கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : 

தி.க.உறங்குவது ஏன்?

 

  கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா  அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது.

 நேர்மையாக வாழும்    ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்” எனச் சொல்லக்கூடாது. படித்தவர்கள்தாம் மிகுதியும் நேர்மைக் குறைவுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையின்றி வாழும் முறையையும் படித்துக் கொள்கிறார்கள். படித்தவன் நேர்மையாளன் என்றால் படிக்காதவன் நேர்மைக் குறைபாடுடையவனா? உண்மையில் சூது வாது படிக்காதவன்தான் நேர்மையாளனாக உள்ளான். எனவே, கல்விஅடிப்படையில் நேர்மையை அளவிட்டுக் கூறுவது தவறாகும்.

  சிலர், நான் உண்மையான கிறித்துவன், பொய் பேச மாட்டேன் அல்லது குற்றம் புரிய மாட்டேன் என்பர். அப்படியானால், இந்து, இசுலாம், புத்தம் முதலான பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் குற்றம் புரிபவர்களா? இவ்வாறு சமய அடிப்படையில் நல்லவன் அல்லது தீயவன் என மதிப்பிடுவதும் தவறாகும்.

   இதுபோல்தான் தெய்வப் பற்றுள்ளவன் எனவே நேர்மைக் குறைபாடுடையவன் அல்லன்; நேர்மையாளன் எனக் கூறுவதும். கடவுள் மறுபிறப்பாகக் கூறிக்கொண்ட காஞ்சி செயேந்திரன்தான் கற்பழிப்பு, கொலை, ஒழுக்கக்கேடுகளின் உறைவிடமாக வாழ்ந்தான் என அவனுடன் வாழ்ந்தவர்களே தோலுரித்துக் காட்டினர்.

 தெய்வப்பணி புரிந்த தேவநாதன்தான் கருவறையிலேயே திருமணமான பெண்களை ஏமாற்றி உறவு கொண்டவன்.

 கிருட்டிணன் போன்ற கடவுள் பிறப்பெடுத்தவனாகக் கூறிக்கொண்ட சாமியார் நித்தியானந்தன்தான் பெண்கள் பலர் வாழ்வில் விளையாடி உள்ளான்.

  ஒழுக்கக்கேடுகளால் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்ட ஆசாராம் சாமியார், குற்ற உணர்ச்சி ஏதுமின்றி, “எங்கள் கடவுள் கிருட்டிணன் செய்த  காம விளையாட்டுகளைத்தான் நானும் செய்தேன்” என்று நீதிமன்றத்திலேயே  சொன்னதை யாரும் மறந்திருக்க முடியாது.

 சாமியார்கள் என்றாலே பெண்களின் கற்புடன் விளையாடுபவர்கள் என்பதைத்தான் நாளும் நிகழ்வுகள் காட்டுகின்றன. இறை நம்பிக்கையைப் பரப்புபவர்களில் பெரும்பான்மையர் இறை நம்பிக்கையற்ற ஒழுக்கக்கேடர்களாக உலவி மக்களை ஏமாற்றி வருவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம்.

 சாமியார்களை ஒழுக்கவான்களாகப் புகழ்வதும் அவர்கள் குற்றவாழ்க்கை தெரிய வந்தால் போலி சாமியார்கள் என்று சொல்வதும் வழக்கமாகப் போய்விட்டது. உண்மையில்  சாமியார் என்று ஏய்த்துத்திரியும் அனைவருமே போலிகளே! உண்மையான அறவாணர்கள் விளம்பரம் எதுவுமின்றி அமைதியாக நற்பணிகள் ஆற்றி வருகின்றனர்.

  அடுத்தவர் பணத்தில் அறப்பணி செய்து நம்பிக்கையை அறுவடை செய்துகொண்டு ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் இத்தகைய போலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

  அன்றாடம் இறைப்பணிபுரியும் உத்தமர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள்தாம் சாமிச் சிலைகளைத் திருடி விற்று வருகிறார்கள்.

