avvai_thuraisamy01

  செஞ்சொல் வீரர் ஔவை சு.துரைசாமி  அவர்களை உரைவேந்தர் எனக் குறிப்பிடுகின்றோம். இவரது உரைத்திறன்சிறப்பை அறிந்து எப்பொழுது யாரால், எவ்வமைப்பால் உரைவேந்தர் பட்டம் வழங்கப் பெற்றது என்பதை அறிவீர்களா?

  உரைவேந்தரைச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் பாராட்டி மகிழும் பின் வரும் குறள்நெறிச் செய்தியைப் படியுங்கள். புரியும்.

உரைவேந்தர்

பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் தைத்திங்கள் மூன்றாம் நாள் (16-01-64) சிறப்பாகக் கொண்டாடியது. ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் தலைமையில் தமிழவேள் பொ.தி. இராசர் பொன்னாடை போர்த்தவும், கலையன்னை இராதா தியாகராசர் ‘உரைவேந்தர் எனும் பட்டம் பொதிந்த பதக்கத்தை அளிக்கவும், திருவாளர் மணவாளர் பேராசிரியரின் உரைநலம் பற்றி உரைக்கவும், பலர் பாராட்டு வாழ்த்துக்கள் பகரவும் விழாச் சிறப்புற்றது. ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களுக்கு உரையெழுதியுள்ள பேராசிரியர்க்கு ‘உரை வேந்தர்’ எனும் உயரிய பட்டம் சாலப் பொருத்தமாகும்.

  இப்பெரும் புலவர்க்கு, சித்தாந்த சைவச்செம்மல், செஞ்சொல் வீரர், சைவசித்தாந்த கலாநிதி என்னும் பட்டங்களும் இதற்கு முன்பு பலரால் அளிக்கப்பட்டுள்ளன.

  தென்னார்க்காட்டு மாவட்டத்தில், மயிலத்துக்கு அண்மையில் ஔவையார் குப்பத்தில் தோன்றிய ஔவை சு. துரைசாமி(ப்பிள்ளை)யவர்கள் மாவட்ட நிலவருவாய்த் துறை எழுத்தராய், வடவார்க்காட்டு மாவட்டத்துப் பள்ளிகளில் தமிழாசிரியராய், வடவேங்கடக் கீழ்த்திசைக் கல்லூரி விரிவுரையாளராய், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சியாளராய்ப் பணிபுரிந்து, கலைத்தந்தை திரு.கருமுத்து தியாகராச(ச் செட்டியா)ரவர்களின் நல் விருப்பத்தால் இன்று மதுரைத்தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக உள்ளனர்.

  விழாக்கள் பலவற்றில் தலைமை தாங்கியும், விரிவுரை நிகழ்த்தியும், கட்டுரைகள் எழுதியும், ஞானாமிர்தம், சைவ இலக்கியம், சிவஞான போதச் சிற்றுரையாகிய நூல்களை ஆராய்ச்சிக்குறிப்புடன் பதிப்பித்தும், சிலப்பதிகாரம், மணிமேகலை சீவகசிந்தாமணி ஆகிய பெருங்காப்பியங்கட்கு ஆராய்ச்சி நூல்கள் எழுதியும், திருக்குறளைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதியும் ஆசிரியப் பணிபுரிந்தும் பண்டைத் தமிழ்ப் பண்புகளை வளர்த்து, நாடு மொழியினங்கட்குத் தொண்டு செய்த பெருமை ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்களுக்கு உண்டு. ‘தமிழகப் புலவர் குழு’வில் தாமும் ஒருவராக இருந்து தம்மாலியன்ற பணியும் புரிகின்றனர்.

  சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கப் பணியாற்றும் இவ்வுரைவேந்தர், இன்னும் பலநூல்களுக்கு உரைவிளக்கம் தந்து பாரில் நல்லிசையும் பல்வளவனும் கொண்டு எல்லா நலன்களுடனும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு வாழ்வாராக.

குறள்நெறி தை 19, 1995 / பிப்பிரவரி 1, 1964