(காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: தொடர்ச்சி)

 காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 2/2

பாடல் 3 :  நோக்கம்

 

ஒவ்வொரு நாளும் வகுப்பில் பாடம் தொடங்கும் முன் பாடப்பட்டப் பாடல்கள்:

கலைமகள் மலரடி பணிந்திடுவோம்

கருத்துடன் கல்வியைப் பயின்றிடுவோம்

அமிழ்தினும் இனியது தமிழ்மொழியே

அது தான் என்றும் நம் விழியே

இமை போல் நாம் அதைக் காத்திடுவோம்

இயல் இசை நாடகம் வளர்த்திடுவோம் –  கலைமகள்

மலைகளில் சிறந்தது நம் நாடு

சரித்திரப் புகழ்ப்பெற்ற  திருநாடு

தாய் என நாம் அதைப் போற்றிடுவோம்

தன் மானக் கொடி தன்னை ஏற்றிடுவோம் – கலைமகள்

   இந்தப்பாடல் மாணவர்கள் ஒவ்வொரு பாடவேளைக்கு முன்பும் வகுப்பில் பாடியதாகும். கல்விக்குத் தெய்வமான கலைமகள் அருளைப் பெற வேண்டி பாடுகிறார்கள். இப்பாடலில் தமிழ்மொழி, தேசம் ஆகியனவும் கருத்துரைக்கப்படுகிறது. இன்று சில பள்ளிகளில் தேவாரம் போன்ற திருமுறைகளைப் பாடுகிறார்கள்.

 

பாடல் 4 : நோக்கம்

பள்ளியில் அவை கூடலின்போது பாடப்பட்டப் பாடல்:

மாதா பிதா குரு தெய்வம் – அவர்

மலர் அடி தினம் தினம்  வணங்குதல்

செய்வோம்  (மாதா )

ஓதாதிருப்பது தீது – நாம்

ஒழுங்குடன் பள்ளிக்குச் செல்வோம் தப்பாது

ஓதி உணர்ந்தது போலே – நாம்

உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே   (மாதா )

காலலையில்  எழுந்ததும்  படிப்பு – பின்பு

காலைக் கடனையும் உணவையும் முடித்து

நூலைக் கையிலே எடுத்து – பள்ளி

நோக்கி நடந்து கற்பதே சிறப்பு   (மாதா )

தெய்வம் தொழுதிட  வேண்டும் – நம்

தேசத்தின் மீது அன்பு செலுத்திட வேண்டும்

கைத்தொழில் பழகிட வேண்டும் – மகாத்மா

காந்திசி  சொற்படி நடந்திட வேண்டும்   (மாதா )

    இந்தப்பாடல் மாணவர்கள் வணங்க வேண்டிய நால்வரான அம்மா, அப்பா, ஆசிரியர், தெய்வம் ஆகியோரைக் குறிக்கிறது. மாணவர்களின் கடமைகளான நாள்தோறும் பள்ளிக்குச் செல்லல், படித்தல், தெய்வத்தை வணங்குதல், தேசப்பற்று போன்ற கருத்தாழமிக்க நடவடிக்கைகளை விவரிக்கிறது.

     ஆகவே அந்தக் காலத்தில் பாடப்பட்ட பாடல்களின் பயன்பாடு இன்று காண்பது அரிதாகிவிட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பள்ளியில் இந்த நான்கு பாடல்களைத் தவிர்த்து மேலும், சில பாடல்களும் பாடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டிற்கு ‘அருள்வாயே நீ அருள்வாயே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

ஆய்வுத்தரவுகள்.

  1. சுட்டி மயில், மார்ச்சு 2016.
  2. ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர், 2015.
  3. நேர்காணல் (திரு பார்த்திபன் கேசவன்).

முத்துக்குமார் பழனிசாமி

காயத்திரி மனோகரன்

தமிழரசி இளங்கோவன்

தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியர் கல்விக் கழகம்

கோலாலிப்பிசுபகாங்கு.