குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்!
1. மிக்கதைக் கொள்க!
சமூகச் சீர்திருத்தத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், தென்னிந்தியாவின் சாக்கிரட்டீசு, பகுத்தறிவுச் சிற்பி, வைக்கம் வீரர், பெரியார் முதலான பல்வேறு பட்டங்களுக்கு உரியவர்தான் ஈ.வெ.இராமசாமி அவர்கள். அவர் மறைந்த பின்னும் அவரைச் சுற்றி அரசியல் வலை பின்னப்படுவதிலிருந்தே இவரது முதன்மைத்துவம் நன்கு புரிகிறது.
நிறையும் குறையும் இல்லா மனிதர் யாருமில்லை என்பதே உலக வழக்காக உள்ளது. மிக உயர்வாகப் போற்றப்படும் எந்த ஒரு மனிதரிடமும் குறைகளும் காணப்படுகின்றன. மிகக் கீழாகப் பேசப்படுகின்ற எந்த ஒரு மனிதனிடமும் நிறைகளும் உள்ளன. எனவேதான், தெய்வப்புலவர் திருவள்ளுவர்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருக்குறள், ௫௱௪ – 504)
என்கிறார்.
அப்பழுக்கற்ற மனிதர்களாக நாம் பலரைக் காண இயலும். ஆனால், அரசியலில் அவ்வாறு காண இயலவில்லை. காலத்திற்கேற்ற கோலம் போடுபவர்களாகத்தான் அனைவரும் உள்ளனர். எனினும் அவர்கள் குமுகாயத்திற்குச் செய்யும், செய்த அரும்பணிகளால் அவர்களை நாம் போற்றுகிறோம். பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதற்கு எடுத்துக்காட்டாக வேறு இருவர் பற்றி நாம் முதலில் காண்போம்.
உலக உத்தமர் எனப் போற்றப்படுபவர் காந்தியடிகள். அவரது இரு செயற்பாடுகளைப் பார்ப்போம்.
1936 இலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாகக் காந்தியடிகள் தன் புலனடக்கத்(தை பிரமசரியத்தை)ப் பறைசாற்றுவதாகக் கூறி ஆடையற்ற நிலையில் பெண்களுடன் படுத்துள்ளார். அவர்களுள் அவருக்குப் பேத்தி முறை உறவுப் பெண்ணான மனுவும் ஒருவர். 1946, திசம்பர் இருபதாம் நாள் முதல் காந்தியும் உறவில் அவரது பேத்தியான மனுவும் ஒரே படுக்கையில் ஆடையின்றி உறங்கத் தொடங்கினார்கள் என்கிறார் பிக்குபரேக்கு(Bhikhu Parekh) என்னும் அரசியல் கோட்பாட்டாளர். இத்தகைய காந்தியடிகளின் ஒழுக்க ஆய்வு முறை, பெண்களை இழிவுபடுத்துவதாகாதா? எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘, கௌதமர் முதல் காந்திவரை இன்னா செய்யாமை என்னும் விழுமியம்’ [ The Virtue of Non-Violence: from Gautama to Gandhi- Nick Gier] என்னும் நூலில் மெய்யியல் பேராசிரியர் நிக்கு கீயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அன்பர்கள் வ.உ.சி.க்குக் கொடுப்பதற்காகக் காந்தியடிகளிடம் 1912 ஆம் ஆண்டு கொடுத்து அனுப்பிய உரூ.5,000 தொகையை அவரிடம் கொடுக்காமல் வ.உ.சி. கேட்ட பின்பும் சரி பார்ப்பதாக இழுத்தடித்துப் பின்னரே 1920ஆம் ஆண்டுதான் கொடுத்துள்ளார்.
இது போன்ற பல குறைகளை உடைய உத்தமர் காந்தியடிகளை நாம் பித்தமர் என்று சொல்வதில்லை. நாட்டு விடுதலையில் அவர் கொண்டிருந்த பங்களிப்பால் பாராட்டத்தான் செய்கின்றோம்.
