(கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி)

முனைவர் மு.மோகனராசின்

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’

நூலாய்வு 

3/4

8.0.0.0.ஆய்வுப் போக்கு:

            ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது.

8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை

              எண் வழங்கல்,

8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி

              உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,

8.3.0.0.எண்பொருளவாகச் செலச்சொல்லக் கருதி, மிகப் பெரும்

              பானையாக 3 / 4 / 5 / 6 வரிப் பத்திகளாகப் பிரித்தல்,

8.3.0.0.இன்றியமையானவற்றை அழுத்த எழுத்துகளில்

              அமைத்துத் தெளிவுறக் காட்டல்

8.4.0.0.தேவையான இடங்களில் அடைப்புகளையும் இரட்டை

              மேற்கோள்குறிகளையும் பயன்படுத்துதல்,

8.5.0.0.அனைத்து வகை மேற்கோள்களுக்கும் எண்ணிட்டு,

              அவற்றை அந்த அந்தப் பக்கங்களின் கீழே காட்டல் 

போன்றவற்றை நூலாசிரியர் முனைவர்கு.மோகனராசு அவர்கள்  ஏற்றுப் போற்றும் வகையில் எழிலுற அமைத்துள்ளார். இவை இந்நூலின் வெற்றிற்குப் பெருந்துணை புரிகின்றன.        

9.0.0.0.குறளுக்கு ஊடுபொருள் காணும் முறைமை:

கன்பூசியசு கண்ட கல்வி, திருவள்ளுவர் கண்ட கல்வி ஆகிய இருவரது தரவுகளுக்கு ஒப்பாய்வுக்குத் தக்கபடி,  புதுப்பொருள், ஊடுபொருள் காணும் முறைமைகளை  நூலாசிரியர் முன்னெடுத்துள்ளார். இவை ஒப்பாய்வு நுட்பத் திறனுக்கு நற் சான்றுகளாக நன்னடவு செய்கின்றன. சான்றாக ஒன்றைமட்டும் இங்குக் காண்போம்.

          “கன்பூசியசு, மனிதன் என்ன நோக்கோடு கல்வி பயில்கிறான் எனக் கூறியிருப்பதை ஆராயும்போது, கல்வி கற்பதனால், சமுதாய மதிப்பு உண்டாகிறது என்றும் கல்வியின் நோக்கம் இச்சமுதாய மதிப்பை உருவாக்குவதாக அமைய வேண்டும் என்றும் அவர் கருதுவதை உய்த்துணர முடிகின்றது.”[பக்.19].

மேற்கண்ட கன்பூசியசின் கருத்துக்கு ஒப்பத் திருவள்ளுவரும் கருதுவதைக், கீழ்க்காணும் ஊடுபொருள் காணும் முறைமைச் சான்றால் உணரலாம்.

            “கல்வியினால் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியும் என்றும் தாழ்ந்த சமுதாய மக்களும் கல்வியினால் உயர்ந்த மதிப்பைப் பெற முடியும் என்றும் வள்ளுவர் உறுதியாக நம்பினார். இதனை,

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு                          [குறள்.409]

என்னும் குறள்வழி அறிய முடிகின்றது.”[பக்.21].

            மேலும் இக்குறளுக்கு வள்ளுவர் கூற்று, கல்விக்குச் சமுதாய மதிப்பும் இருக்க வேண்டியதைப் புலப்படுத்துகிறது. [பக்.69].

10.0.0.0.ஒப்பாய்வியல் நுட்பத் திறன்:

            ஆய்ஞர்கள் / ஒப்பாய்ஞர்கள் சிலர் ஆய்வுக்கு அரண் செய்வனவற்றை மட்டும் காட்டுவர்; முரண்செய்வனவற்றைக் காட்டார். ஒன்றுபடுவனவற்றைக் காட்டுவார்; வேறுபடுவனவற்றைக் காட்டார்.

ஆனால், இந்நூலின் ஒப்பாய்ஞர் முனைவர்கு.மோகனராசு அவர்கள் இருமை வகைமைகளையும் இயம்பியுள்ளார். இதனை,

          “சீனத் தத்துவ மேதை கன்பூசியசுடன் தமிழகத் தலைமை ஆசான்  திருவள்ளுவரை ஒப்பிட்டுக் காட்டும் முயற்சியில் சீரிய சிந்தனையோடும் நேரிய முறையோடும் செயல்பட்டு, இருவர்தம் ஆற்றலையும் வெளிக் கொணர்கின்றார் ஆசிரியர்.

