(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 தொடர்ச்சி)

 திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24

 

இருபத்து மூன்றாம் பாசுரம்
 தமிழரின் பெருமை எங்கே?
கரைநாடாம் மூன்று கடல்சூழ் தமிழ்மண்
திரைமேவி நாவாய் செல,உயர்ந்த பண்டம்
சரியாய்க் கொளக்கொடுத்தும் செய்தார் அறமாய்
இறைச்சுங்கம் வாங்கிஉரு முத்திரையும் வைத்தார் !
கரையெங்கும் வாங்கிவிற்கும் குன்றாப் பொருட்கள் !
பெருமைகொளும் நெஞ்சம்;புகழ்பாடும் நம்வாய்
அருமையெலாம் எங்குற்று? அருந்தமிழர் ஓங்கிப்
பொருப்பில் தமிழ்க்கொடி ஏற்றவைப்போம், எம்பாவாய் !

 

இருபத்து நான்காம் பாசுரம்

 அயல்நாட்டறிஞர்களை அழைத்தோம்புக!
எங்கோ பிறந்தவர்கள் இம்மண்ணில் வாழவந்தே
சங்கம் வளர்த்ததமிழ் தாம்பயின்று மேலுயர்ந்தார்
மங்கா முயற்சியினால் முத்தமிழில் நூல்படைத்தே
தங்கள் மொழியுள்ளும் நம்செல்வம் கொண்டுசென்றார்!
என்றோ நடந்ததுகாண்;இன்றதுபோல் கண்டிடவே
செங்கோலார் ஓம்பிச் செயவேண்டும்; மேனாட்டார்
தங்கி மொழிகட்குள் மாற்றம் புரிந்துயர
நங்காய், தமிழரசை நாம்செயவா, எம்பாவாய் !

(தொடரும்)

கவிஞர் வேணு குணசேகரன்

கவிஞர் வேணு குணசேகரன்