நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? 

  “தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மாவட்டம்தோறும் தொடங்கத் தடையில்லாச் சான்றிதழையும் 30 காணி (ஏக்கர்) நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி ஆணை அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் போன்றோரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

  ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் தலைவர் வேல்முருகன் அவர்கள், “முதலில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் முதலான உயர்கல்வியைத் தமிழர்களுக்கு மறுக்கும் சூழ்ச்சி எனில், நவோதயாப் பள்ளிகளோ அடிப்படைப் பள்ளிக் கல்வியையே ஒழிக்கும் நயவஞ்சகத் திட்டம். நமது அரசியலமைப்புப் பட்டயம்(சாசனம்) பள்ளிக்கல்வியை மக்களின் அடிப்படை உரிமையாக உறுதி செய்திருக்கிறது. ஆனால், விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் இதனை உறுதி செய்ய மறுத்தே வருகிறார்கள். இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிக் கட்டமைப்பை அழித்தொழிப்பதே ஆர்.எசு.எசு.(RSS) இயக்கங்களின் நோக்கம். அதற்காக மோடி திணிப்பவைதாம் நவோதயா பள்ளிகள். இதனை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்மொழி அழிந்து போகும்” என்கிறார் அதிரடியாக.

  தமிழக பா.ச.க., தலைவர் தமிழிசை சௌந்தரராசன் நவோதயா பள்ளிகளை வரவேற்றுச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார். “அனைத்து விதமான புத்தாக்கக் கட்டமைப்புகளுடனான நுண்ணறிவுக் கல்வி நாட்டுப்புற மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். இன்று இந்திய அளவில் நவோதயாப் பள்ளிகளில் படிப்பவர்களில் 44% ஆதி திராவிட மாணவர்கள். விடுதிக் கட்டணம் 200 உரூபாய்தான். பெண் குழந்தைகள், ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் இலவயம். பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் 18 பள்ளிகள் செயல்படுகின்றன. அந்தக் கட்சி ஆளுகின்ற கேரளத்தில் 14 பள்ளிகள், திரிபுராவில் 4 பள்ளிகள் என நவோதயாக் கல்வி வழங்கப்படுகிறது. பன்னாட்டுத் தரத்துடன் ஆய்வகம், நூலகம், கணினிப் பிரிவு, விளையாட்டரங்கம் கொண்ட நவோதயாப் பள்ளிகளை எதிர்ப்பது தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைச் சிதைப்பதாகும்” என்கிறார்.

  நவோதயா பள்ளிகளுக்கு எதிராக இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வுப் பரப்புரையை முன்னெடுத்திருக்கும் தி.மு.க-வின் நெல்லை எட்வின், “நாட்டுப்புற மாணவர்களிடமிருந்து மெல்ல மெல்ல இந்தி மொழியைத் தமிழகத்தில் நிலைநிறுத்த 1986-இல் இராசீவு காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டவைதாம் நவோதயா பள்ளிகள். இதுவரை 598 பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளியைத் தொடங்க 25 முதல் 30 காணி நிலத்தை இலவயமாகத் தமிழ்நாடு அரசு ஒதுக்கித் தர வேண்டும். 6ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கும்பொழுது நுழைவுத்தேர்வு வைத்துத் தகுதி பார்த்துத்தான் சேர்க்கப்படும். இங்கு இந்தி மொழி கட்டாயமாகவும் தமிழைக் கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதப் பாடங்கள் ஆங்கில வழியாகவும் கற்றுத் தரப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் கொண்ட இரண்டு பிரிவுகளில் மொத்தம் 80 மாணவ – மாணவியர் சேர்க்கப்படுவர். இவர்களுக்கு அனைத்தும் இலவயம். பார்ப்பதற்கு இவையெல்லாம் கல்வியை இலவயமாகத் தருவதற்கான முயற்சி போல் தோன்றும். ஆனால், உண்மையில் நம் தமிழ் மொழியை அழிப்பதற்கான திட்டம் இது. தமிழகம் இருமொழிக் கொள்கையைக் கொண்டது. நவோதயா பள்ளிகளோ மும்மொழிக் கொள்கை உடையவை. மேலும், இந்தியைக் கட்டாயமாக்குகிறது. இதனால்தான் இதனைத் தொடக்கத்திலேயே எதிர்க்கிறோம்.

  மாணவர் ஒவ்வொருவருக்கும் கேந்திரிய வித்தியாலயம் மூலம் 28,000 உரூபாய், நவோதயா பள்ளிகள் மூலம் 85,000 உரூபாய் அரசுப் பள்ளிகளில் 4,000 உரூபாய் என மத்திய அரசு செலவு செய்கிறது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம்தாம். நம்முடைய வரிப்பணத்தை எடுத்து ஏன் சிலருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்? மாணவர்கள் எல்லாரும் பயன்பெறும் வகையில் இந்த நிதியை அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்து அவற்றை மேம்படுத்தலாம். அதனால் நாம் தாய்மொழியை அழிக்கத் திட்டமிடும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு வர விடக்கூடாது. மாறாக, பன்னாட்டு அளவில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய்வதும் அதற்கான பாடத்திட்டங்களை  உருவாக்குவதும் இன்றியமையாதது. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது” என்கிறார் மிக அழுத்தமாக.

