சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6: கபிலர்
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 இன் தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் 6
கபிலர் – தொடர்ச்சி
‘பாரியில்லாத வாழ்க்கை பாழாகித் தொலையாதா?!’ என்று மனம் பதைத்தார் புலவர். புல்லிலை எருக்கா யினும் ஏற்கும் தெய்வம் போல, அறிவற்ற மடவரும் மெல்லியரும் சென்றாலும் அருள் சுரக்கும் கருணைத் தெய்வத்தை இழந்த தம் வாழ்வு காரிருளில் மூழ்கிக் கெட்டொழியாதோ என்று உள்ளம் குமுறினார். இவ்வாறு வாயில்லா முல்லைக்கும் வாட்டம் தீரப் பொற்றேர் வழங்கிய வள்ளல் வாய் மூடிக் கிடக்கும் நிலை காணப் பொறாராய், அவன் சென்ற இடம் நோக்கிச் செல்ல-உடற்சுமை நீக்கி உயிர் விடத்-துடித்தார் ; ஆனால், உத்தமன் பாரி உயிர் துறக்குமுன்பே அவனுக்கு உன் அன்பின் செல்வியரைக் காத்துப் பின்னரே உயிர் நீங்குவேன், என்று அளித்த உறுதியை எண்ணினார்; மாவண்பாரிக்குப் பிறந்த மாணிக்கங்களை அழைத்துக் கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய்க் கதறி அழுது கொண்டே பறம்பு நாட்டினின் றும் பெயர்ந்தார். அந்நிலையில் அப்புலவர் பெருமானார் அழுத குரல், இன்றும் அவர் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களில் எதிரொலி செய்வதன்றி, அப்பாடல்களைக் கற்போர்-கேட்போர்-கண்ணீரை எல்லாம் காணிக்கையாகப் பெறுகின்றதே!
‘அந்தோ! இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்-சிறிது எல்லைபோய் நின்றோர்க்கும் நிச்சயமாய்த் தோன்றும்-யானை மென்று போட்ட கவளத்தின் கோது போல மதுவைப் பிழிந்து போடப்பட்ட கோதுடையதாய்ச் சிதறியவற்றினின்றும் வார்ந்த மதுச்சேறொழுகும் முற்றம் படைத்த தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோன் மலை!…… அது மட்டுமோ! மட்டு இருந்த சாடியைத் திறப்பவும், ஆட்டுக்கடாயை வெட்டி வீழ்த்தவும், ஓய்தலில்லாத கொழுவிய துவையலையும், ஊனுடைய புலவுச்சோற்றையும் விரும்பியவாறெல்லாம் வழங்கும் மிக்க செல்வம் பெற்று முதிர்ந்து எம்முடன் முன்பு நட்புச் செய்த பறம்பு மலையே, இப்போது எங்கள் பாரி இறந்தானாக் கலங்கிச் செயலற்றுக் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத் தோடும் கண்களோடு நின்னைக் கையாரத் தொழுது வாயார வாழ்த்திச் செல்கின்றோம். பெரும் புகழ்ப் பறம்பே………… குறிய வளையணிந்த பாரி மகளிரின் மனம் கமழும் நறிய கூந்தலைத் தீண்டுதற்குரிய மணவாளரை நினைந்து நாங்கள் செல்வோம் ஆயினோம்,’ என்னும் கருத்தமைய,
ஈண்டுநின் றோர்க்கும் தோன்றுஞ் சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றில் தேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே.” (புறம் 114)
மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்(று) ஆனாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே ; இனியே, பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே !
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.” (புறம். 113)
இவ்வாறு தாயற்ற சேய்போல அழுது துடித்துப் பாரி மகளிரோடு காலும் மனனும் கலங்கித் தடுமாற, உயிரற்ற கூடாய்க் கபிலர் பெருமானார் பறம்பின் எல்லை இகந்து செல்லல் ஆயினர்; தம் ஆருயிர்த் தலைவன்றன் அருமைச் செல்வியரின் அன்பு வாழ்க்கையைத் தொடங்கி வைக்கவும், இருள் சூழ்ந்த தம் துயரவாழ்க்கையை முடித் துக்கொள்ளவும் கருதி, அடிமேல் அடி பெயர்த்து வைக்க லாயினர். இவ்வாறு ஏந்திழை நல்லாரைக் காத்து அருள்செய்ய வல்லாரைத் தேடிச் சென்ற கபிலர் பெருமானார், முதற்கண் ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ’வுழைச் சென்றார். சென்ற செங்காப்புலவர் பாரியன்றி வேறெவரையும் பாட நினையாத பைந்தமிழ்ச் சான்றோர்-அவன் புகழெல்லாம் எடுத்து ஒதினர். விச்சிக்கோவின்-கல்லகவெற்பனின்-மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்தில் பலவின் கனி கவர்ந்துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழைமிசைத் துஞ்சும் காட்சியை எடுத்துரைத்து, மவை வளம் கூறுவார் போல அவன் மனத்தில் பெருமையும் பெருமிதமும் கடமை உணர்வும் ஊற்றெடுக்க அவன் நாட்டின் பெருவளத்தைப் பாடினார்.
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே!
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் ;
யானே, பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்.
நினக்குயான் கொடுப்பக் கொண்மதி. !” (புறம். 200)
என இவ்வாறு பாரியின் புகழையும், தம்நிலையையும், விச்சிக்கோவின் கடமையையும் கல்லும் கரைந்துருக எடுத்தோதினார். ஆனால், அந்தோ! கல்லினும் வலிய அக்கல்லக வெற்பன் மனம் மட்டும் கசியவில்லை. நொந்த உள்ளத்தினராய், தளர்ந்த கடையினராய்க் கபிலர் பெருமானார் அடுத்து வேளிர் குலத்தவனாகிய இருங்கோவேள் பாற்சென்றார்; அவன் புகழும் போற்றினார்; தம் சென்ற காலச் சிறப்பையும் நிகழ்காலச் சிறுமையையும் நினைந் துருகிக் கண்ணீர் மல்கிப் பேசலானார்; இருங்கோ வேளின் -புலிகடிமாலின்-தொன்மைக் குடியின் சிறப்பையெல்லாம் செப்பினார்; வடபால் முனிவன் வேள்விக் குண்டத்தில் தோன்றி, உவராவீகைத் துவராபதியை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்வேளாய் விளங்கிய அவன் பாண் கடன் ஆற்றும் பண்பினைப் போற்றினார்; வானம் கவிக்க, வார்கடல் சூழ, வையத்தில் பொன்படு மால்வரைக்குப் பொருந்திய தலைவனாய் விளங்கும் அவன், வெள்வேல் வேந்தர் வெருவி ஓடச்செய்யும் படையுடை வளமார் நாட்டின் வண்புகழ்த் தலைவனாய் விளங்கும் பெற்றியினைப் பின் வருமாறு புகழ்ந்தார்:
இவர்யா ரென்குவை யாயின், இவரே,
ஊருடன் இரவலர்க்(கு) அருளித் தேருடன்
முல்லைக்(கு) ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் ; யானே
தந்தை தோழன்; இவரென் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே.
* * * * * * * * *
வேளிருள் வேளே! விறல்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான்தர இவரைக் கொண்மதி. (புறம். 201)
கடமையுணர்ச்சியின் மேலிட்டால் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர் இவ்வாறு குறுநில மன்னன் இருங்கோவேளின் இசை பரவிப் பெரிதும் வேண்டினார்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்
Leave a Reply