கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்!

 குற்றவாளி ஒருவரை அவரது மதம், சாதி, கட்சி, நாடு, ஊர், இனம், அமைப்பு சார்ந்து குற்றவாளியாகத் திரிப்பது தவறு. ஆனால், பல நேரங்களில் அவ்வாறுதான் செய்திகள் வருகின்றன. இந்த ஊர்க்காரர் கைது, அல்லது இந்தச் சாதிக்காரர் செய்த கொலை இந்த மதத்துக்காரர் செய்த குண்டு வெடிப்பு என்பன போன்ற செய்திகளைப் பார்க்கிறோம். தனி மனிதத் தவறுகளைப் பொதுமை ஆக்குவது தவறாகும்.

ஆனால், அதே நேரம், ஒரு மதம் சார்ந்த அல்லது கோட்பாடு சார்ந்த குழு அல்லது அமைப்பு தங்களின் தீவிர வாதச் செயல்பாடுகளை இணைந்து செயலாற்றும் பொழுது குலுக்கல் முறையிலோ வேறு முறையிலோ கொலைக் குற்றம், குண்டு வெடிப்பு போன்ற செயல்களைச் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் செய்யும் குற்றத்திற்கு அந்தக் குழு அல்லது அமைப்பே பொறுப்பு.

கமல் இந்துத் தீவிரவாதம் எனக் குறிப்பிட்டதால் பா.ச.க.விற்குச் சினமில்லை. அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் தேர்தல் பரப்புரையில் “விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து.அவரது பெயர் நாதுராம் கோட்சே.” என  அவர்களின் ‘தெய்வத்தலைவர்’ கோட்சேவைக் குறிப்பிட்டதால்தான் எதிப்பு  வெறி உணர்வு வந்துள்ளது.

“இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, பெருமளவிலான இந்துக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான கொள்கைக்கு சொந்தக்காரரை நான் துப்பாக்கியால் சுட்டேன்.” என்னும் நாதுராம் கோட்சேயின் ஒப்புதல் உரை அவர் இந்துத் தீவிரவாதி என மெய்ப்பிக்கிறது.

மதத் தீவிர வாதக் குழுவின் சார்பில் செயல்பட்டுக் காந்தியைக் கொன்ற கோட்சே இந்து மதத் தீவிரவாதி என்றே இதுவரை சொல்லப்பட்டுள்ளான். அதனாலேயே இந்துத் தீவிரவாத அமைப்பான   இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.)., கோட்சேயைத் தெய்வத் தலைவர்போல் சித்திரித்துப் புகழ் பாடுகிறது.

இந்துத் தீவிர வாதம் என்பதைக் கமல் முன்பே பல முறை சொல்லி யுள்ளார். வார இதழ்த் தொடர் கட்டுரை,  தொலைக்காட்சியின் விவாத உரை முதலானவற்றில் இதுபோல் பேசியுள்ளார். சூதாட்டத்திற்கு எதிரானது பாரதக்கதை எனப் புரிந்து கொள்ளாமல், “ஆனால்  எங்கிருந்து வந்தது இந்த வன்முறை? மகாபாரதத்தில் ஒரு பொம்பளையை வைத்துச் சூதாடியதைப்  புத்தகமாகப் படித்துக் கொண்டு இருக்கிற ஊர் இது. பெரிய புத்தகமாக வைத்துப் பாராட்டிக்கொண்டு இருக்கும் இந்த ஊரில் இந்த நிகழ்வுகள் ஆச்சரியமில்லை” என இந்து மதத்திற்கு எதிராகப் பேசியுள்ளார். இவரது பேச்சுகளாலும் எழுத்துகளாலும் நீதிமன்ற உசாவல்களையும் சந்தித்து வருகிறார்.

