குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்
(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி)
முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம்.
பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ மாற்றச் சரக்கைச் சந்தையில் திணிக்கிறார்.
அமைதி ஆனந்தம் என்பார் பரிந்துரைக்கும் வடிவ மாற்றங்களை இங்கு பகிர்கிறேன். இவரின் கொள்கை: “ஆங்கில மொழி எப்படி ஒற்றைக் குறிகளாக இருக்கின்றனவோ அதே போலத் தமிழ் எழுத்துகளையும் ஒன்று விடாமல் நசுக்கி ஓருருவாக ஆக்கினால்தான் தமிழ் வாழும். இல்லாவிடில் நாசமாகப்போய்விடும்” என்று சொல்வதோடு தமிழர்களுக்கு இருக்கின்ற பிற நாட்டினரைப் போற்றிப் பாடும் உளப்போக்கை பாங்குற எதிரொலிக்கின்றார்.
அமைதியானந்தரின் தமிழ்ப்பற்று ஓங்கி உயர்ந்தது. தமிழ்மொழி மட்டுமல்ல தமிழ் மண்ணில் காணக்கூடிய விலங்குகளிடமும் அவர் கொண்டுள்ள நேயம் ஒப்பற்றது. காங்கேயம் காளைகளின் கொம்புகளை இங்கே தமிழ் எழுத்துகளுக்கு வரைந்து அழகு பார்க்கிறார். நான் காங்கேயம் காளைகளின் கொம்பு வாகைப் போட்டிருக்கிறார் என்று சொன்னதும் நண்பர் ஒருவர் வெகுண்டு – உனக்குக் காங்கேயத்தைத் தாண்டி எதுவும்தெரியாது, உண்மையில் அந்தக் கொம்புகள் சிந்துசமவெளிக் கல்வெட்டுகளில் காணப்பட்ட காளையின் கொம்பாகும், என்று சொன்னபோது, என்னே தமிழ்ப்பற்று என்று வியந்துபோனேன்.
அவரின் பார்வையில் கா,ஙா,சா,ஞா, டா,ணா, தா,நா என்ற ஆகார உயிர்மெய் வரிசை இப்படித்தான் இருக்க வேண்டுமாம். கீழே உள்ள படத்தில் இருப்பன தற்போது ஞா, டா, ணா முதலான எழுத்துகளை மாற்றும் அவர் பரிந்துரை. இதேபோல அவ்வரிசையின் பிற எழுத்துகளுக்கும் போட்டு விட்டிருக்கிறார்.
திராவிடக் காளையின் கொம்புகளைத் தமிழ் மொழியோடு பிணைத்துக் களிக்கிறார் கா,ஙா,சா வரிசையில் என்றால், கெ, ஙெ, செ வரிசைக்கு யானையின் தும்பிக்கையை ஒட்டி விட்டு மகிழ்கிறார் அமைதியானந்தர்.
யானை என்பது தமிழனின் தொன்மையான விலங்குமட்டுமல்லாது போர்த்தொழிலில் இருந்து பிச்சைஎடுக்குந் தொழில்வரை யானை தமிழனுக்குப் பயன்படுவதை என்றென்றும் நெஞ்சில் வைக்க இந்தச் சீர்திருத்தமாகும் என்பதே அவர் கட்டுரைகளின் உட்பொருளாக எனக்குக் கிடைக்கிறது.
இங்கே முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டியது அந்த ”ணை” என்ற எழுத்தை அவர் மாற்றுவதாகும். இவ்வெழுத்து பெரியாரால் மாற்றப்பட்டது இன்னும் பலருக்கும் நினைவிருக்கும். ஏறத்தாழ அதே எழுத்தை மீண்டும் கொண்டு வருகிறார் அமைதியானந்தர்.
”மாற்றம் தேவைதானே! ஒரு 30 வருடத்திற்கு முன்னே அப்படி எழுதினோம். அப்புறம் இப்படி எழுதினோம். சரி மறுபடி அப்படியே எழுதுவோம்” – இப்படி மாறிக்கொண்டே இருந்தால்தானே தமிழ் வாழும். மாற்றம் என்பது மாறாததல்லவா? என்பது அமைதியானந்தரின் கோட்பாடு ஆகும்.
மேலே உள்ள எழுத்துகளைக் காட்டி இதைப் படியுங்கள் என்றார் ஒரு நண்பர்– நானும் சி, ஞி என்று சொன்னேன். அவருக்கு வந்ததே கோபம் – சி,ஞி என்பது அந்தக்காலம்; உங்களைப்போல பழமைவாதிகளால்தான் தமிழின் வளர்ச்சி அழிந்து போகிறது என்றார். திகைத்து ஏனென்று கேட்டேன். பின்னர் சொன்னார் – “அது சி,ஞி இல்லைங்க – புதிய சே, ஞே என்றார்”.
ஆகா, தமிழ் என்னமா வளர்கிறது என்று நானும் எண்ணியபோது, “ஐயம் இருந்தால் அமைதியானந்தரைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டுப், பழமைவாதிகளிடம் பேசினாலே தமிழ் தேய்ந்துபோகும் என்பதுபோல நகர்ந்தார்”.
