thirukkural02

  வாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன.

  இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும்.

  ஏனெனில் ஆட்சியே பொருளை இயற்றுதற்கும், ஈட்டுதற்கும் காத்தற்கும், வகுத்தற்கும் வேண்டும். சூழ்நிலையை பயப்பது; நெறியை வகுப்பது; முறை செய்து சட்டத்தையும், அமைதியையும் நிலை நாட்டிப் பொருள் செயல் வகைக்கு அடிப்படையான கோட்பாட்டையும் நாட்டவல்லது.

‘‘இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்’’. என்றும்,

‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு’’.

என்றும் வரும் குறள்களில் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டும் இன்றியமையாத அரசியல் உறுப்புக்களை வள்ளுவர் விளக்கிப் போனார்.

  முதன் முதலாக நாட்டிலே நல்ல அமைதி நிலவுதல் வேண்டும். அடுத்துப் பொருளைப் படைத்துத் திரட்டி காத்து வகுக்கும் பொருளாதாரக் கோட்பாடு இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வதனால் Preservation of Law and Order and formation of Progressive Ecnonomic என்ற இரண்டும் வேண்டும். இது நல்ல அரசாட்சியாலேயே பெறப்படும்.

எனவே நிலையான அரசியல் அமைதி, முற்போக்கான பொருளாதார நெறி ஆகிய பொருள் செயல் வகைக்குக் கண்போன்ற இரண்டு உறுப்புக்களும் அரசியலில் அமைய, அரசாள்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப்பற்றியே வள்ளுவர் ஆராயலானார்.

அரச அமைப்பும் இயல்பும்

அவை முடியாட்சியால் வருமா, சில தக்கார் (Aristocracy) ஆட்சியால் வருமா, குடியாட்சியால் (Democracy) வருமா, என்ற கேள்விகளை வள்ளுவர் எழுப்பவே யில்லை.

  இன்பமே வள்ளுவர் குறிக்கோள். அந்த இன்பத்துக்கும் பொருள் துணைக்கருவி. அந்தப் பொருளை பெறுவதற்கு அரசியல் அமைப்பும் முற்போக்குப் பொருளாதாரக் கொள்கையுமே அடிப்படை. அவற்றை எந்த ஆட்சி நல்க வல்லதோ, அதுவே சிறந்த ஆட்சி என்ற கோட்பாடு உடையவராக வள்ளுவர் இருந்தார் என்றே கொள்ள வேண்டும்.

B__NATARAsAN01(தொடரும்)

குறள்நெறி தை 2, 1995 / சனவரி 15, 1964