இந்திய விடுதலைக்கான எழுச்சிப் பாவலராகவும தேசியக் கவியாகவும் போற்றப்படுபவர் பாரதியார். அவரே புதுச்சேரியிலிருந்து தமிழகம் வந்த பொழுது தளையிடப்பட்டதால் ஆங்கிலேய ஆளுநருக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுப்பதுபோல் மடல் அனுப்பிப் பாதுகாப்பு பெற்றுள்ளார்.
பாரதியார் மிக அருவருப்பான முறையில் காமக் களியாட்ட நூலை எழுதியிருக்கின்றார். அவர் இறந்த பின் அதனைப் பார்த்த பாரதி யன்பர் ஒருவர் பாரதியாருக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று கருதி அவற்றை எரித்து விட்டார்.
பிறரைப்போல் பாரதியாரும் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பல தெய்வங்களைப்பற்றியெல்லாம் போற்றி எழுதிய பாரதியார்தான்,
“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்” என்று பாடியுள்ளார்.
மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு- பாரதியார் மூன்றாம் பரிசு பெற்ற பாடல் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” ஆகும். அப்பொழுது பாரதிதாசன், “ஆரியம் ஆரியம் என்று பாடும் நீங்கள் பரிசிற்காகத்தான் செந்தமிழ்நாடு எனப் பாடியுள்ளீர்களா?” என்று கேட்டுள்ளார். உடனே பாரதியார், “நான் வளர்ந்த சூழலில் அன்றாடம் வரும் சாதிக்கூட்டம் சமற்கிருதம், சமற்கிருதம் என்றே பேசி வந்தனர். அதன் தாக்கமே நான் முதலில் ஆரியம் ஆரியம் என்று பாடியுள்ளேன். எனினும் இப்போதைய சூழலில் நான் தமிழருமை உணர்ந்ததால் அந்த உண்மையைப் பாடியுள்ளேன்” என்றார். இவ்வாறு முரண்பாடு எழக் காரணம் வளர்ச்சி நிலை மாற்றமே. இதைக் குறை கூற ஒன்றுமில்லை.
பாரதியாரிடம் காணும் குறைகளைக் கருத்தில் கொண்டு அவரைத் தூற்றுவதில்லை.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்
தொழுது படித்திடடி பாப்பா“
எனப் பாடிய பாரதியாரைத்தான் போற்றுகிறோம்.
பெரியாரைப் போற்றித் தன் அமைப்பை நிறுவி வளர்த்த சீமானே, இன்றைக்கு அவருக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கவில்லையா? அதுபோல்தான் நாம் பலரைக் காண்கிறோம்.
பெரியாரிடம் பல குறைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நாம் பெரியார் ஈ.வெ.இரா.அவர்களைக் காலத்திற்கும் போற்றுவதே முறையாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகா! ஆகா!! ஆகா!!! அசத்தி விட்டீர்கள் ஐயா வழக்கம் போலவே! நினைத்துக் கொண்டே இருந்தேன், ‘பெரியார் பற்றி இப்படித் தொடர்ந்து அவதூறு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்களே! கண்டித்து ஏதும் எழுதுவீர்களே!’ என்று ஒரு தனித் தொடரே தொடங்கி விட்டீர்கள்! நெஞ்சார்ந்த நன்றி!! அதுவும் எடுத்த எடுப்பிலேயே காந்தியடிகளை ஒப்பிட்டு நீங்கள் தந்த தகவல்கள் “அடிச்சார் பார்யா முதல் பந்துலேயே சிக்சர்” என்பது போல் இருக்கிறது. சரியான விளாசல்!!
அன்பு நண்பரே, நீங்கள் தொடர்ந்து கருத்தீடகள் வழங்குவது வரவேற்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக உள்ளது. ஊக்கம் தரும் உங்களுக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்