(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9. தொடர்ச்சி)

அகல் விளக்கு 

பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும்.

மனம் மட்டும் அல்ல, தோற்றமும் அவ்வளவு அழகாகக் கவர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது. நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது பாக்கியத்திற்குத் திருமணம் ஆனதாம். நிறைந்த கர்ப்பமாக இருந்த காரணத்தால் தான் அம்மா அவருடைய திருமணத்திற்குப் போகவில்லை என்று ஒரு பேச்சில் தெரிவித்தார்.

நான் பிறந்த அன்றுதான், பாக்கியம் கணவனை இழந்தாராம். பிறந்த மகனுடைய முகத்தைக் கண்டு பூரித்து முகமலர்ந்து இருந்த என்தாய், மூன்றாம் வீட்டின் அழுகை ஆரவாரத்தைக் கேட்டுச் செய்தி தெரிந்து கொண்டு கண்ணீர் வடித்தாராம். பாக்கிய அம்மையாரின் உள்ளத்தில் என்னை வளர்த்த பாசம் ஒரு புறம் இருந்தபோதிலும், என்னைப் பார்த்த சில வேளைகளில் தம் கணவனை இழந்த நாள் நினைவுக்கு வந்து கண்ணீர் விடுவது உண்டு. ஆனால் எனக்கு அறிவும் நினைவும் வளர்ந்தபிறகு, அப்படிப் பாக்கியம் கண்ணீர் விட்டதைப் பார்த்ததில்லை. நான் குழந்தையாக இருந்தபோது அப்படிக் கண்ணீர் வடித்திருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?

அம்மா சொன்னது இன்னொன்றும் – அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னதும் – நினைவுக்கு வருகிறது. அம்மாவும் பாக்கியமும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, நான் அம்மாவின் நெற்றியிலிருக்கும் குங்குமத்தை எடுத்துப் பாக்கியத்தின் நெற்றியில் இடுவேனாம். பாக்கியம் தடுத்துத் தடுத்துக் கண்ணீர் விடுவாராம். “வேண்டா கண்ணு! நான் இடக்கூடாது கண்ணு!” என்று அழுவாராம். “அக்கா மூஞ்சிக்குத்தான் குங்குமம் நல்லா இருக்குது” என்று நான் பிடிவாதம் செய்வேனாம்.

உண்மையாகவே பாக்கியம் அழகான நெற்றியும் கண்களும் உடையவர். அவருடைய கருவிழிகளில் ஒளி மிகுதி. என் தாயின் முகத்தைவிடப் பாக்கியத்தின் முகத்தில் கவர்ச்சி அதிகம். அதனால் என்னுடைய பிஞ்சு நெஞ்சம் இரண்டு முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும்; பொட்டு இல்லாத குறையைத் தீர்க்க எண்ணியிருக்கும், பாக்கியம் சொன்ன காரணம், அப்போது என் அறிவுக்கும் பொருந்தாத காரணமாக இருந்திருக்கும்.

அதனால் நானும் பிடிவாதம் செய்திருப்பேன். ஒரு நாள் என் பிடிவாதத்திற்குப் பாக்கியம் விட்டுக் கொடுத்தாராம். நான் அந்த அளவில் விடாமல், கண்ணாடி கொண்டுவந்து “பாக்கியம்மா, நீயே இப்போ பார். எவ்வளவு அழகாக இருக்கே” என்று கண்ணாடியைக் காட்டினேனாம். பார்க்க முடியாதபடி பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்ததாம். உடனே என்னைக் கட்டி அணைத்து, “கண்ணே! உனக்கு இருக்கிற அவ்வளவு கருணை கடவுளுக்கு இல்லையே, கண்ணே!” என்று கதறி அழுதாராம்.

இப்படி எல்லாம் பாக்கியத்திடம் அன்பாகக் கொஞ்சியும் உள்ளத்தின் துன்பத்தைக் கிளறியும் பழகிப் பழகி அவருடைய உள்ளத்தில் ஒரு மகனுக்கு உரிய இடத்தைப் பெற்றுவிட்டேன். உணர்ச்சி மிக்க காதலுக்கு உரிய அவருடைய இளமைப்பருவம் என்னுடைய ஆடல் பாடல்களிலும் பிடிவாதங்களிலும் அழுகை ஆரவாரங்களிலும் ஈடுபட்டுக் கழிந்தது. பாக்கியத்திடம் நான் பெற்ற அன்பில் பாதிதான் என்தங்கை மணிமேகலை பெற்றிருப்பாள். தம்பி பொய்யாமொழியோ அதிலும் பாதிதான் பெற்றிருப்பான்.

சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தபோது, பாக்கியத்தின் துயரம் ஒருவாறு ஆறிப்போயிருந்தது எனலாம். கண்ணீரிலும் விம்மலிலும் மூழ்காமல், சிந்தனையிலும் பெருமூச்சிலும் பாக்கியத்தின் துயரம் கழிந்த காலம் அது. கடமையுணர்ச்சியோடு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் என் மேலும் சந்திரன் மேலும் அன்பு இருந்தது; அந்த அன்பு ஒரு தாயின் அன்பு என்று சொல்ல முடியாதபடி குறைந்திருந்தது. என்மேல் பேரன்பு செலுத்தி, நான் விலக விலக, ஏமாற்றம் அடைந்த உள்ளம் ஆகையால், மறுபடியும் அப்படிப்பட்ட பாசம் பிறக்கவில்லை போலும்.

அந்தக் குடும்பம் சிறைபோன்ற குடும்பம்; சிறையிலாவது ஒத்த மனம் உடையவர்கள் இருப்பார்கள்; அதனால் ஆடல்பாடலும் சிரிப்பும் வேடிக்கையும் இருக்கும். பாக்கியத்தின் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லை. தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கியம் பருவம் அடைவதற்கு முன்பே அவர் தாய் காலமாகிவிட்டாராம், தந்தையோ அன்று முதல் நொந்த உள்ளத்தோடு குடும்பச் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்தார். பாக்கியத்திற்கு ஒரு தம்பி உண்டு. அவர் நலிந்த உடல் உடையவர். பதினாறு வயதிலேயே அறுபது வயதுக்கு உரிய அடக்கமும் ஒடுக்கமும் அவரிடம் இருந்தன.

விநாயகம் என்பது அவருடைய பெயர். அவர் அக்காவுடன் பேசுவது குறைவு. பத்தாவதில் தேர்ச்சி பெறாமல், கூட்டுறவு மளிகையில் கணக்கராகப் போகுமாறு வற்புறுத்தப்பட்டார். அந்த வேலைக்குப் போவதும் வருவதும், அக்கா நான்கு சொல் சொல்லிக் கேட்டால் இரண்டு சொல் விடையாகச் சொல்வதும், திண்ணையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கிடப்பதும், படிப்பகத்துக்குப் போய்ச் செய்தித்தாளை மட்டும் படித்து வருவதுமாக இப்படி அவர் வாழ்க்கையைக் கழித்தார். இப்படிப்பட்ட தம்பியோடு ஓர் அக்கா எப்படி உள்ளம் திறந்து சிரித்துப் பழக முடியும்? தந்தையோ மனைவி இறந்த பிறகு இட்ட முக்காட்டை இன்னும் களையாதவர் போல் இருந்தார். தலையில் இட்ட முக்காட்டைக் களைந்துவிட்டாலும், உள்ளம் முக்காடு இட்டபடியே கிடந்தது.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு