தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர்

கோவை ஞானி காலமானார்!

 

திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல்  முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி  இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார்.

முற்றிய நீரிழிவு நோயால் பார்வையை இழந்தும்(1988) தளராமல் முன்னிலும் மிகுதியாகப் படைப்புகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளரின் செயலுக்கு இயற்கை ஓய்வு கொடுத்து விட்டது.

கோவை என்றால் நினைவிற்கு வருபவர்களில் முதலாமவர் அறிவியலறிஞர் கோ.துரைசாமி(நாயுடு) என்னும் (ஞ்)சி.டி.நாயுடு. இரண்டாமவர் கோவை ஞானி என அடையாளம் காணப்பட்டவர், அடையாளத்தை நிலைக்கச் செய்து விட்டு மறைந்து விட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் கருமாத்தாம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த சோமனூர் இவரின் பிறந்த ஊர்.  கிருட்டிணசாமி, மாரியம்மாள் ஆகிய பெற்றோரின் எண்மக்களுள் ஒருவர். ஆனி 17, 1966 / 1-7-1935 இல்  பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பழனிச்சாமி.

கி.பழனிச்சாமி நண்பரால் ஞானியானார். இவரின் இளமைக்கால நண்பர் துரைசாமி ஞானி என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தாராம். அவர்  ஒருநாள், “இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்” என்றாராம். தத்துவத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரும் அன்று ஞானி எனப் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். ஊரிலும் கோவையிலும் கல்விகற்ற பின்னர், அண்ணாமலைப்பல்கைலக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றார். தன் பார்வை இழப்புவரை தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அது முதல் இவரின் காதல் மனைவியான, உடற்கல்வி ஆசிரியர் மு.இந்திராணி இவரின் ஒரு கண்ணாக விளங்கினார். அக்கண் பார்வையும் ஆவணி 20, 2043 / 5.09.2012 அன்று புற்றுநோயால் அவர் மறைந்த பின்னர் பறிபோனது. உதவியாளரைக் கொண்டே படிக்கச் சொல்லிக் கேட்டும் எழுதச் சொல்லிப் படைத்தும் வந்தார். உதவியாளர் துணையுடன் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார்.   பாரிவள்ளல், மாதவன் என மக்கள் இருவரும்   உசா, கவிதா என மருமக்கள் இருவரும் பேரன்மார்கள் விவேகானந்தன், சித்தார்த்தன் எனப் பேரன்மார் இருவரும் உள்ளனர்.

பொதுவுடைமைவாதிகள் பலர், தமிழின் சிறப்பைப் புறந்தள்ளுபவர்களாகவும் தமிழின்காலத்தை ஏற்காதவர்களாகவும் உள்ளனர். ஆனால், உண்மையான பொதுவுடைமைவாதியான அறிஞர் கோவை ஞானி, மார்சியத்தை ஏற்றாலும் தமிழ்த்தேசியத்தை மூச்சாகக் கொண்டார். தமிழையும் தமிழுக்கு மிகவும் பிந்தைய சமற்கிருதம் பற்றியும் கொண்டிருந்த அவரது பார்வைகளில் ஒன்று வருமாறு:

“இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று அறிஞர் பெருமக்கள் உரிமை கொண்டாடினாலும், இந்திய நாகரிகம் என்பதன் அடிப்படைகள் அனைத்திற்கும் ஊடகமாக இருப்பது திராவிட/தமிழ் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை, அறிவியல், வணிகம், கட்டடம், சிற்பம், கணிதம், ஏரணம்(தருக்கம்), மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்தது தமிழ் நாகரிகம்.

சமற்கிருதம் என்பதன் பொருள் திருந்திய / திருத்தம் செய்யப்பட்ட மொழி . இரிக்குவேதம் முதலியவை கி.பி முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமற்கிருதம் என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தச் சமற்கிருதம் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலிய பல மொழிகளின் கலவை. சமற்கிருதம் என்ற மொழி இந்தியாவில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள அறிஞர்கள், தமக்கிடையில் உறவு கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை மொழி. சமற்கிருதம் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்று இந்தியாவில் எவரும் இல்லை. சமற்கிருத மொழிக்கு என்று ஒரு மாநிலமோ, ஓர் ஊரோ கூட இல்லை. தமிழ் மொழியிலிருந்து தொன்மையான எத்தனையோ சாத்திரங்கள் சமற்கிருதத்தில் பெயர்க்கப்பட்டன. சமற்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தவர்கள் தமிழர்கள். பாணினி, சாணக்கியர், பரதமுனிவர், சங்கரர், மத்துவர் முதலியவர்கள் தமிழகத்தில்தான் வாழ்ந்தனர். சமற்கிருதத்தில் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட இடம் காஞ்சிபுரம். வேதங்களின் உள்ளும் தமிழ்ச் சொற்கள், கருத்துகள் நிறைய உண்டு. சில அறிஞர்கள் கூறுவதுபோல சமற்கிருதமும் தமிழர்கள் படைத்த மொழிதான். சமற்கிருதம் புனித மொழி என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய். இந்தியாவில் இந்தி முதலிய வடஇந்திய மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை இலக்கணம் தந்தது தமிழ்தான், சமற்கிருதம் இல்லை. அம்பேத்கர் கூறியபடி மேற்கிலிருந்து வந்த ஐரோப்பியர்தான் பிராமணர்களையும், சமற்கிருதத்தையும் மகிமைப்படுத்தினர். அவர்களே பின்னர் தங்கள் பொய்யை உணர்ந்து கொண்டனர்.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்)

தமிழின் உண்மைச்சிறப்பைக் கூறியதுடன், சமற்கிருதம்பற்றிய சிறப்பு மாயையையும் உடைக்கும் இப்போக்கால்தான் போலிப்பொதுவுடைமை வாதிகள் இவரைப் புறக்கணித்தனர்.

பெரியாரியத்தைப் பழிக்கும் மார்சியர்களிடையே, பெரியாரியத்தின் மையம் சமதருமம். இந்தப் புள்ளியில்தான் மார்சுடன் பெரியாரை இணைக்கிறேன் என்றார் இவர்.

மார்சியர்கள், இம்மண்ணில் இருந்து கொண்டு வேறுமண்தழுவிய பண்பாட்டை விதைக்கப் பார்த்தார்கள். அதனால் எடுபடாமல் போயிற்று. இதனை அறிஞர் கோவை ஞானி,

“மார்சியர்களுடைய தோல்விக்கான முதன்மைக் காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்சியர்கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்சியர்கள் காண முடியாமல் போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையைப் பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே பொதுவுடைமைக் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும்.” (இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி , சமசு, தமிழ் இந்து, 20.06.2018) என விளக்குகிறார்.

“ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன்” என்று கூறி அதனைக் களைய கருத்துகளைப் பொழிந்தார். பிராமணீய ஆதிக்கத்தால் தமிழுலகு ம் இந்தியத் துணைக்கண்டமும் அடைந்த தீமைகளைத்தான் இவர் விளக்கினாரே தவிர, பிராமணர்களை எதிர்த்துக் கூறுவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஆகிரியர்களுள் பிராமணர்கள் மிகுதி என்றும் அவர்கள் அன்பும் பண்பும் கொண்ட நல்லோர்கள் என்றும் போற்றுகிறார்.

மார்சியத் திறனாய்வாளராகவும் மார்சியக் கோட்பாட்டாளராகவும் திகழ்ந்தார். மார்சியக் கோட்பாட்டாளர்கள் குறைவு. அவர்களிலும் தமிழ்த்தேசிய உணர்வு கொண்டோர் சிலரே ஆவர். அச்சிலருள் அறிஞர் கோவை ஞானியும் ஒருவர். அவர், இந்தியத் துணைக்கண்டம் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினார் என்பதை, “இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்தியத் தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென படைத்துறை முதலியவற்றைக் கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்) என்னும் வரிகள் காட்டி விடும்.