          ஒப்பீடு என்பது இரு வேறு அறிஞர்களிடையே அமைந்திருக்கும்  பொதுச்சிறப்புகளை மட்டும் ஒப்பிட் டுக் காட்டுவது எனக் கருதும் போக்கு, பல ஒப்பியல் நூல்களிலே காணக் கிடக்கின்றது. அவ்வாறின்றி, இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுவது போற்றத்தக்கது.”

என அணிந்துரையில் பேராசிரியர் முனைவர் சூ.இன்னாசி அவர்களது கூற்று அழகுற மெய்ப்பிக்கிறது.[பக்.5].

     காய்தல் உவத்தல் அகற்றி,  ஒருபொருட்கண்

     ஆய்தல் அறிவுடையார் கண்ணதே – காய்வதன்கண்  

     உற்றகுணம் தோன்றா[து]ஆ கும்மே;  உவப்பதன்கண்    

     குற்றமும் தோன்றாக் கெடும்        

                                    முனைப்பாடியார் அறநெறி.42.2

என்னும் பனைத் துணை பொருள்பொதிந்த  முனைப்பாடியாரது பாடல் மொழியும் ஒப்பாய்வியல் அணுகுமுறைமை, நூலாசிரியரிடம் அமைந்துள்ளது. இஃது ஒப்பாய்வில் ஒரு பாற்கோடாத நடுநிலை அணுகுமுறைமைக்கு உயிர்ப்பு ஊட்டியுள்ளது.

11.0.0.0.நலம் நல்கும் நடை நலம்:

நூலின் செழுமைக்கு அதன் நடை நலமும் விழுமிய முறை மையில் அமைதல் வேண்டும். இந்நூல் எளிய நடையில் எல்லார் உள்ளங்களிலும் செலச்செல்லும்படி நலமுடன் செம்மையுறுகிறது.

சீன மண்ணைக் குறிக்க, “சிந்தனை வளம் செறிந்த சீனத்து மண்” [பக்.9] போன்ற மோனை நடைகள் படிப்பார்வத்தை மனத்தில் படியவைக்கிறது.

அறிவுப் பேரார்வி,  பேரார்வலர், மதிப்புறவு, பிடிப்புறவு, பேரீடுபாடு, சமுதாயக் கூட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு போன்ற புத்தாக்கச் சொற்களை நூலாசிரியர்  ஆக்கியுள்ளார். இவை நூலாரியர் நுவலும் நற்கருத்துகளுக்கு நல்லழுத்தம் நல்கி, நடைக்கு நலம் நல்குகிறது.

மனித வாழ்க்கை என்னும் தேர் செம்மையாக இயங்க, அதன் அச்சாணியாக அமைவது கல்வி” [பக்.110]

என்னும் உருவக நடை [பக்.110] கல்வியின் இன்றியமையாமையை நல்முறையில் நவில்கிறது. உம்மை இடைசொற்களுக்குப் பதில், இடைக்கோடுகள் [Hyphens] இட்டுக் காட்டும் புதிய முறையை மதிநுட்ப நூலாசிரியர் பதிவிட்டுள்ளார்.   

12.0.0.0.நூல் ஒப்பாய்வில் ஒன்றுபடும் இடங்களும்

         வேறுபாடும் இடங்களும் 

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ என்னும் இந் நூலில், இருவரும்

12.1.0.0.ஒன்றுபடும் இடங்கள்  – 41

12.2.0.0.வேறுபடும் இடங்கள்   – 37.

கன்பூசியசும் திருவள்ளுவரும் பெரும்பான்மை ஒன்றுபடுகின்றனர். வேறுபடும் இடங்களிலும் சிற்றளவே வேறுபடுகின்றனர். 6 இடங்களில் மட்டும் பேரளவில் வேறுபடுகின்றனர்.

13.0.0.0.ஒப்பாய்வில் கண்ட ஆய்வு முடிவுகள்:

            பேரளவில் வேறுபடும் 6 இடங்களை ஒப்பாய்ந்தபோது,  கீழ்க்காணும் 6 ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டன. அவை கன் பூசுயசைவிட, திருவள்ளுவர் எத்துணை அளவிற்கு ஓங்கி உயர்ந்து  உலகளந்ந்து நிற்கிறார் என்பதை நிலைநாட்டுகின்றன.    

(தொடரும்)

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி

கோவிற்பட்டி — 628 502, )

கைப்பேசி: 9840947998

   மின்னஞ்சல்: arangarasan48@admin