுங் கூறியன’ எனக்கூறியதனானும் இதனை யுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்