என்றாலும் பா.ச.க.வின் நாயகனான கோட்சேவைப்பற்றிக் கூறியதால் எதிர்ப்பு கடுமையாகிறது. இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) அமைப்பின் சார்பாளராகப் பேராயக்(காங்.) கட்சியில் இருந்த வல்லபாய் பட்டேலுக்கு 3000 கோடி உரூபாய் மதிப்பில் சிலை வைத்துத் தங்கள் பற்றைப் பா.ச.க வெளிப்படுத்தியது.  அதே நேரம் மக்களை ஏமாற்றக் காந்தியின் துதி பாடியும் வருகிறது.

அமெரிக்காவிலுள்ள, பன்னாட்டு மதத்தன்னுரிமை(International Religious Freedom) என்ற அமைப்பு இந்தியாவில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் பசுக் காவலர்கள் என்ற பெயரில் சில அமைப்புகள் இசுலாமியருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிராக வன்முறையில் மிகுதியாக ஈடுபட் டனர் என்றும் பா.ச.க. வினர், இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) மற்றும் இந்துத்துவ தீவிர வாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அறிக்கை அளித்துள்ளது. எனவே, இந்துத் தீவிரவாதம் அல்லது இந்துத்துவத் தீவிர வாதம் என்ற சொல்லாடல் உலக அளவில் இடம் பெற்றுள்ளது. எனவே,இவ்வாறு முன்னரே புழக்கத்தில் இருக்கும் சொல்லைச் சொல்வதால் குற்றவாளி என்று சொல்ல முடியாது.

தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய(மே 13) அமைச்சர் இராசேந்திர பாலாசி, “கமல்ஃகாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். தவறெனில், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரத்தில் உள்ள பா.ச.க.வின் அமைச்சர், வேறு யாரும் இவ்வாறு பேசியிருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். எனவே, முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஆளாளுக்கு இதுபோல் பேசி வன்முறை வாதம் பரவும்.

தாய்மீது பற்று கொண்டுள்ளதுபோல் தாய்மொழிமீதான பற்று இயற்கையானது. ஆனால் பா.ச.க.வின் எச்ச மன்னன் தமிழ்த்தீவிரவாதம் என்று சொன்னதால் எல்லாவற்றையும் தீவர வாதம் என்பதுடன் இணைக்கும் பழக்கம் வந்து விட்டது. நகர்ப்புற நக்சல் என்பெதல்லாம் இப்படிப்பட்ட தீவிர வாதமே. எனவே, உண்மையான மதத் தீவிரவாதத்தைக் குறிப்பது தவறாகாது. ஆனால், மதத்தீவிர வாதம் குறிப்பிட்ட மதம் ஒன்றில் மட்டும் இருப்பதாகக் கூறுவது தவறாகும். எல்லா மதங்களிலும் தீவிரவாத வெறி கொண்டு பிற மதத்தவரை ஒடுக்கும் போக்கு உள்ளது. கமல், இந்து மதத்தில் மட்டும் தீவிர வாதம் இருப்பதாகக் கூறவில்லை. முதல் தீவிரவாதி ஓர் இந்து எனத்தான் குறிப்பிட்டுள்ளார். இதன்உட்பொருள் இந்துத் தீவிரவாதிகள் பிற மதத் தீவிரவாதிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது என்பதுதான்.

இப்போதைய பா.ச.க. ஆட்சியில் மதத்தீவிரவாதம் கோலோச்சுவதாகச் செய்திகள் வருவதாலும் இதனால் உலக அளவில் தலைக்குனிவு ஏற்படுவதாலும் மத நல்லிணக்க வாதிகள் கவலையில் உள்ளனர். ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும் பின்பற்றாதிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், தான் சார்ந்துள்ள மதத்திற்காக வன்முறையில் இறங்குவது தவறு. அந்தத் தவற்றை முதலில் செய்தவன் ஓர் இந்து என்னும் உண்மையைக் கூறுவதால் கடிந்து பயனில்லை. மாறாகப் பிற மதத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும். மதமான பேய் பிடிக்காமலும் நல்ல சமயக் கொள்கைகளைப் பின்பற்றியும் வாழ வேண்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (திருவள்ளுவர், திருக்குறள் 127)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல