கா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ.
கா. சுப்பிரமணியப் பிள்ளை
பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களைத் தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் தமிழ்க் காசு என்று கூறுவதுண்டு.
அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை ‘எம்.எல். பிள்ளை’ என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்‘ எனக் குறிப்பிடுவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை உண்டாக்கித் தமிழகத்திற்கு உதவிய பேரறிஞர்.
1937 இல் தமிழகத்திலுள்ள நான்கு கோடி தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை இந்தியப் பேரரசுக்கு அறிவிப்பதற்கென்றே, திருச்சி தேவர்மன்றத்தில் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டை முதன் முதலாகக் கூட்டினேன். நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல். அவர்கள் அம் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டார். அம் மகா நாட்டைத் தொடங்கி வைக்க அலைந்தும், இந்தி எதிர்ப்பு என்றிருந்ததால், ஆட்சிக்கு அஞ்சி ஒரு புலவரும் முன் வரவில்லை. பேராசிரியர் கா. சுப்பிரமணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களுக்கு ஒரு தந்தி அடித்தேன். ஒப்புக்கொண்டு மிகத் துணிவோடு முன் வந்து அம்மகாநாட்டைத் தொடங்கி வைத்து, அவர் ஆற்றிய உணர்ச்சி கலந்த சொற்பொழிவு இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் ஆற்றிய அந்தப் பேச்சினைக் கண்டு நடுநடுங்கிய புலவர்களும் அரசியல்வாதிகளும் மிகப் பலர். தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் முடிவுரை கூறுகிறபொழுது திரு. பிள்ளை அவர்களின் பேச்சு உணர்ச்சியற்றவர்களுக்கெல்லாம் உணர்ச்சி யூட்டியிருக் கும்.’’ என்றார். தமிழ்க்காசுவிற்கு ‘வீர மகன்’ என்ற பெயரும் வழங்கியது.
அதுவேபோல தாகூர் சட்டத்தை விரித்து விளக்கி விரிவுரையாற்றத் தமிழகத்தில் எவரும் துணியாதபோது ‘எம். எல். பிள்ளை’ அவர்கள் அரசின் விருப்பத்தை யேற்றுத் துணிந்து முன்வந்து அச்சட்டத்தை விளக்கி விரிவுரையாற்றிப் பெரும்புகழ் பெற்றார். இதனால் அவரை வழக்கறிஞர்களும் நீதிமன்றத் தலைவர்களும் ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ எனக் கூறுவதுண்டு.
திரு. பிள்ளை அவர்கள் ‘தமிழர் சமயம்’ என்று ஒரு நூலை ஆராய்ந்து எழுதியிருந்தார். அதற்கு என்னுடைய மதிப்புரையை வேண்டினார். மறைமலையடிகள், நாவலர், பாரதியார், திரு. வி. க., நாட்டாரய்யா ஆகிய சமயப்பற்று நிறைந்த பேரறிஞர்கள் நால்வருடைய மதிப்புரையே போதுமானதென்றும், சீர்திருத்தப் பற்றுள்ள என்னுடைய மதிப்புரை தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறி மறுத்து விட்டேன். இது அவர் உள்ளத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிற தென்பதை நான் பின்னால் அறிந்து வருந்தினேன்.
திரு. பிள்ளை அவர்கள் நான் பெங்களூரில் தங்கி யிருக்கிறேன் என்பதை அறிந்ததும், தன்னிடம் புலவர் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அங்கு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது இது:-
” . . . . என் நூல் வெளிவருவது தங்களுக்கு விருப்பம் இல்லையானால் தயவு செய்து அதைத் தெரிவித்து விடுவது நல்லது. தங்களின் மதிப்புரையின்றி நூலை வெளியிட நான் விரும்பவில்லை.”
இது என் உள்ளத்தைச் சுட்டதால், மதிப்புரை எழுதுகிறேன் என அவரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அந் நூலை முழுதும் படித்து எனது கருத்தை விரிவாக எழுதி அனுப்பினேன். அதை அப்புலவர் பெருமகன் முதல் மதிப்புரையாகவும், மற்றப் பெரும் பேராசிரியர்கள் நால்வரின் மதிப்புரையைப் பின்னரும் அச்சிட்டுத் ‘தமிழர் சமயம்’ என்ற அந்நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.
தன்னைத் தமிழன் எனச் சொல்லிக் கொள்கிற ஒவ்வொருவனும் அந்நூலையும், “கோடையிலே இளைப்பாறிக் கொள்ள வந்த எனக்கு இந்நூல் ஒரு குளிர் தருவாக இருந்தது” என்று தொடங்கியிருக்கும் என் முன்னுரையையும் கட்டாயம் படித்தாக வேண்டும்.
சுருக்கமாக இங்கு கூறுவது. இந்நூல் தமிழர் சமயத்தைப் புதுமுறையில் ஆய்ந்து, கண்டு விளக்கு கிறது. இதுவரை எவரும் செய்யாத செய்யத் துணியாத ஒரு முயற்சி.
தமிழர் சமயத்திற்கும், நூல் நிலையங்களுக்கும் இதுவரை இருந்த ஒரு பெருங்குறையை இந் நூல் போக்கிவிட்டது. தமிழக மக்கள் இதனையும் இது போன்ற அவரது பிற நூல்களையும் படித்துப் பயன்பெறுவது நல்லது. தமிழிற்கும், சைவத்திற்கும், சட்டத்துறைக்கும், அவர் செய்த தொண்டுகள் மிகப் பல. அவ்விதமிருந்தும் இவ்வுலக வாழ்வில் நல்வாழ்வு வாழ முடியாமல் வறுமை வாய்ப்பட்டும் பல ஆண்டுகள் நோய்வாய்ப் பட்டுத் தனித்துக் கிடந்தும் வருந்தி மறைந்தார்கள். இதைக் கண்டு மனம் புண்பட்டபலரில் நானும் ஒருவன். என்றாலும், தமிழும் தமிழனும் உள்ள வரை அவர் புகழ். மறையாது.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்
Leave a Reply