outsoucing

 இதுவரை கூறிய இந்த உள்கட்டுமானங்களை எல்லாம் நாம் சரிசெய்யவில்லையென்றால், நிலத்தடி நீர் கிடைப்பதிற் சிக்கல் ஏற்படுமென்றால், நம் ஊர்ப்பக்கங்களில் ஏற்படும் வீட்டுமனைத் தேவைகள் வெடித்துச் சிதறும் குமிழ்போல ஆவது வெகுதொலைவில் இல்லை. இப்பொழுது நம் ஊர்கள் சற்று தகைவோடு(stress)தான் உள்ளன. நம் ஊர்ப்பக்கங்களில் பொதுவாகவுள்ள பொருளியல் உந்துகளைச் சற்று எண்ணிப்பார்ப்போமா? இவற்றில் நிறைகளும் இருக்கின்றன; குறைகளும் இருக்கின்றன. முதலில் நிறைகள்:

 • சுற்றுவட்டாரத்திலுள்ளோர் தேடிவந்து வாங்கும் நிலைவெள்ளிப் பாத்திரங்களின் கணிசமான உருவாக்கமும் விற்பனையும்
 • அதே போல வைர, தங்க நகைகளின் உருவாக்கமும், விற்பனையும்,
 • செட்டிநாட்டுப் பருத்திச் சேலைகள் கொஞ்சங்கொஞ்சமாய் பெயர்பெறுகின்றன.
 • மரபுசார் சுற்றுலா முயற்சிகள் இப்பொழுது தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அதையொட்டி நட்சத்திரத் தங்கும் விடுதிகள் இங்கு எழும்பியுள்ளன. சுற்றுவட்டாரத்தில் 100 புதுக்கல் தொலைவிலுள்ள இடங்களை இங்கு தங்கியிருந்து பார்த்துவரும் முறைமை ஏற்பட்டிருக்கிறது.
 • நம் மரபுசார்ந்த வீடுகளை வைத்துத் திரைப்படம், நெடுந்தொடர், விளம்பரம் சார்பான வளர்ச்சிகள் புதிதாக வேர்விடத் தொடங்கியுள்ளன.
 • அக்கம்பக்கத்திலுள்ளோர் காரைக்குடியை மையமாக்கி வாழத்தொடங்கும் முன்முனைப்பு நம் பார்வைகளை மாற்றியிருக்கிறது. ”காரைக்குடி ஒரு மையம், நாம் அதன் துணைக் குடியிருப்புக்கள்” என்ற எண்ணம் பலருக்கும் அரும்பியிருக்கிறது.
 • புதுவயல், கல்லூர், கண்டனூர், பள்ளத்தூர் பக்கமிருக்கும் 250க்கும் எண்ணிக்கையிற் கூடிய அரிசியாலைகளின் தாக்கம் அரிசிவணிகத்தில் பெரிதாக இருக்கிறது. இந்தியாவின் அரிசிவிலையை வரையறுப்பது இந்த ஊர்களே. இப்பொழுது கோதுமை போன்ற கூலங்களுக்கும் அந்தத் தாக்கம் நகர்கிறது.
 • இரண்டே மணிநேரத்தில் மதுரை, திருச்சி என்னும் இருபெரும் நகரங்களை இணைக்கும் இயலுமையும், நாலொழுங்கைச் சாலையும்(four-lane road) (logistics என்னும்) இலக்கிப்புத் துறையில் புதுவேகம் பாய்ச்சியிருக்கிறது.

மேலேசொன்ன எல்லாமே குமுகவளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன. ஆனால் வளர்ச்சியைக் குறைக்கும் சில நடப்புகளையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.