  தாய்மொழியாம் தமிழ் மொழிக் கல்விக்காகப் போராடி வரும் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், “நவோதயாப் பள்ளிகள் மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றுகின்றன என்பதெல்லாம் புரட்டு வேலை. தமிழ் முதலான தேசிய மொழிகளைப் பேசுபவர்களை இந்தியின் பக்கம் இழுப்பதற்காக, தொடக்கத்தில் தேசிய மொழிகளில் பாடங்கள் உள்ளன. பின்னர் முழுமையாக இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் தாவி விடுகின்றன. 6ஆம் வகுப்பில் தொடங்கி 7ஆம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு வரைதான் தமிழ் இருக்கும். அதன் பிறகு இந்தியும் ஆங்கிலமும்தாம். 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9ஆம் வகுப்பில் சேர வேண்டுமாயின் அதற்காக வைக்கப்படும் நுழைவுத்தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத வேண்டும். ஆக, 8ஆம் வகுப்பிலேயே தமிழ் விரட்டப்பட்டு விடுகிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று பல வழக்குகளில் உச்சநீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. அதனை அழுத்தமாகச் சொல்லும் விதத்தில் தமிழ்நாடு அரசு நவோதயாப் பள்ளிகளை வர விடாமல் தடுக்க வேண்டும். தீர்ப்பை மாற்றி 30 காணி நிலம் முதலான கட்டமைப்பு வசதிகளுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் பன்னாட்டுத் தமிழ் வழிப் பள்ளிகளைத் தொடங்கத் தமிழ்நாடு அரசு முயல வேண்டும்” என்கிறார்.

  பள்ளிக் கல்விக்கான பொதுமேடையின் மாநிலச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்சு கசேந்திரபாபு அவர்கள், “கல்வி கற்றல் வாய்ப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் சமமாகத் தரப்பட வேண்டும் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். 1968-இல் கல்விக் கொள்கையை உருவாக்கியபொழுது கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையின்படி, ‘பொதுப்பள்ளி முறைமையை ஏற்படுத்துவோம்’ என்று சொன்னது மத்திய அரசு. ஆனால், இராசீவு தலைமையமைச்சராக இருந்தபொழுது பொதுப்பள்ளி முறைமையைக் கைவிட்டு, நேர்மாறாகக் கொண்டு வரப்பட்டவைதாம் நவோதயாப் பள்ளிகள். அப்பொழுதே இந்தத் திட்டத்தை மொழி என்கிற தளத்திலும், குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது என்கிற தளத்திலும் பல தரப்பினரும் எதிர்த்தனர். இவற்றையெல்லாம் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் நவோதயாப் பள்ளிகளைப் பற்றி மட்டும் கவலை கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில், ‘தரமான பள்ளிகளையும் பாடத்திட்டங்களையும் மேம்படுத்துவதற்கும், கற்றல் வாய்ப்பையும் எல்லாக் கல்வி முறைமைகளையும் பரவலாக்குவதற்கும் எங்களுக்குப் போதுமான, கூடுதலான நிதியை ஒதுக்குங்கள்’ என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டும். இந்த நயன்மைகளை யெல்லாம்(நியாயங்களை யெல்லாம்) நீதிமன்றத்தின் மேல்முறையீட்டில் சொல்லி, நவோதயா பள்ளிகளுக்குரிய எல்லா வசதிகளும் மாநிலப் பாடத்திட்டத்தினைக் கற்பிக்கும் எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் கொடுக்க வைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அந்தச் செயலை மேற்கொண்டு நவோதயா பள்ளிகளைப் புறம்தள்ளத் தமிழ்நாடு அரசு களத்தில் இறங்குவது இன்றியமையாதது” என்கிறார்.

  காலந்தோறும் கல்விக் கொள்கையில் மாற்றங்கள் தேவை. புதிய அறைகூவல்களை (சவால்களை) எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்தால்தாம் மாணவர்களால் உலகளவிலான போட்டிச் சூழலை எதிர்கொள்ள முடியும். அத்தகைய கல்வி என்பது தாய்மொழியிலான சிந்தனையை வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே கல்வி வல்லுநர்களின் ஆய்வு முடிவாக இருக்கிறது. இந்தியாவில் கல்வி முறையை முழுமையாகத் தீர்மானிக்கும் இடமாக மத்திய அரசு விளங்கினால் இந்தித் திணிப்புக்கே முன்னுரிமை தரப்பட்டு, பிற மொழிகள் அனைத்தும் சிதைக்கப்படும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு வந்து மத்திய அரசின் தாராளமான நிதி உதவியுடன் காலத்திற்கேற்ற பாடத்திட்டங்கள் – கட்டமைப்பு வசதிகளுடனான கல்வியைத் தரும் வகையில் அரசுப் பள்ளிகளை மாற்றினால் மட்டுமே நவோதயா போன்ற அதிகார மிரட்டல்களை எதிர்கொள்ள முடியும். அதற்கு மாநில அரசு வலிமையாக இருக்க வேண்டும்.

– இரா.இளையசெல்வன்

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

நன்றி: நக்கீரன், செட்டம்பர் 18 – 20, 2017