1960 இல் ஈழத்தமிழர் இலக்கிய உறவு கிடைத்த பின்னர் ஈழத் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் போற்றி வந்தார். புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான் இன்றைக்கும் உயிருள்ள தமிழிலக்கியம் என்று கூறி வந்தார். எனவே, ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவற்றின் காரணமாகத் தமிழக வாசகர்கள் ஈழ இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட உந்துதலாக இருந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டம் தமிழக மக்களின் இரண்டகத்தால் சிதைந்ததாகப் பெரிதும் வருத்தப்பட்டார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சூழலில் ‘சுகமாக’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெயரளவிற்குப் போராட்டங்கள் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூடு நமக்குத் தெரியாது. மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழ் விடுதலை, உலகில் தமிழர் என்ற முறையில் நமக்கும் பெரும் மரியாதையைத் தந்திருக்கும். இத்தகைய மரியாதையை நாம் இழந்துவிட்டோம். (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்) என்கிறார் அவர். உண்மைதான் நாம் உறுதியாகவும் மனித நேயத்துடனும் நடந்து கொண்டிருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்.

தமிழ்த்தேசியம் குறித்த அவரது கருத்து வருமாறு:

“என்னுடைய தமிழ்த் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் காண்கிறேன்.. கணியன் பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார்களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லாரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கித் தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் திறனாய்வுகளுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான மூலப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி – மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம். பெரியாரிடத்திலிருந்து பெறும் தொலைநோக்கின் தொடர்ச்சி அது.” (சமசு, தமிழ் இந்து, 20.06.2018)

தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டு இதழாளராகவும் விளங்கினார். 

புதிய தலைமுறை (1968-70), பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (67 இதழ்கள் வெளிவந்தன;1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.

இவை தொடர்பில் எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவலைக் கூற விரும்புகிறேன்.

அறிஞர் கோவை ஞானி அவர்களைச் சில முறை சந்தித்து உரையாடியுள்ளேன். சில முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அளவளாவியுள்ளேன். அவர் 2011 நவம்பரில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தமிழ்நேயம் சார்பில் மாதந்தோறும் ‘நானும் என் தமிழும்’ என்னும் தலைப்பில் அறிஞர்களின் தமிழ்ப்பணி வரலாற்றை நூலாகக் கொண்டு வருவதாகவும்  ஆட்சித்துறையில் நான் மேற்கொண்ட அளவிடற்கரிய பணிகளைத் தமிழுலகம் முழுமையாக அறிந்து கொள்ள 100 பக்கங்களில் நூலாக எழுதித் தரவேண்டும் என்றும் கூறினார். மேலும் தந்தையார் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் வாழ்க்கைப் பதிவுகளையும் சரியாக 100 பக்கங்களில் நூலாக வெளியிட எழுதித் தருமாறும் வேண்டினார். அவரவர் பணிகளைத்தான் அவரவர் எழுத வேண்டும். எனினும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழுக்கான போராட்ட வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் உங்களை எழுதச்சொல்கிறேன். தன் வரலாறாக இல்லாமல் தந்தையார் வரலாற்றை எழுதுவது, இரு நூல் எழுதுவது என உங்களுக்கு மட்டும்தான் இந்த விதி விலக்கான வாய்ப்பைத் தருகிறேன். மறுக்காமல் உதவவேண்டும் என்றார். நான் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துவிட்டு என்னைப்பற்றிய நூலைப் பிறிதொருமுறை எழுதித் தருவதாகவும் தந்தையார்பற்றி எழுதித் தருவதாகவும் கூறி ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். அவர் 2012 புத்தாண்டு(சனவரி) வெளியீடாக இந்நூலை வெளியிட வேண்டும் என்றார். நான், 2012 பிப்பிரவரியில் மகள் பொறி தி.ஈழமலர்-பொறி வா.பாலாசி திருமணம் நடக்க உள்ளதாகவும் அதை முன்னிட்டு வருகையாளருக்குத் திருமண அன்பளிப்பாக வழங்க 1000 நூற்படிகள் கூடுதலாக வேண்டும் என்றும் கேட்டேன். உறுப்பினர்களுக்கு மட்டும்தான் வழங்கும் வகையில் அச்சிடுவதாகவும் எனினும் ஆவன செய்வதாகவும் கூறி நான் எழுதிய ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்’ நூலைத் தமிழ் நேயத்தின் 49 ஆவது இதழாக அச்சிட்டு வெளியிட்டுத் தந்தார். அவர் பேசும்பொழுது, தமிழ்த்தேசியத்திற்கு உண்மையான வழிகாட்டி பேராசிரியர் சி.இலக்குவனார் என்றும் அவர் கூறிய மொழிவழித் தேசியக் கூட்டமைப்பை காலப்போக்கில் இந்தியா ஏற்கும் என்றும்  தாம் அதைத்தான் இப்பொழுது பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.  அவர் தந்தையார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மீது கொண்டிருந்த உண்மையான மதிப்பையும் என் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்தினார்.இவற்றை மறக்க இயலுமோ?

“எனது எழுத்துகளில், என் வாழ்வும், பட்டறிவும் அடங்கியிருக்கின்றன” என்னும் இவர் கூற்று இவர் படைப்புகளுக்கான அறிமுகம் ஆகும். அந்த வகையில் இவரின் 48 படைப்புகள் விவரம் வருமாறு:

திறனாய்வு நூல்கள்

 

  1. மார்சியமும் தமிழ் இலக்கியமும் – 1988
  2. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் – 1994
  3. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் – 1994
  4. படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் –
  5. தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் – 1997
  6. நானும் என் தமிழும் – 1999
  7. தமிழன் வாழ்வும் வரலாறும் – 1999
  8. தமிழில் படைப்பியக்கம் – 1999
  9. மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் – 2001
  10. எதிர் எதிர் கோணங்களில் – 2002
  11. மார்க்சிய அழகியல் – 2002
  12. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு – 2002
  13. தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் – 2003
  14. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் – 2004
  15. வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் – 2004
  16. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் – 2005
  17. தமிழன்பன் படைப்பும் பார்வையும் – 2005
  18. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் – 2007
  19. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் – 2008
  20. நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் – 2009
  21. செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் – 2010
  22. தமிழிலக்கியம் இன்றும் இனியும் – 2010
  23. வானம்பாடிகளின் கவிதை இயக்கம் – 2011
  24. ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் – 2012
  25. அகமும் புறமும் புதுப்புனல் – 2012
  26. அகமும் புறமும் தமிழ்நேயம் – 2012
  27. ஞானியின் எழுத்துலகம் – 2005
  28. ஞானியோடு நேர்காணல் – 2012

 மெய்யியல்

  1. மார்சியத்திற்கு அழிவில்லை – 2001
  2. மார்சியமும் மனித விடுதலையும் – 2012
  3. இந்திய வாழ்க்கையும் மார்சியமும் – 1975
  4. மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு – 1976
  5. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை – 1996
  6. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் – 2006

 கவிதை நூல்கள்

  1. கல்லிகை – 1995
  2. தொலைவிலிருந்து – 1989
  3. கல்லும் முள்ளும் கவிதைகளும் – 2012

 தொகுப்பு நூல்கள்

  1. புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997
  2. தமிழ்த் தேசியம் : பேருரைகள் – 1997
  3. அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் – 1997
  4. மார்சியத்தின் எதிர்காலம் – 1998
  5. படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் – 1999
  6. மார்சியத்தின் புதிய பரிமாணங்கள் – 1999
  7. விடுதலை இறையியல் – 1999
  8. இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் – 2000
  9. மார்சியம் தேடலும் திறனாய்வும் – 2000
  10. நிகழ் நூல் திறனாய்வுகள் 100 – 2001
  11. பெண்கள் வாழ்வியலும் படைப்பும் – 2003

இவற்றுள் புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997 என்பது 1900 பக்க அளவில் 3 தொகுதிகளாக வெளிவந்துள்ள பொன்னீலனின் புதினம்.இதில் இப்புதினம் குறித்த மதிப்புரைகள், வாசகர் மடல்கள் முதலியவற்றையும் தொகுத்துத் தந்துள்ளார். பொன்னீலனின் படைப்பு என்றாலும் இவரது தொகுப்புப்பணியின் காரணமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

‘கல்லிகை’ என்னும் நெடுங்கவிதை/குறுங்காவியம், எழுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் தோன்றி வளர்ந்த வானம்பாடி இயக்கத்தின் தூண்டுதலால் உருவானது. கல்லான அகலிகையின் கதையைப் புதுக்கவிதை பாணியில் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன் முதலான சிலர் இக்கால நோக்கில் அகலிகை பற்றிக் கதைகள் எழுதியிருப்பினும் கவிதையில் சிற்பாக வந்த படைப்பாக இது போற்றப்படுகிறது.இக்கவிதை நூலில், எனக்குள் ஒரு வானம்’ என்ற இன்னொரு கதைக் கவிதையும் அடங்கியுள்ளது.

புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா – தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), தி.இரா.நி,(எசு.ஆர். எம். ) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

 13-06-2013 அன்று கோயம்புத்தூரில் அறிஞர் கோவைஞானியின் அன்பர்கள் ஒன்று கூடி அவரது அனைத்துப்பதிப்புகளையும் இணைய வழியாகக் கட்டணமின்றித் தருதல், கோவை அறிஞர்களின் நூல்களைத் திரட்டுதல் முதலான பணிகளுக்காகத் தமிழ் நேயம் அறக்கட்டளையை உருவாக்கியதாக எழுத்தாளர் செயமோகன் வலைப்பூவில் ‘கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை – நண்பர்களுக்கு வேண்டுகோள்’ என்னும் தலைப்பில் ஓர் அறிவிப்புச் செய்தி வந்திருந்தது. முனைவர் கு.முத்துக்குமார் அறிிவித்திருந்தார். இதன் இப்போதைய நிலை தெரியவில்லை. அறிஞர் கோவை ஞானியின் நினைவாகஇதனைச் சிறப்பாகச்செயல்படத்த வேண்டுகிறோம்.

சங்கக்கால இலக்கியங்களையும் இக்கால இலக்கியங்களையும் இணைக்கும் பாலமாக விளங்கிய அறிஞர் கோவை ஞானிக்கு நாம் செலுத்தும் உண்மையான நிலையான அஞ்சலியாக இதுவே இருக்கும். 

இலக்குவனார் திருவள்ளுவன்

காண்க:

சுப்பிரபாரதிமணியனின் உரை, வ.ந.கிரிதரனின் பதிவுகள் தளம்

ஞானியின் உலகம்: என் நண்பர்கள்,என் எழுத்தும் எண்ணமும் தமிழ் இந்து, 15.04.2017

கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்

இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி, சமசு, தமிழ் இந்து, 20.06.2018

 கோவை ஞானியுடன் வீதியுலா, முருகபூபதி, பயணிகள் பார்வையில்–03,நோயெல்நடேசன் வலைப்பூ

முரண்பட்ட சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தவர் ஞானி!,செல்வ புவியரசன், தமிழ் இந்து 05.07.2020

கோவை ஞானி வலைப்பூ

கோவை ஞானி இணையத்தளம்

கோவை ஞானி, விக்கிபீடியா

ஞானி பேசுகிறார், தமிழ் இந்து

தமிழ் இந்து இதழில் ஞானியார் குறித்துமேலும் சில கட்டுரைகள் உள்ளன. கண்டறிக.

இதழுரை / அகரமுதல

 

திருவாட்டி இந்திராணி ஞானி