(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 7

கபிலர்

ஆனால், விச்சிக்கோவைப் போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அதனினும் கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர் கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்றோரின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணாக்கினான். இருங்கோவேளின் பொருந்தாச் சொற்கேட்ட புலவர் பெருமானார், ஆற்றொணாக் கோபங்கொண்டார். “இயல்தேர் அண்ணலே, ஒலியல் கண்ணிப் புலிகடி மாலே, வெட்சிக்காட்டில் வேட்டுவர் அலைப்பப் புகலிடம் காணாத கடமாவின் நல்லேறு சாரல் மணி கிளம்பவும், சிதறுபொன் மிளிரவும் விரைந்தோடும் நெடுவரைப் படப்பையில்-வென்றி நிலை இய விழுப்புகழ் இருபாற்பெயரிய உருகெழு மூதூரில்-கோடி பல அடுக்கிய பொருள் நிற்குதவிய நீடுநிலை அரையம் அழிந்த வரலாறு கேள்: நின் முயற்சியானன்றி நுந்தை தாயம் நிறைவுறப் பெற்றுள்ள புலிகடி மாலே, உன்னைப் போல அறிவுடையனாய் உன் குடியில் உனக்கு முன் பிறந்த ஒருவன் என்போல் புலவராகிய கழாத்தலையாரை இகழ்ந்ததால் கிடைத்த பயன் அது! இயல்தேர் அண்ணலே, இவ்வருமைச் செல்வியர் கைவண் பாரியின் மகளிர். ‘இவர் எவ்வியின் பழங்குடியிற் படுவாராக,’ என்று நான் கூறிய தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக! பெருமானே, புலிகடி மாலே, கருங்கால் வேங்கை மலர் வீழ்ந்து கிடக்கும் துறுகல் கடும்புலி போலக் காட்சியளிக்கும் காட்டின் தலைவனே, நின் பால் விடை கொண்டேன் , போகின்றேன்; நின்வேல் வெல்வதாக!” [புறம்.202] என இருங்கோவேளின் சிறுமைப்பண்பை இகழ்ந்து கூறி அவன் நாட்டை விட்டு வெளியேறினார் புலவர் பெருமானார். இனி என் செய்வார்!

ஆர்வத்துடன் அணுகி வேண்டிய இரண்டிடங்களும் பயனற்றுப் போயின! பதடிகளால் மனமும் புண்ணாகியது. இந்நிலை எண்ணித் துடித்தழுத புலவர் உள்ளம் சிந்தனையில் தோயலாயிற்று. “அந்தோ! அருந்தமிழ் வள்ளல் பாரியின் அருமைச் செல்வியரினும் செல்வம் பெரிதுண்டோ! இதனை ஏற்கவும் காக்கவும் சிறுமதியாளர் சிந்தனை இசையவில்லையே! என்னே கொடுமை! என்ன காரணம் இதற்கு?” என்று எண்ணினார். ”ஆம்! காய்த்த மரத்திலன்றோ கல்லெறியும் இவ்வுலகம்? கோவேந்தன் குடியானாலும், பொன்னும் பொருளும் இன்றேல், மன்னரானார் மதிப்பரோ?” என்று எண்ணினார்;

“செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும்
எஃகதனின் கூரியது இல்”         (குறள். 597)

என்ற எண்ணம் கொண்டு திண்ணியரானார்; ஆனால், அவ்வெண்ணத்தில் வெற்றி காணும் வரை பாரியின் அருமை மகளிர்க்குப் பாதுகாவல் ஆவார் யாரெனக் கலங்கினார். இந்நிலையில் பாரி மகளிர் வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியும் அது வழங்கிய காட்சியும் கபிலர் பெருமானார் நெஞ்சில் நெருப்பைக் கொட்டின.

அண்ணல் பாரியின் அருமைச் செல்வியர் தங்கி யிருந்த ஏழை மனை முள் மிடைந்த வேலியால் சூழ்ந்திருந்தது; சுரைக்கொடி படர்ந்திருந்தது; பீர்க்கு முளைத்திருந்தது; முன்னிடமெல்லாம் புல், முளைத்துக் கிடந்தது. இத்தகு மனையினருகே ஈத்திலைக் குப்பை மேடும் இருந்தது; பாரியின் செல்வ மகளிர் அக்குப்பை மேட்டின்மீது ஏறித் தங்கள் பிஞ்சிள விரல்களால் உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளை எண்ணியவாறு இதயத் துயரை ஒருவாறு மறந்திருந்தனர். இக்கடுந்துயரக் காட்சியைக் கண்டார் கபிலர் மனங் குமுறினார்; “அந்தோ! இதுவோ வாழ்க்கை! ஓங்குபுகழ்ப் பறம்பின் உச்சிமீது நின்று அன்புப் பாரியின் அருமை அறியாது அழுக்காறு கொண்ட மன்னர் மலையைச் சுற்றி அணி அணியாய் நிறுத்தி வைத்திருந்த கலிமாவை எண்ணி எண்ணி எள்ளி நகையாடிய அவ்வேந்திழை நல்லார், இன்று குப்பைக் குவியல்மீது நின்று அதே விரல்களால், உருளும் வண்டிகளை-உப்பு வண்டிகளை-எண்ணுவதோ! அதுவும்,அந்தோ நம்பால் அடைக்கலமாக இருக்கும் நாளில் என் கண் முன்பேயோ! அந்தோ! அருமை வள்ளலே அருட்கோமானே! அண்ணல் பாரியே! வீரத் திலகமே! புகழ்த் தெய்வமே! இதுவோ நான் பெற்ற பரிசில்! ஊழே, மிகக் கொடியை நீ!” என்று எண்ணி மனந்துடித்தார் கபிலர். துடித்துத் துயருற்ற புலவர் பெருமானார், எவ்வாறேனும் பொருள் காண்பேன்! இன்னகை மகளிரைப் பொன்னொளிர் வாழ்விற்கு உரியராக்குவேன்!’ என்று உறுதிகொண்டு, செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளர்பால் பாரி மகளிரை அடைக்கலமாக்கிச் செல்வம் திரட்டி வரச் செல்வக்கடுங்கோ வாழி யாதனை அடைந்தார்.

பாரியைப் பாடிய வாயால் வேறு எவரையும் பாட எள்ளளவும் விரும்பாத நெஞ்சு படைத்தவர் கபிலர். அதுவும் தமக்குப் பொருளுக்காகப் பாடக் கனவிலும் விழையாத கலை நெஞ்சம் கபிலருடையது. இவ்வுண்மையை அவர் வாழ்வையும் வரலாற்றையும் ஊடுருவிக் காண்பார் உணர்வது திண்ணம். மாவண் பாரியன்றி வேறு யாரையேனும் அவர் போற்றினார்-பாடினார்-என்றால், அது தினையளவும் தந்நலங் கருதாது பிறர் நலம்- பொது நலம்-கருதியமையாலேயே ஆகும். சான்றாகக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கி ஒருவாத் புகழ் பெற்றிருந்த பேகன் என்பானை நல்லிசைக் கபிலர் பாடிய செய்தியை இங்கு நாம் மறவாது நினைவு கூர்தல் பொருத்தமும் பயனும் உடையது ஆகும்.

தாயுமானவர் உள்ளமுருகிக்கூறியதுபோல, ‘கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து’ ஆருயிர்கள்பால் அன்பு காட்டி அழியாப் புகழ் பெற்றோருள் ஒருவன் அல்லனோ செந்நாப் புலவர் பாடும் புகழ்படைத்த ‘கடாஅ யானைக் கலிமான் பேகன்’? மயில் ஆடி அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை அதற்கு ஈந்த அருள் வள்ளல் அல்லனோ பேகன்? இவ்வாறு கான மஞ்ஞைக்கும் கலிங்கம் நல்கிய அவ்வாவியர் பெருமகனது-பெருங்கல் நாடனது-கருணை வாழ்விற்கே களங்கமாக, அவன் வாழ்வில் எவ்வாறோ புகுந்துவிட்டது ஒரு குறை. தோகை விரித்து ஆடும் மயிலுக்கு அருள் செய்த அவன், தன் கற்பின் கொழுந்தாய் விளங்கிய வாழ்க்கைத் துணைவியை மனைக்கு விளக்காகிய வாணுதலை- கண்ணகியைக் கை விடத் துணிந்தான். கைவண்மை மிக்க பேகன் தன் மனைவியிடம் கொண்ட மாறுபாடு, நாளடைவில் புலவர் நெஞ்சையெல்லாம் புண்படுத்தி, கலைஞர் உள்ளத்தை யெல்லாம் கலக்கி, இரங்க வைக்கும் அளவிற்குப் பெரியதாய் விட்டது. இந்நிலையில் தமிழ்ச்சான்றோர் பலரும் அவன்பால் சென்று அறிவுரை கூற முற்பட்டனர். அச்சான்றோருள் ஒருவராய்க் கபிலரும் விளங்கினார். துன்பத்தின் சிறு நிழலும் மன்னுயிர்கள்மீது படிதல் ஆகாது என்ற அருள் நெஞ்சம் படைத்த சான்றோர் அல்லரோ கபிலர் பெருமானார்?

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்