காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி
நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான – உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’ இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம் ‘தமிழ்’ என்னும் சொல் தோற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆயிரக்கணக்கில் உள்ள எடுத்துக்காட்டுகளை அள்ளிவீசினால் வாயடைத்துப் போய் அமைதி காக்கின்றனர்; அப்பொழுதும்கூட உண்மையை ஏற்கும் பண்பு அவர்களிடம் இல்லை. ‘தமிழ்’, தமிழ் இலக்கியங்களில் எத்தனை இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது என்பதை முனைவர் .கிருட்டிணன் தம்முடைய ‘தமிழ்நூல்களில் தமிழ்மொழி தமிழ் இனம் தமிழ்நாடு’ என்னும் நூலில் பின்வருமாறு(பக்கம் 222) குறித்துள்ளார்.
வ.எண் |
காலம் | நூல் |
எண்ணிக்கை |
1. | கி.மு.3500 | தொல்காப்பியம் |
5 |
2. | கி.மு.2500 | சங்க இலக்கியம் |
21 |
3. | கி.பி.200-500 | சிலப்பதிகாரம் |
24 |
4. | மணிமேகலை |
5 |
|
5. | திருவள்ளுவமாலை |
6 |
|
6. | திருமந்திரம் |
10 |
|
7. | கி.பி.500-900 | அப்பர் தேவாரம் |
7 |
8. | சம்பந்தர் தேவாரம் |
260 |
|
9. | சுந்தரர் தேவாரம் |
48 |
|
10. | நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் |
93 |
|
11. | நந்திக்கலம்பகம் |
4 |
|
12. | பாண்டிக்கோவை |
30 |
|
13. | பெருங்கதை |
2 |
|
14. | முத்தொள்ளாயிரம் |
5 |
|
15. | திருவாசகம் |
1 |
|
16. | திருக்கோவையார் |
1 |
|
17. | . கி.பி.1000-1200 | கல்லாடம் |
22 |
18. | பதினோராந் திருமுறை |
43 |
|
19. |
சீவகசிந்தாமணி |
6 |
|
20. | கம்பராமாயணம் |
18 |
|
21. | பெரிய புராணம் |
313 |
|
22. | அம்பிகாபதி கோவை |
3 |
|
23. | கி.பி.1200-1900 | திருவாரூர்க் கோவை |
8 |
24. | மதுரைக்கோவை |
32 |
|
25. | தஞ்சைவாணன் கோவை |
9 |
|
26. | குலோத்துங்கன் கோவை |
7 |
|
27. | வில்லி பாரதம் |
18 |
|
28. | திருவிளையாடற் புராணம் |
65 |
|
29. | குமரகுருபரர் பாடல்கள் |
105 |
|
30. | குற்றாலக் குறவஞ்சி |
10 |
|
31. | தமிழ் விடு தூது |
15 |
|
32. | திருவருட்பா |
24 |
|
33. | திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ் |
35 |
|
34. | குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் |
8 |
|
35. | கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ் |
5 |
|
மொத்தம் |
1268 |
மேலும் பல நூல்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயர்களின் மூலமும் தமிழ் இடம் பெறுகின்றது. அமிழ்து, அமிழ்து, என்பதைச் சேர்த்துச் சொன்னால் அமிழ்தமிழ் எனத் தமிழ் வரும் என்பர். அதற்கேற்ப
“கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்”
என்னும் வரிகள் (சிறுபாணாற்றுப்படை 225-227) உள்ளன. இங்கே ‘தேம்பெ ய்து அமிழ்து பொதிந்து’ என்று வரும் இடத்தில் தமிழ் எனத் தோன்றுவதைப் பார்க்கலாம்.
இத் தொடரில் நாம் தமிழ் இடம் பெறும் பாடல் வரிகளைப் பார்க்கலாம். (தமிழ் இடம் பெற்ற வரிகளை மட்டும் குறிப்பிடாமல் பொருள் புரிவதற்கு அல்லது மேற்கோள் தேவை கருதி அவ்வரி இடம்பெற்ற பகுதியாகத் தரப்படுகின்றன.)
- தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )
- செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)
- செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)
- தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
- செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)
- தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ் நனை, மறுகின் மதுரை
(இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்,
சிறுபாண் ஆற்றுப்படை 66-67)
- கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி
(கபிலர், பதிற்றுப்பத்து 63.9-10)
- தமிழ்வையைத் தண்ணம் புனல்
(ஆசிரியன் நல்லந்துவனார், பரிபாடல் 6.60)
- இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார், இக் குன்று பயன்.
(குன்றம்பூதனார், பரிபாடல் 9. 24-26)
- பரிமா நிரையின் பரந்தன்று வையை
(பரிபாடல் திரட்டு 4.1-2)
- 11. தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
(பரிபாடல் திரட்டு 8.5)
- தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை
(பரிபாடல் திரட்டு 9.1-3)
- தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே
(மாமூலனார், அகநானூறு 31.14-15)
- தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை
(நக்கீரர், அகநானூறு 227.14-15)
- இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
(குடபுலவியனார், புறநானூறு 19.1-2)
- வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
(வெள்ளைக் குடி நாகனார், புறநானூறு 35.2-4)
- அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
(மோசிகீரனார், புறநானூறு 50.10)
- அவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்
(ஐயூர் முடவனார், புறநானூறு 51.4-5)
- தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
(காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், புறநானூறு 58.13)
- வையக வரைப்பில் தமிழ்அகங் கேட்பப்
(கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், புறநானூறு 168.18)
- தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப்
(வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், புறநானூறு 198.12)
- தாம் வேண்டும் கூடல் தமிழ்
(மதுரைக்காஞ்சி தொடர்பான தனிப்பாடல்)
- தண் தாரான் கூடல் தமிழ்
(மதுரைக்காஞ்சி தொடர்பான தனிப்பாடல்)
ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு பற்றிய குறிப்பில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)
- மதுரைத் தமிழ்க் கூத்தனார் (சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)
- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்(சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)
- மதுரைத் தமிழ்க்கூத்தனார் நாகன் தேவனார்(சங்கக்காலப்புலவர் பெயரில் இடம் பெற்றுள்ள ‘தமிழ்’)
(தொடரும்)
தரவு : தமிழ்ச்சிமிழ், இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply