(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)

தலைப்பு- தமிழமல்லனின்-அண்ணல் பாவியம்-ஆய்வுரை :thalaippu_thamizhamallanin_annalpaaviyam_aayvurai

  தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:

        எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை

           ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய்.

       கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால்

           கால்முளைத்து நடந்திடுமா உன்றன் ஆற்றல்.

——-   ——–   ———-   ——–   ——

உருட்டான கட்டைகளும், உடல்த டித்த

 உருவாளும் கருத்துக்கு வலிமை ஆமோ?

திருட்டையே தொழிலாகக் கொண்டோர் நீங்கள்.

 தெருச்சுற்றி ஏமாற்றிப் பிழைப்போர் நீங்கள்.

குருட்டான மயக்கத்தில் உடலை நம்பிக்

 கும்பிட்டுச் செல்வர்கால் வீழ்வோர் நீங்கள்

இருட்டான அறிவாலே இனத்தின் வாழ்வை

 இணையற்ற தனித்தமிழை எதிர்க்கும் மூடர்.

——-   ——–   ———-   ——–   ——

மெய்யான தமிழுணர்ச்சி இருந்தால் நீங்கள்

 மேலான பணிசெய்தல் உண்டா? இங்கே

பொய்யான தமிழ்ப்பெயர்கள் விளம்ப ரத்தில்

 போட்டிருக்கும் நிலைகண்டும் பேச்சில் வீரம்

செய்யத்தான் வந்துவிட்டீர்! இதோபா ருங்கள்!

 சிறப்பாகப் பெயர்ப்பலகை எழுதத் தீயை

வைத்தால்தான், உடைத்தால்தான், நொறுக்கி னால்தான்

 வாழ்ந்திடும்நம் வளத்தமிழும், கோழை நீங்கள்.

 என்ற பாடலைப் படித்ததும் எனக்கு மீண்டும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின்

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்

  தாய்தடுத் தாலும் விடேன்!

எமைநத்து வாயென எதிரிகள் கோடி

  இட்டழைத் தாலும் தொடேன்!

என்னும் வேகம் கொப்பளிக்கும் வீரவரிகள் நெஞ்ச வானில் மின்னலிடுகின்றன.

  மற்றொரு காட்சி. தனக்கு ஏற்பட்ட வேதனைகளால் வெந்துபோன, மனம் நொந்துபோன கதைத்தலைவி முல்லை காவலர்களால் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப் படுகின்றாள். அவள் அங்கிருப்பதை அறிந்த அவள் கணவன் செம்மல் மற்றும் அவனுடைய நண்பர்கள் அவளிடம் சென்று நடந்த உண்மையை உரைக்குமாறு கேட்கின்றனர். அவள் பதிலேதும் சொல்லவில்லை. பின்பு மனம்திறந்த அவள் பொங்கும் எரிமலையாக வெடிக்கின்றாள். அவளுடைய சீற்றச்சொற்களைக் கண்டு கேட்பவர்கள் நடுங்குகின்றனர். அவளை அமைதிப் படுத்த மமுயல்கின்றனர். முயற்சி வீணாகின்றது. இந்த நிலையை ஐயா அவர்கள் ஒரே வரியில், நினைத்துப் பார்க்கவே முடியாத வரியில் சொல்லியிருப்பதைக் கண்டு நான் வியந்து போனேன்.

மதியாத சிங்களத்தார் பேச்சுப் போலே

  மாற்றமெதும் இல்லாமல் ஆயிற் றையா

எந்தச் சூழலுக்கு எந்த உவமை! தமிழ் பற்றியும், தமிழ் இன நலன் பற்றியும், உண்ணும் போதும், உறங்கும் போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் அவரது உள்ளத்திற்கு மேற்கண்ட வரிகளே சான்றல்லவா?

  தமிழீழப் படுகொலைஞன் சிங்கள இராசபட்சேவை உலக நாடுகள் அத்தனையும் அன்போடு கேட்டுக்கொண்டும், அதிகாரத்தோடு எச்சரித்தும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அரக்கத்தனமாகத் தமிழ்மக்களைக் கொன்று குவித்த அந்தக் கொடுமனத்தை எந்த இடத்திலாவது குறிப்பிட்டாக வேண்டும் என்னும் அய்யாவின் வேட்கை இந்த இடத்தில் தணிந்திருக்கிறது போலும். ஆனால் அந்த உவமை அந்தக் காட்சிக்கே எவ்வளவு வலிமை சேர்த்திருக்கிறதென்பது படிக்கப் போகும் உங்களுக்கும் புரியும்.

பெண்ணுரிமை:

  தமிழைத், தமிழ் மக்களைத், தமிழ்நாட்டைப், பகுத்தறிவை, மூடத்தனத்தை, கற்பை இப்படி அனைத்தையும் சூடாகவும், சுவையாகவும் பாடிய பாவலரய்யா அவர்கள், பெண்ணுரிமையை மட்டும் விட்டுவிடுவாரா?  ஆணாதிக்கம் செய்வோர்க்கு அன்னைத் தமிழால் அறை கொடுக்கிறார்.

பெண்ணென்றால் இழிவாகப் பேசு கின்றீர்;

  ஆணினத்தார்; கெட்டுப்போய் நோயைத் தாங்கல்

புண்நாறிக் கிடந்தாலும் புகல மாட்டார்;

  புண்வந்த காலத்தும் அவரைக் காத்துப்

பெண்ணொருத்தி யைப்பார்த்துக் கட்டி வைப்பீர்;.

  பேசாமல், கூசாமல் ஆணைக் காப்பீர்.

  இந்த உண்மைநிலை இன்றைக்கும் நம்நாட்டில் நடக்கும் அவலமல்லவா?

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 

பாவலர் ஆறு.செல்வன்

அட்டை-அண்ணல்பாவியம்04 :attai_annalpaaviyam_04