 • மருத்துவ வசதிக்குறைவு (நல்ல விதப்பியல் மருத்துவர்கள் இங்கு இல்லை; இன்னும் முழு ஏந்துகளோடு கூடிய மருத்துவமனையில்லை. ஏதாவது மருத்துவ அவக்கரம் ஏற்பட்டால், இப்பொழுதும் திருச்சிக்கோ, மதுரைக்கோ ஓடவேண்டியுள்ளது.)
 • பேருந்து, தொடரி (train) போன்றவற்றில் இப்போதிருக்கும் தேக்கம். (இரண்டையும் பிணைக்கும் முயற்சிகளும் நடைபெறவில்லை.)
 • மதுரைக்குத் தொடரி இணைப்பு இல்லாதது ஒரு பெருங்குறையே. (காரைக்குடியின் ஒரு காலைக் கட்டிப்போட்டது போற்றான் இது ஆகிறது.)
 • மாலை நேரங்களில் கோயிலைத் தவிர்த்துப் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாமை.
 • பேர்பெற்ற பள்ளிக்கூடங்கள் இன்னும் ஏற்படாமை. (நம்மூர்ப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள், நூலகம், காட்சியகங்கள், சோதனைச்சாலைகள், போட்டிகள், விளையாட்டுத்திடல்கள் எனப் பலவிதங்களிற் பின்தங்கியுள்ளன. அவற்றை மேலோங்கச் செய்வதற்கு நிறுவனர்களும் முயலவில்லை. மற்ற ஆர்வலரும் முன்வரவில்லை.)
 • வாய்ப்புக் கருதி இங்குள்ளோர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று பெருநகரங்களுக்குப் பிழைப்புக் கருதிப் போய்விடுவதால், இங்கு அகவை முதிர்ந்தோரே தங்கிப் போகிறார். கல்லூரி முடித்த இளைஞரெல்லாம் கடைசித்தேர்வு முடிந்தமறுநாளே பெட்டியைக் கட்டிக்கொண்டு, ‘கெட்டும் பட்டணஞ் சேரென்ற’ கூற்றை வேதவாக்காக்கிச் சென்னைப் பட்டினம் போகும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இங்கு பொதுப்பணி செய்யும் இளைஞர் குறைந்துவிட்டார்.
 • வாழ்வில் வளம்பெற வாய்ப்புகள் இங்குகுறைவு என்றநிலை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இத்தனைக்கும் பெரும் தொழிலதிபர்கள் இங்கிருந்துதான் தமிழகத்தில் பரவியுள்ளார். தண்ணீர்த் தேவை அவ்வளவு எழாத, ஓரிரு ஆலைகள் இங்கே எழுமானால் குமுகவளர்ச்சி பெரிதாக வாய்ப்புண்டு. இங்குள்ள செல்வந்தர்கள் மனம் வைக்கவேண்டும். ஒரு காலத்தில் இந்த வட்டாரத்திலிருந்து பலரும் சென்னை அம்பத்தூருக்குப் போய் வேலைசெய்து வாழ்ந்துவந்ததால் அம்பத்தூரைச் “சின்னப்பள்ளத்தூர்” என்று வேடிக்கையாக அழைப்பதுண்டு. இன்று ஊர்வளர்ச்சி பார்த்தால், பள்ளத்தூர் எப்பொழுது சின்ன அம்பத்தூராவது? – என்ற கேள்வி நம்முள் எழுகிறது. நல்லதொரு மாற்றமாய் பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) திருமயத்தில் ஒரு குழாய் உருட்டாலையை உருவாக்கியது. திருமயம், கடியாபட்டி போன்ற ஊர்களுக்கு இது நல்ல வளங்கொடுக்கும். மற்ற ஊர்களுக்கும் அதன் வீச்சு தெறிக்கவேண்டும்.
 • இன்னொரு செய்தியாய் உள்கட்டுமானக்குறைவுபற்றிச் சொல்லவேண்டும். அது எங்களூரில் நடந்தது. இப்பொழுதெல்லாம் (Business Process Outsourcing என்னும்) பொதினச் செலுத்த வெளியூற்று வேலைகள் இந்தியாவில் நடந்துவருகின்றன. ஒரு பேச்சிற்குச் சொல்கிறேன். அமெரிக்க நிறுவனம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிறுவனத்தின் புதுக்குகளை (products) வாங்கும்போது ஒரு குறையோ, பழுதோ ஏற்பட்டு அதற்கு விளக்கம் அல்லது தீர்வு நாடி உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர் தொடர்புகொண்டு கேட்கவிழைகிறார். பொதுவாக நிறுவனத்தின் ஊழியரே இதற்கு மறுமொழி சொல்லாது, இந்த வெளியூற்றுச் சேவையாளர் தன் ஆட்களை வைத்துத் தீர்வுகளைச் சொல்வார். இதன்மூலம் இந்தியாவிற்கு வருமானம் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்திற்கு வேலையும் நடக்கும். செலவுங் குறைச்சல். அப்படியொரு வெளியூற்று நிறுவனம் ‘ஒன்பான்மீன் நுட்பியங்கள்(9 star technologies)’ என்ற பெயரில் எங்களூரில் நடந்தது. நம் பக்கத்துப் பையன்கள் 80 பேருக்குமேல் வேலை செய்தார். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் கண்டனூரில் இருக்கும் வெளியூற்று வேலையாளிடம் விவரங்கேட்டுத் தீர்வு காணுவார். இந்த வேலை சிறப்பாக நடக்கவேண்டுமென்றால், Bsnl, Airtel, Vodophone போன்ற ஏதோவொரு சேவைவழங்குநர் (service provider) வலுவான அகலப்பாட்டை (broad band) வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அவர்தரும் அகலப்பாட்டையின் செறிவும், பட்டையகலமும் (bandwidth), தரமும் உச்சநிலையில் இருக்கவேண்டும். இவை போன்றவை உள்கட்டுமானத்தைப் பொறுத்தவை. இவற்றைச் சென்னையிற் தருவது போலவே கண்டனூரிலும் தந்தாற்றான், இந்தப் பொதினச் செலுத்து வெளியூற்று முயற்சிகள் வெல்லும். இந்த முயற்சியில் என்னகுறை நடந்ததென்று எனக்குத் தெரியாது. 3, 4 ஆண்டுகள் வேலைசெய்த ‘ ஒன்பான்மீன் நுட்பியங்கள்/9 star technologies’ கண்டனூரில் இப்பொழுது வேலைசெய்வதில்லை. நம்மூர்ப் பக்கத்து 80 பையன்களும் எங்கெங்கோ சிதறிப்போய்விட்டனர். பாராட்டப்படவேண்டிய நல்லதொரு தொழில்முயற்சி முளையிலேயே முடங்கிப் போனது. எதிர்காலத்தில்  வணிகச் செயலாக்கப் புறநிலை வேலைகள் (BPO) முயற்சிகள் நம்மூரில் வெற்றிகரமாய் நடக்குமானால் நம் குமுக வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.

பொதுவாகக் குமுக வளர்ச்சி என்பது பல்வேறு முயற்சிகளின் தொகுப்பால் விளையும் நலனாகும். அதைச் செய்வதற்குத் திட்டமிடலும், இடைவிடாத முயற்சியும், செல்வந்தரின் ஆதரவும், அரசின் பெரும் ஊக்கமும் தேவை. ஓர் ஊர் வளர அது இன்றியமையாதது.

பள்ளத்தூரின் குமுகவளர்ச்சியைப் பெரிதும் நாடுகிறேன்.

நன்றி.

  –  முனைவர் இராம.கி.

transliteration_raamki22