(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 இன் தொடர்ச்சி)

 

சங்கக்காலச் சான்றோர்கள் – 8

கபிலர்

தாம் கண்ட காட்சியை கல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலை-குழலின் துன்ப இசை போன்ற அழுகுரலை யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதையாலேயே காட்சிப்படுத்திக் காட்டினார். “கைவண்மை சான்ற பேக, நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த சுற்றத்தின் பசியைப் போக்க, உன் சீறூர் எய்தி உன் வாயிலில் வாழ்த்தி நின்றேன்; உன்னையும் உன் மலையையும் பாடினேன். அதனைக் கேட்ட அளவில் துயரம் மிகுந்து கண்ணீர் சொரிந்து அதனை நிறுத்தவும் ஆற்றாளாய் விம்மி விம்மி மிக அழுதாள் ஒருத்தி. அவள் அழுத குரலும் குழலின் துன்ப இசைபோல இருந்தது! அவள் யாரோ! இரங்கத்தக்கவளாய் இருந்தாள்!” என்றார் கபிலர்.

‘கைவண் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே!
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளியிருஞ் சிலம்பிற் சீறுர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாட இன்னா(து)
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைய விம்மிக்
குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே!’         (புறம். 148)

கண்ணகியின் இளமை-பேகனைப் பாடிய அளவில் அவன் நினைவு அவளை வாட்டிய துயர்-அத்துயர் தாங்காது அவள் விம்மி விம்மி அழுத அழுகை-கருணை சிறிதுமின்றி அவளைத் துறந்த பேகனது கொடுமை-ஆறறிவற்ற உயிர்க்கும் இன்ப அருள் புரியும் வள்ளல் தன் வாழ்க்கைத் துணைவிக்கு ஊறு செய்யும் அறமற்ற பண்பு-எத்தகையராயினும், யாரோ ஒருத்தியாயினும், அவளுக்கு இரங்கித் தீதில் நல்லருள் செய்ய வேண்டிய பெருங்கடமை-இவையெல்லாம் வயங்குபுகழ்ப் பேகன் நெஞ்சில் விளங்கி, அவன் உள்ளந்திருந்துமாறு செறுத்த செய்யுட்செய் செந்நாவினராகிய கபிலர் பெருமானார் பாடிய இப்பாடலைப் படிக்குந்தொறும் புலனழுக்கற்ற அப்புலவர் பெருந்தகையின் கருணை உள்ளமும் பொதுநல உணர்வும் நமக்குப் புலனாகின்றன அல்லவோ? இவ்வாறு எவ்வுயிரும் இன்புற்றிருக்கவே துடித்தது அச்சான்றோரின் தமிழ் நெஞ்சம். இஃதன்றித் தன்னலம் சிறிதும் காணா அத்தகைசால் உள்ளத்தின் பெற்றியினை எவரே அளந்து போற்ற வல்லார்!

பேகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பின் பிரிந்த கண்ணகியின் நிலை குறித்தே இவ்வாறெல்லாம் கவன்ற அச்சான்றோரின் கருணை இதயம், தம் ஆருயிர்த் தோழனுடைய இரு கண்மணிகள் அனைய செல்வியரின் ஆதரவற்ற நிலை குறித்து எவ்வாறெல்லாம் கலங்கியதோ! தாம் நம்பிச் சென்று தம் செந்நாவால் பாடிய இருங்கோவேளும் விச்சிக்கோவும் தம் நெஞ்சு புண்ணாகச் செய்த நிலைமை மீண்டும் மீண்டும் அவர் நினைவிற்கு வந்து அவரை வாட்டியது. அப்போதெல்லாம் அவர், தோல்வி ‘துலையல்லார்கண்ணும் கொளலே சால்பிற்குக் கட்டளை போலும்!’ என நினைந்து, தம் மனத்தைத் தாமே ஆற்றிக்கொண்டார். எனினும், பாரி மகளிர் நினைவே அவரைப் பெரிதும் அலைத்தது. வள்ளல் பாரியே, எவ்வாறு என் பணி ஆற்றுவேன்? எவ்வாறு உன் ஆவி குளிரச்செய்வேன்?” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தார். ‘பாரியைக் காணவே இக்கண்கள்; அவன் புகழ் பாடவே இந்நா; அவன் குடிகொள்ளவே இவ்விதயம்; அவனுடன் பழகி இன்புறவே இவ்வாழ்வு,’ என்றெல்லாம் தம்மைப் பற்றியே எண்ணிலடங்கா இன்பக் கனவுகள் கண்டு இறுமாந்திருந்தவர் கபிலர்.