புரட்சித் தமிழர்களின் புரட்சித் தமிழில் இதோ கே,ஙே,சே,ஞே.
கி,ஙி,சி,ஞி எப்படி இருக்கும் என்பதனைக் கேட்டுவிட்டால் நம்மைப் பழமைவாதிகள் என்று சொல்வார்களோ என்று அஞ்சி இந்த எழுத்துச் சீர்திருத்தப் படையிடம் நான் கேட்கவேயில்லை. அதுமட்டுமல்ல அச்சத்திற்குக் காரணம், படை என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதாலும்.
சகலகலா வல்லவர்களான எழுத்துச் சீர்திருத்தவாதிகளின் கலைநயத்திற்கும் அறிவியல் அறிவிற்கும் வரம்பே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்தது ஐகார உயிர்மெய்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கின்ற மாற்றங்கள்தான்.
தமிழைக் கைதூக்கி விடுவதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் ஐகார வரிசை எழுத்துகளில் அவர்களின் கைவண்ணம். ஐகார எழுத்துகளை அறிவியல் முறைப்படி ஆக்கியிருக்கிறார்கள்.
ஆர்க்கிமிடிசின் நெம்புகோல் தத்துவத்தை எளிதில் தமிழ்க் குழந்தைகள் கற்றுக் கொள்ளுமாறு அமைத்திருக்கிறார்கள். ஐகார வரிசையின் ஒவ்வோர் எழுத்தின் அடியிலும் ஒரு நெம்புகோலைப் போட்டுவிடுகிறார்கள்.
கீழே உள்ளவை ”கை” வரிசையாகும்.”டை” என்ற எழுத்திற்குக் கருணை காட்டும் அவர்களின் வடிவ மாற்றம் உற்றுக் கவனிக்கத்தக்கது.
அறிவியல் தமிழ் வளர்ப்பதென்றால் இப்படித்தான் வளர்க்கவேண்டும். அதற்குக் கிடைத்த இடம் தமிழ்எழுத்துகள்தான். அதைவிட்டு விட்டு பேசிக் கொண்டு இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள் சீர்திருத்தவாதிகள்.
அதுமட்டுமா? நோயாளிகள், முதியோரிடம் நேயம் காட்டவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றவாறு ஒளகார உயிர்மெய்வரிசைகளுக்குப் புதிய குறிகள் இடுகிறார்கள் சீர்திருத்தவாதிகள். “டெள” என்ற எழுத்தே இதற்குச் சான்று.
தமிழ் மண்ணின் காளைகளுக்கு யானைகளின் மேல்மட்டுமா பரிவு?. பெரிய உயிரினங்களைத் தாண்டி, நத்தை போன்ற சிறிய உயிரினங்களின் மேல் உள்ள பரிவையும் அன்பையும் விளக்குவதாக ஓகார வரிசை அமைகிறது.
தமிழி நெடுங்கணக்கின் 247 எழுத்துக்களில்60 எழுத்துக்களை நீக்கிவிடவேண்டும் என்பது முதலிய வடிவமாற்றிகளின் பரிந்துரைகளில் இதுவரை தப்பித்திருப்பன 18 மெய்யெழுத்துகள் மட்டுமே. எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பேசப்படுகின்றவற்றின் தன்மையையும் அளவையையும் கண்டு என்ன செய்யலாம் என்பதை வாசிப்பவர் முடிவு செய்துகொள்க.
தமிழ்நாட்டில் ஆக்கங்கள் இல்லை. அதற்கு வாய்ப்புகளும் இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று ஏதும் இல்லை. எல்லாம் பிறநாட்டுக் கண்டுபிடிப்புக்களின் புகழ்பாடிப் பிழைக்கும் பிழைப்புதான். அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் தமிழே இல்லை. கல்விக்கூடம் முதல் சுடுகாடுவரை ஆங்கிலத்தில்தான் பெயர்ப்பலகைகள் இருக்கின்றன. இந்த அழகில் எங்கே போய் அறிவியல் தமிழ் வளர்ப்பது என்று, தமது திறமையையெல்லாம் தமிழ் எழுத்துகள் மேல்காட்டுகிறார்கள் – அதற்குப் பெரியாரின் முகமூடியை எடுத்து மாட்டிக்கொள்கிறார்கள்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றவுடன் ஏதோ மிகப் பெரிய மொழியியல் சங்கதி என்று எண்ணி யாரும் விலகிப் போகக்கூடாது. ஏனென்றால் அதில் மொழியியல், இலக்கணம் என்று ஒன்றும் கிடையாது. ஒரு வெற்றுப் படம்.
நாம் அன்றாடம் புழங்கும் எழுத்தை ஏன் மாற்றவேண்டும்?
எதற்கு மாற்றவேண்டும்? என்று வினாவெழுப்பிச் சிந்திக்க வேண்டும்.
(நிறைவு)
http://nayanam.blogspot.in/2010/08/3.html
நாக.இளங்கோவன்
Leave a Reply