 இவர்கள் எல்லாம் கடவுள்களைக் கொண்டு தங்கள் பிழைப்பை நடத்துகிறார்களே தவிர, கடவுள்மீதுள்ள அச்சத்தால் குற்றம் தவிர்க்க வில்லை. இறைநம்பிக்கை இவர்களை நேர்மையாளராக வாழ வைக்கவில்லை.

  எனவே, தெய்வ நம்பிக்கை அடிப்படையில் நேர்மையை மதிப்பிடுவது பெருந் தவறாகும்.

 இறை ஏற்பாளர்களை விட இறை மறுப்பாளர்கள்தாம் தீவினைக்கு அஞ்சி வாழ்கிறார்கள். என்றாலும் பகுத்தறிவாளன் எனவே, பண்பாளனாக வாழ்கிறான் என யாரையும் சொல்ல முடியாது.

  ஆனால், ஒழுக்க நெறியில் வாழ்பவன், பண்பாளன் எனவே தவறான பாதையில் செல்லவில்லை என நாம் அத்தகையோரைச் சொல்ல முடியும். எனவேதான் திருவள்ளுவர் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஒழுக்க நெறியில் வாழ்பவன் தவறிழைத்தால் அவன் ஒழுக்க நெறியில் வாழ்பவனாக முடியாதே!

 எனவே, அமைச்சர்பெருமான், “தாங்கள் ஒழுக்கநெறியில் வாழும் பண்பு நிறைந்தவர்கள்/ எனவே நேர்மையாளராகத்தான் செயல்படுவோம்” என உண்மையாக இருப்பின் கூறலாம்.

  ஒழுக்க நெறியில் வாழாமலேயே ஒழுக்க நெறியில் வாழ்வதாக ஒருவர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மக்கள் அறிவர். என்றாலும் பண்பை அடிப்படையாகக் கொண்டு நேர்மையை அடையாளம் காண்பது சரியே!

 ஆனால், அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதால் இறை நம்பிக்கையற்றவர்கள் நேர்மைக் குறைபாடு உடையவர்கள் எனப் பொருளாகிறது. இவ்வாறு இறைநம்பிக்கையற்றவர்களைக் குறை சொல்லும் பேச்சைக்கேட்டும் இறை மறுப்பாளர் கழகங்கள், பகுத்தறிவாளர் கழகங்கள், திராவிடர் கழகங்கள் வாளாவிருப்பது ஏன்? இதனை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா? இவ்வாறு பேசியதற்குக் கண்டனக்கணைகள் பாய்ந்திருக்க வேண்டாவா? இவ்வாறு  சொன்னவரை மன்னிப்பு சொல்ல வைத்திருக்க வேண்டாவா? வருத்தம் தெரிவிக்கச் சொல்லி யிருக்க வேண்டாவா? ஆனால், அமைதி காத்து அதிமுகவின் சார்புரையாளர் கூறுவதுசரிதான் என்பதுபோல் நடந்து கொள்கிறார்களே!

  எனினும் அமைச்சரின் இத்தகைய பேச்சிற்கு நாம் கண்டனம் தெரிவிக்கிறோம். பிறரையும் கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம்.

 நேர்மைக்கும் கடவுள் பற்றிற்கும் தொடர்பில்லை என்னும் உண்மையை உரக்கச் சொல்ல விரும்புகிறோம். அப்படி இருந்தது என்றால் உலகில் நேர்மை எங்கும் வாழ்ந்திருக்குமே! இதற்காகக் கடவுள் நம்பிக்கையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்று சொல்வதாகப் பொருளல்ல. அவர்களுள்ளும். தெய்வ நம்பிக்கையால் தங்களுக்குள் வேலி அமைத்துக்கொண்டு அல்லன பக்கம் கடக்காமல் வாழும் நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கடவுள் நம்பிக்கையுடன் பண்பாளர்களாகவும் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் முடிச்சு போட வேண்டா என்றுதான் சொல்கிறோம்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி. (திருவள்ளுவர், திருக்குறள் 137)

– இலக்குவனார் திருவள்ளுவன்