கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2
எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்!
– அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்!
– ஈழத்து நிலவன்
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி.
இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள்
திடீர் இறப்புகள், இனம் தெரியாத நோய் என்ற பெயர்களில் ஈழத்தமிழர்களின் சாவுகள் மறைக்கப்படுகின்றன. 2009 இன அழிப்பிற்குப் பிறகு, குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பைச் சேர்ந்த மக்கள் போராளிகள் நூற்றுக்கணக்கானவர்களின் இறப்புகள் பெரும் ஐயத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன.
சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய். இதயநோய், கருப்பை சார்ந்த சிக்கல்கள். இவற்றை விட முதன்மையானது எமது மக்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள்!
தமிழ் இனத்தின் தனித்தன்மையை உருக்குலைத்து அவர்களின் மரபு வழித் தாயகத்தில் அரசு முனைப்புடனான குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. நிலத்தையும் இழந்து வாழ்வடிப்படையையும் இழந்து பெரும் பொருண்மியச் சிக்கலுக்குள் தவிக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை நிலவும் நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலையாக, தற்சார்பு உரிமையுடனும், நீதியுடனும் வாழ முடியும்?
இன அழிப்பு நோக்கிலான அரசுப்பொறிமுறையின் செயல்பாடு
ஏழு ஆண்டுகளாகியும் நடந்த இன அழிப்பை மறைக்கவும் தொடர்ந்து இன அழிப்பை நடத்தவும் எதையுமே ‘உள்ளக’ உசாவல் (விசாரணை) என்ற போர்வைக்குள்ளிருந்தே செய்யவும் முற்படுகிறது இன அழிப்பு அரசு.
“இனப்படுகொலை இலங்கை அரசு 2009 போரில் தமிழர்களின் மீது தடைசெய்யப்பட்ட கொத்துக் (cluster) குண்டுகளால் தாக்கியது” என்று கடந்த மாதம் ‘தி கார்டியன்’ இதழ் சான்றுடன் செய்தி வெளியிட்டது.
இலங்கையில் போர் தொடங்கித் தீவிரமாகிக் கொண்டிருந்த நேரமான 2008 காலக்கட்டத்தில் ஆனி 24, 2039 / சூலை 09, 2008இல் அமெரிக்காவின் படைத் தரப்பிலிருந்து அதன் செயலாளார் இராபர்ட்டு கேத்சு(Robert Gates) கையொப்பமிட்ட ஓர் அறிக்கை வெளிவந்தது. அதில், “கொத்துக் (cluster) குண்டுதான் படைக்கு ஏற்ற ஆயுதம். அதுவே, அமெரிக்கர்களின் உயிரைக் காக்கவும், இலக்குகளை எந்தவிதக் கெடுவாய்ப்பும்(risk) இல்லாமல் அடையவும் உதவுகிறது. போரின்பொழுது இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதால் திட்டமிடப்படாத இலக்குகளைக் குறைக்க முடியும். மேலும், மக்கள் அமைப்பாக ஒன்று சேருவதைக் குறைந்தளவு அழிவின் மூலம் தடுக்க முடியும்” என்றும் அதனால் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவது நல்லதென்றும் அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.
இதனைத்தான் தனக்குக் கொடுக்கப்பட்ட ஏற்பிசைவாக (அங்கீகாரமாக) எடுத்துக் கொண்டு இனப்படுகொலை இலங்கை அரசு 2009இல் தமிழ் மக்கள் மீது இந்தத் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஏவியது.
உலகநாடுகள் விடுதலைப் போர்களை எப்படிப் பார்த்தன, பார்க்கின்றன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
ஆப்பிரிக்க விடுதலைப் போரை பிரித்தானியா – வன்கொடுமை(terrorism) என்றது…
வியத்துனாம் விடுதலைப் போரை அமெரிக்கா – வன்கொடுமை(terrorism) என்றது…
அல்சீரிய மக்களின் விடுதலைப் போரை பிரான்சு – வன்கொடுமை என்றது…
செச்சினிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை இரசியா – வன்கொடுமை என்கிறது…
திபெத்திய மக்களின் விடுதலை உணர்வைச் சீனம் – வன்கொடுமை என்கிறது…
பாலத்தீனிய விடுதலைப் போரை இசுரேல் – வன்கொடுமை என்கிறது…
குருதீசு மக்களின் விடுதலைப் போரைத் துருக்கி – வன்கொடுமை என்கிறது…
இப்படியே பட்டியல் நீள்கிறது…
திரை மறைவுப் போர்களை மட்டுமே நம்புகின்ற கோழைத்தனமான உலக மக்களாட்சி ஆயுதப் புரட்சியைப் பார்த்து அச்சம் கொள்வதைத் தமிழினம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
உரிமைகளை மீட்பதற்காக ஆயுதங்களின் உதவியுடன் போராடுகின்ற போராளிகளைக் கொடிய மனிதர்களாகவும்…
இம்மாதிரியான போராளிகளைவிட்டு வெகுதொலைவு விலகி நிற்பவர்களை மிகவும் தூய்மையான மனிதர்களாகவும் தற்போதைய உலகம் உருவகப்படுத்துகிறது!
“தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகப் போராடும்பொழுது அந்தப் போராட்டங்களை ஆயுதங்களினால் தடுத்து நிறுத்துவதற்கு மக்களாட்சி முற்படுமானால் அந்தப் போராட்டக்காரர்களும் கண்டிப்பாக ஆயுதங்களைக் கையிலெடுப்பார்கள்” – இதை எந்த வகையில் தவறென்று கூற முடியும்?
இனத்தின் உரிமைபற்றிப் பேசினால் இனவாதி(Racist)! இனத்தின் தன்னாட்சி உரிமை பற்றிப் பேசினால் வன்கொடுமையாளர்(Terrorist)! இதுதான் வல்லரசு நாடுகளின் கோட்பாடு.
“உணர்விழந்த நீதி போர்க்களத்தை மீளத் திறக்கும்!” தமிழர்கள் விடுதலை கோரிப் போராடினால் “அது வன்கொடுமை(terrorism). போராடாதீர்கள்!” என்கின்றன பொய்யான உலகநாடுகள். ஆனால், இதே உலகநாடுகள் தங்கள் அரசியல், பொருளியல், நிலவியல் நலன் சார்ந்து இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. அழிப்பவன் வன்வலுவைப் பயன்படுத்தும்பொழுது, அரசத்தந்திரம்(Diplomacy), அரசத்தந்திர வழியில் (Diplomatically) என்கிற மாயையில் நாம் மென்வலு பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.
ஈழத்தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாகவே இலங்கையின் புத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழத்தமிழ் மக்களை ‘இலங்கையர்’ என்கின்ற அடையாளத்திற்குள் உட்படுத்துவதே சிங்கள அரசினதும் அதன் அடிவருடிகளினதும் நோக்காகும்.
2009ஆம் ஆண்டு போர் நிறுத்தப்பட்ட கையோடு தமிழ் மக்களைத் தோல்வியடைந்தவர்களாகப் பார்த்த தென்னிலங்கை, அவர்களை வல்லாளுகைக்கு உட்படுத்தி, அடிமைகளாகத் தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை அப்பொழுதே நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தது.
1978இல் அறிவிக்கப்பட்ட வன்கொடுமைத்(பயங்கரவாதத்) தடைச்சட்டமானது இராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் மிகவும் கொடுமையானதாக இருந்தது. இந்த நிலை தற்பொழுதும் – சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் – தொடர்கிறது. வன்கொடுமைப் பொறிமுறையானது தமிழ் மக்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றது.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களை வல்லாளுகை செய்யும்(ஆக்கிரமிக்கும்) நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள படையின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்ற’த்துக்கான அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை தலைமைப் படை முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர, தலைமை முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களுக்கு இன்று வரை கொடுக்கப்படவில்லை.
போர் நிறுத்தப்பட்டதிலிருந்து தமிழர் தாயகம் சிங்கள அரசாலும் அதன் அரக்கர் படையாலும் இரண்டகர்களாலும்(துரோகிகளாலும்) வல்லாளுகை செய்யப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கை, கல்வி, சொத்துகள், மேம்பாடு, கட்டுமானம் போன்ற அனைத்திலும் இவர்களின் தலையீடு காணப்படுகிறது.
தமிழர் பகுதிகளில் இப்போது வல்லாளுகையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழர் நிலப்பகுதியில், மக்களின் காணிகளில் பாரியப் படை முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், அவர்களது நிதிநிலையை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும், குடிமையியல்(civil) தொடர்பானவற்றில் தலையிடுவதன் மூலமும் தமிழ் மக்களை சிங்கள அரசு வல்லாளுகை செலுத்தி வருகிறது.
வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் போராட்டங்களை அடக்கிவிட்டுக் காலத்தை கடத்துவதிலேயே ‘நல்லாட்சி‘ அரசு செயல்பட்டு வருகிறது. மக்களது அடிப்படைச் சிக்கல்களையே ஓர் ஆண்டுக்கு மேல் தீர்க்க முடியாதவர்கள் எப்படித் தேசிய இனச்சிக்கலுக்குத் தீர்வு தருவார்கள்?
– ஈழத்து நிலவன்
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
( தொடர்ச்சி காண்க ” கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2)
Leave a Reply