கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்

தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை.

அவர்,  

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக்  கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சார்நிலை அலுவலகங்களில் மட்டுமல்ல,

மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் என எல்லா வகை அரசு, அரசு சார் அலுவலகங்களிலும் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார். முந்தைய ஆணைகளுக்கிணங்கச் சில அலுவலகங்களில் இப்பணி தொடர்கிறது.

ஆனால், பாராட்டுவது இதற்காக அல்ல, ஏனெனில் இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கப்படும் பொழுது ஆணைகளைப் பிறப்பித்தவர்களும் உயர்நிலையில் உள்ளவர்களும் இவை தங்களுக்கானவை யல்ல எனக் கண்டும் காணாமல் இருப்பார்கள். எழுதி வைத்தால் ஊதிய உயர்வு என்றால் எழுதுவோர் பெரும்பான்மையர் இருக்கின்றனர். உணர்வில் எழுதுவோர் சிறுபான்மையரே! ஏனெனில் அவர்களை வழி நடத்துவோர் ஆணைகளைப் பின்பற்றினால்தானே இவர்களும் பின்பற்றுவர். உயரதிகாரிகள் பலர் ஆங்கிலேயராக அல்லவா இருக்கின்றனர். சில நாள் முன்னர் போக்குவரத்தில்லாத் தெருவைக் கொண்டாடுவதற்கு ஆங்கிலத்தில்தானே பெயர் சூட்டினர்.  மிட்சுபி தொடர்பான விழாவில் முழுமையும் ஆங்கிலப் பதாகைதானே காட்சியளித்தது. இத்தகை ஆங்கிலப் பித்தர்களுக்குத் தலைமைச் செயலர் அறிவுறுத்தியதுதான் பாராட்டிற்குரியது.

அனைத்துத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் என வழி நடத்த வேண்டியவர்களைக் குறிப்பிட்டு அவர் கட்டளை யிட்டுள்ளார். இவ்வாணை தங்களுக்கானதல்ல என அவர்கள் ஒதுங்காமல் முன்னெடுத்துக்காட்டாக இருந்து தத்தம் அலுவலகங்களில் கலைச்சொல் விளக்கமும்  திருக்குறள் விளக்கமும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

எனவே, பொதுவான ஆணையாக இட்டுக் கிடப்பில் போடச் செய்யாமல் அனைத்து நிலை அதிகாரிகளையும் குறிப்பிட்டு அறிவுறுத்தியதால் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு ... அவர்களைப் பாராட்டுகிறோம். இதனைப் பின்பற்றும் அனைவருக்கும் நம் சிறப்பான பாராட்டுகள்.

இந்த நேரத்தில் இதன் தொடர்பான என் பணி நினைவைப் பகிர விரும்புகிறேன்.

நான் மதுரையில் (90-97) இல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.  பொதுவாகத் தமிழ் வளர்ச்சி அலுவலகங்கள் என்றால் கழிப்பறை அருகே அல்லது மாடிப்படியின் கீழே ஒதுக்கப்பட்டிருக்கும். மொழி ஞாயிறு பாவாணருக்கும் அகரமுதலித்திடட இயக்குநர் என்ற முறையில் – அதுவும் தமிழ்த்துறைதானே – மாடிப்படியின் கீழ்தான் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தச் சூழலைச் சுற்றுலா மையம் போல்  மாற்றும் முறையில் நான் செய்த பணி ஒன்று அமைந்தது. நான் ஆட்சிமொழி வகுப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.அத்துடன் அலுவலகத்திற்கு வருவோரும் பயனுற வேண்டும் என எண்ணி, அலுவலக முகப்பினைக் கரும் பலகையாக மாற்றினேன். அதில்,

திருக்குறள்

கலைச்சொல் விளக்கம்

அலுவலகப்பயன்பாட்டிற்கான பிழையின்றி எழுதுவதற்கான இலக்கணக் குறிப்பு

தமிழின் சிறப்பைக் கூறும் செய்தி

என்ற முறையில் எழுதி வைத்தேன். 