ஆனால் என் செய்வார்! தம் ஆருயிர்த் தோழனுக்கு ஆற்ற வேண்டிய நட்புக் கடனுக்காக மனந்தேறிச் சேரலர் கோவைச் செந்தமிழ்க் கவிகளால் அணி செய்ய மனங் கொண்டார். அவனுழைச் சென்ற அருந்தமிழ்ப் புலவர் கபிலர் பெருமானார், அங்கும் அண்ணல் பாரியின் அழியாப் புகழை ஆர்வத்துடன் பாராட்ட மறந்தாரில்லை. ‘சேரலர் பெருமானே, பசும்புண் பட்ட வாய்போல வெடித்திருக்கும் பலாவினின்றும் வார்ந்து ஒழுகும் மதுவினை அள்ளிச் செல்லும் வாடைக் காற்று ஓடி வழங்கும் பறம்பு காட்டின் பெருவிறல் தலைவன்-சித்திரச்செய்கை போன்ற வித்தகத் தொழில் புனைந்த நல்ல மனையின்கண் வாழும் பாவை நல்லாள் கணவன்-பொன் போலப் பூத்த சிறியிலைப் புன்கால் உன்னத்தின் பகைவன் – புலர்ந்த சாந்தும் புலராத ஈகையுமுடையோன்-மலர்ந்த மார்புடை மாவண் பாரி-எங்கள் தலைவன். அவன் பரிசிலர் முழவு மண் காய்ந்தொழிய, இரவலர் கண்ணிர் இழிந்தோட, மீளா உலகிற்குச் சென்றுவிட்டான். அதனால், நான் நின்னிடம் கையேந்தி இரக்க வந்தேனில்லை; நின் புகழைக் குறைத்தோ மிகுத்தோ கூறேன். கொடுத்தற்கு வருந்தா நெஞ்சும், ஒரு சிறிதும் முனைப்பற்ற உள்ளம் காரணமாக வாரி வழங்கும் போதும் களிவெறி கொள்ளாப் பண்பும், நீ கொடுக்குந்தோறும் மாவள்ளியன் என மன்பதை போற்றும் புகழ் ஒலியும் நின் பால் அமைந்திருத்தலின், உன்னிடம் வந்தேன்,’ எனப் புலாஅம் பாசறைத் தலைவனாகிய செல்வக் கடுங்கோவின் சிறப்பினை விதந்தோதி வாழ்த்தினார். [பதிற்றுப்பத்து, 61] ‘வயங்கு செந்நாவின’ராகிய கபிலர் பெருமான் திருவாயால் புகழ் பெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதன், சிந்தை குளிர்ந்து, செந்தமிழ்ச் சான்றோரைத் தலையுற வணங்கி, சிறப்பெலாம் செய்து ‘சிறுபுறம்” என்று கூறி, நூறாயிரம் காணம் கொடுத்து, நன்றாவென்னும் குன்றேறி நின்று, நற்றமிழ்ப் பெரியார்க்குத் தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் கொடுத்தான். என்னை கபிலரின் மாட்சி! என்னே அக்கோவேந்தன் குணச் சிறப்பு!

இவ்வாறு இரவலராய்ச் சென்ற கபிலர் பெருமானர் புரவலராய் மீண்டார். எனினும், அவர் இதயத்தில் அமைதியில்லை. அரிவையரின் கடிமணம் முடியும் நாளன்றோ அச்சான்றோர் உள்ளம் இன்பக் கடலில் திளைக்கும் திருநாள்? இரு குறுநில மன்னர்பால் முன்னம் சென்று மனமிடிந்து போன கபிலர், மீண்டும் எவர்பால் செல்வது என்று ஏக்கமுற்றிருந்தார். அந்நிலையில் அச் சான்றோர் நெஞ்சில் புலவர் பாடும் புகழ் படைத்து அந்நாளில் பெண்ணையாற்றங்கரையில் பீடுற்று விளங்கிய மலையமான் திருமுடிக்காரியின் நினைவு எழுந்தது. அவர் மகிழ்வு துள்ள, நம்பிக்கை ஒளி மின்ன, அவன் வைகும் திசை நோக்கி நடந்தார்; அவன் திருவோலக்கம் புகுந்து, கோவலூர்க்கோவின் புகழ் போற்றி வாழ்த்தினார். அந்நிலையில் மலையமான் மகிழ்வு மிகக் கொண்டு வழக்கம் போலப் பொன்னும், மணியும், புனைநல் தேரும் வழங்கினான். அது கண்ட புலவர் நெஞ்சம் துணுக்குற்றது. “என்னே! என் செந்தமிழ்க் கவிதையெல்லாம் இப்பொன்னிற்கும் புனை எழில் தேருக்குமோ எழுந்தன? வரையாது வழங்கிய கோமான் பாரியின் ஆருயிர் நண்பன் யான்; வெறும்பொருளுக்கு வருந்தும் இரவலனல்லேன். இவனும் ஆழ்ந்திருக்கும் என் கவிதையுளம் அறியானோ!” என்று இனைந்து, கழல் புனை காரியைப் பார்த்து, “மாவண் தோன்றலே, ஈதல் எளிது; வரிசை அறிதலோ அரிது. ஆகலான், புலவர்மாட்டுப் பொது நோக்கு ஒழிக!” எனும் கருத்து அமைய,

‘ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்!
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே’         (புறம். 121)

என்ற அருந்தமிழ்க் கவிதையை அவன் மனத்தில் தைக்கும் வண்ணம் அஞ்சாது கூறினார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி:

சங்கக்காலச் சான்றோர்கள்