(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி)

kumurumaadugal

3

 கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

 இதன் தொடர்பாகத் தும்மலப்பட்டியைச்சேர்ந்த முருகன் கூறுகையில், “வெள்ளாட்டுக்கும், செம்மறியாட்டுக்கும் இருக்கிற வேறுபாடு என்ன வென்றால், வெள்ளாடு புல்பூண்டுகளை மேய்வதுடன் இரண்டு காலையும் தூக்கி மரத்து மேலே வைத்துத், தழைகளைத் தின்னும். ஆனால் செம்மறியாடுகள் குனிந்து கொண்டே மேயுமே தவிர, மேல எழும்பித் தழைகளைத் தின்னாது. செம்மறியாடுகளை இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கிறோம். இதன் மூலம் பலகோடி அயலகச் செலவாணி வருகிறது. பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குது. இந்தத் தடையால் எல்லாமே பறிபோய்விடும் என்று அச்சமாக இருக்கிறது” என்றார்.

  “காடுகளைப் பொருத்தவரை புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கு ஆடுகளை மேய்ப்பதில்லை. காரணம் செடிகளை ஆடுகள் தின்றுவிடும் என்பதுதான். வளமான காடுகளும், வனங்களும் பசுமையாக இருக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு அக்கறை இருக்கிறது. அப்படியிருக்கும்போது எதற்காக இப்படி ஒரு தடை” எனக் கேள்வி எழுப்பினார்.

“மேலும் வனப்பகுதி என்றால் அடர்ந்த காட்டுப்பகுதி இல்லை. வனத்தையொட்டி ஓரஞ்சாரம்தான் மேய்ப்பார்கள். சொல்லப்போனால் வனப்பகுதியில ஆடு, மாடுகள் மேய்வதில்லை. அவற்றின் புழுக்கையும் சாணமும் நல்ல எருவாகத்தான் அமையும். எதையும் எண்ணிப்பாராமல் விதித்த தடையை உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.

  இதன் தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது உயர் அதிகாரிகள் உத்தரவின்றி பத்திரிக்கைகளுக்குப் பேட்டிக்கொடுக்கக்கூடாது என்றார். பெயர் கூற விரும்பாத வனவர் கூறுகையில்,

  “கால்நடை வளர்ப்பவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆடுகள் மேய்ந்தால் நாங்கள் வைக்கின்ற சிறுசெடிகள் அவற்றின் கால் குளம்புகளில் அடிபட்டுப் பாழாகின்றன. மேலும் ஆடு மேய்ப்பதால் வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் பட்டி அமைப்பதால் ஆடுகளைத் தின்பதற்கு சிறுத்தைப்புலி, புலி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் இடம் பெயருகின்றன. ஒரு தடவை சுவைபார்த்தால் அதனைப் பின்பற்றி வனத்தை ஒட்டியுள்ள ஊர்களில் உள்ள ஆடு, மாடு, ஏன் மனிதர்களைக்கூட அடித்துக்கொல்லுகின்றன. ஆகையால் ஆடு மேய்க்கத் தடை விதித்துள்ளோம்” என்றார்.

  அரசோ ஒரு பக்கம் விலையில்லா ஆடுகளைக் கொடுத்து ஆடு வளரக்கும் தொழிலை ஊக்கப்படுத்துகிறது. வனத்துறையோ ஆடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கிறது. எனவே ஆடுகள் மேய்ச்சலுக்கு அரசு வனப்பகுதியில் சில இடங்களைத் தேர்வு செய்து அங்கே மேய்ச்சலுக்குப் பயன்படுத்த நடைமுறைப்படுத்த வழிவகை செய்யவேண்டும். கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் சிற்றூர்ப்பொருளாதாரத்தின் இரண்டு கண்கள் போன்றன. ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணெயும் வைப்பது ஆபத்துதான். இதே நிலைமை தொடர்ந்தால் உயிரினக் காட்சிச் சாலைகளுக்கு அனுப்பப்படும் பட்டியலில் ஆடுகளும் தங்களை இணைத்துக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை. மேலும் வெளிநாடுகளிலிருந்து ஆடுகளை இறக்குமதி செய்யும் காலத்தின் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டில் கால்நடைகள்

  புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் சிலவற்றில் ஊர்ச் சண்டைகளில் மாடுகள் அழிக்கப்பட்டதைக் காணலாம். “கீழைக்குறிச்சி ஊரவற்குப் படை ஒடுக்கம் சிந்து கல்வெட்டிக் குடுத்தபடி மன்பே எங்கள் போளுர் நரசிங்கத்தேவர் நாள் முதல் அடைக்கலம் காத்தார் நரசிங்கத்தேவர் நாள் அளவாக உற்றுநிலை அற்ற வினோதப் பகையாள் அங்கும் இங்கும் நால்பது நூறு மனித்தரும் பட்டு சிறைபடும் சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாய் ………”.என்று தொடர்கிறது (புதுக்கோட்டை 688,691)

  தொடக்கத்தில் மாடுபிடி சண்டையாக இருந்தது பிற்காலத்தில் வெட்சித்திணை என்ற இலக்கிய மரபாயிற்று.

 நிரைமீட்க வருகின்ற வீரத்தலைவனுக்குக் கறிசோறும் கள்ளும் தரப்பட்டதை மதுரைப் பேராலவாயர் (புறம் 262) சுட்டுகிறார். நிரைகவர்ந்தார் செய்யும் வெற்றிவிழாவில் கவர்ந்து வந்த பசுக்களில் கொழுத்த பசுவினைக் கொன்று உண்டு மகிழ்ந்தனர். நடுகல் வீரர்களுக்கு அங்கேயே சமைத்து மாமிச உணவை அதாவது கறிச்சோற்றைப் படைத்துள்ளனர் (புறம் 329)

கால்நடைகளைக் கொன்ற புலியை எதிர்த்து மடிந்த வீரனின் நடுகல்

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் என்ற ஊரில் கால்நடைகளைக் கொன்று குவித்த புலியுடன் ஒரு வீரன் சண்டையிட்டு மடிந்துள்ளான். அவன் நினைவாக இன்றும் அப்பகுதி மக்கள் நடுகற்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

கால்நடையைப்பற்றிய நடுகற்கள்

  கருநாடகம், தமிழ்நாட்டைப்போலவே ஆந்திர மாநிலத்திலும் கால்நடைகள் தொடர்பாகச் சண்டை ஏற்பட்டு அதில் இறந்தவர்களைப்பற்றிய நடுகற்கள் தொடக்கக் காலத்தில் நடப்பட்டுள்ளன. சித்தூர், புங்கனூர், மதனப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 63% வீரக்கற்கள் உள்ளன. நல்லம்பள்ளி மலைத்தொடர் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட பகுதியாகும்.

 மழை குறைவாக இருப்பதுடன் புல்வெளிகள் பெருமளவில் இப்பகுதியில் இருப்பதால் கால்நடைகளை நன்றாக வளர்க்க முடியும். நன்செய் வேளாண்மைக்கு இப்பகுதி ஏற்றதல்ல. எனவே இராயலசீமைப்பகுதி மக்கள் ஆடுகளைத் தங்கள் செல்வமாகக் கருதி வளர்த்து வந்தனர். எனவே கால்நடைகளைக் கொள்ளையடிப்பதும், அதனை மீட்பதும் இப்பகுதிகளில் அடிக்கடி நடந்துள்ளன. இதனால் அடிக்கடி போர்கள் நடைபெற்றுள்ளன. அந்தப்போரில் இறந்தவர்களுக்கு நடுகள் வைத்துள்ளனர். இன்றைக்கும் போயர், கொல்லர், இலம்பாடி எனப்படும் சுகலிகள் ஆகிய பிரிவினர் கால்நடைகளையே நம்பி வாழ்கின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் தொழுவத்தில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

93vaikaianeesu_name