அரசுஊழியர்களில் ஒரு பகுதியினர் முதலில் படித்தனர். அன்றாடம் தமிழ்வளர்ச்சி அலுவலக அறையைக் கடந்து செல்லும் மாவட்ட வருவாய் அலுவலர் கரும்பலகைச்செய்தியை ஆட்சியரிடம் தெரிவித்தார். தமிழ் ஆர்வலரான மாவட்ட ஆட்சியர் திரு மணிமாறன் இ.ஆ.ப. இக்கரும்பலகை முன் நின்று எழுதியவற்றைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். இயற்கை யிடர் களைய அந்தப்பக்கம் வரும் ஆட்சியரின் நே்ர்முக அலுவலர்களும் படித்துச் செல்வதை வழக்கமாகவும் பின்பற்றுவதைக் கடமையாகவும் கொண்டனர்.

இதனைப் பார்த்த பிற அதிகாரிகளும் ஊழியர்களும் தவறாமல் படிக்கத் தொடங்கினர். மனு நீதி நாளுக்கு ஆட்சியகத்திற்கு வருகை தந்து காத்திருப்போரும் பிற நாளில் வருகை புரிந்து காத்திருப்போரும் எனப் பொது மக்களும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு வந்து கரும்பலகைத் தகவல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டனர். சிலர் சில சொற்களைக் குறிப்பிட்டு அல்லது எழுதுவதில் நேரும் ஐயங்களைக் குறிப்பிட்டு அவற்றை எழுதுமாறும் வேண்டினர். அவற்றிற்கான விளக்கங்களை எழுதி வைத்ததும் இதில் தங்களின் பங்களிப்பும் இருப்பதாக மகிழ்ந்து வழக்கமான வாசகர் ஆயினர்.

 தமிழ் நாளிதழ் ஒன்றில் இதில் சித்திரையாண்டு பற்றி எழுதியதைக் குறிப்பிட்டு எதிராக எழுதியது. ஆனால், உணர்வாளர்கள் இவ்வாறு எழுதுவதை வரவேற்று  அந்தப்பக்கம் சென்றாலும் படித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

தினமணிச் சுடர் அட்டைப்படக் கட்டுரையாக ‘இப்படியும் சில இளைஞர்கள்’ என என் தமிழ்ப்பணி குறித்தும் எழுதி வெளியிட்டது. இதில், “திருவள்ளுவன், தனது அலுவலகத்தின் முன்புள்ள கரும்பலகையில் வாரமொருமுறை தமிழ் இலக்கணக் குறிப்பு, பிற மொழிச்சொற்களை எப்படி எழுதலாம் என்கிற குறிப்பு, தமிழ் குறித்த சில தகவல்களை எழுதி வைக்கிறார்.” எனக் கட்டுரையாளர் மணா குறிப்பிட்டிருந்தார். குங்குமம் இதழும் ‘தமிழ்ச்சாதனை’ என்னும் தலைப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது.  இதன் பிறகு ஆட்சியகத்திற்குத் தொடர்பில்லாதவர்களும் வந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

இவ்வாறு தமிழ்த்தகவல் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்களிடையே தமிழார்வம் இருக்கத்தான் செய்கிறது. தக்க வழிகாட்டினால் அவர்கள் மேலும் ஆர்வத்தை வளர்த்துப் பயன்பெறுவர் என் பதே உண்மை.

இப்போதும் தலைமைச் செயலர் அறிவுறுத்தத்திற்கிணங்கக் கலைச்சொல்லையும் பொருள் விளக்கத்தையும் திருக்குறளை விளக்கத்துடனும் எழுதி வைத்தால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள் வரும் மக்களும் பயனடைவர். தமிழ்க் கலைச்சொற்களும் திருக்குறளும் எளிய மக்களையும் சென்று சேரும்.

எனவே, அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தலைமைச் செயலர் அறிவுறுத்தலை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியேற்றி விடாமல், ஒரு நாள் எழுதி மறுநாள் மறந்து விடாமல் அன்றாடம் பின்பற்ற வேண்டுகிறோம்!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 672)

இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை -30.04.2054***13.05.2023