(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி)

 திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22

 

இருபத்தோராம் பாசுரம்
மேம்பட்ட தமிழர் நாகரிகம்

ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்;
யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்;
பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்;
சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்!
யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு!
ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள்
காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும்
தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் !

 

இருபத்திரண்டாம் பாசுரம்
தமிழ்க்கடமைகள் பலப்பல செயவேண்டும்

கத்துகடல் உத்தமமாம் நித்திலமே! கொத்துமலர்
மொத்தமுமிழ் சுத்தமணம் அப்புகிற சித்திரமே!
மெத்தைதனில் தத்தையெனச் சுற்றுவிழி பொத்தியொரு
நித்திரையில் சொக்கிவிழுந் துற்றனையே வெற்றுறக்கம்!
முத்தமிழின் புத்துணர்வுன் சித்தமதைத் தைத்திடவே
புத்துயிர்த்த உத்தமியே! எத்தனையோ மெய்த்தொழில்கள்
இத்தமிழ்மண் வித்துகளாய் வைத்துவெற்றி புத்தமுதாய்த்
துய்த்திடவே சித்தமதில் நத்திடவா, எம்பாவாய்!

(தொடரும்)

கவிஞர் வேணு குணசேகரன்

கவிஞர் வேணு குணசேகரன்