(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 9

கபிலர்


புலவர் கருத்தறிய மலையமான் பெரிதும் விழைந்தான். அஃதறிந்து ஆராமகிழ்வு கொண்டு, அருந்தமிழ்ப் புலவரும் பெருமை சான்ற வேள் பாரியின் மகளிரை வதுவை புரிய உதவ வேண்டும் என்ற தம் விருப்பத்தைக் கூறி, அதுவே தாம் விழையும் பரிசில் எனவும் இயம்பினார். புலவரின் கருணையுள்ளத்தையும், கருவி வானம் போல வரையாது இரவலர்க்குச் சுரந்த வள்ளியோன் மக்கட்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையையும் எண்ணிப்பார்த்தான் காரி. அவன் உள்ளத்தில் ஒர் அழகோவியம் எழுந்தது. மாவண் பாரியின் மகளிரும் தன் மக்களும் வதுவைக் கோலத்தில் வீற்றிருக்கும் திருக்காட்சி அவன் உள்ளக் கிழியில் உயிரோவியமாய் உருப்பெற்றிருத்தல் கண்டான். தீந்தமிழின் இன்பம் போன்றதொரு பேரின்பம் அவன் உடலெல்லாம் பாய்வதை உணர்ந்தான்;

‘உள்ளத்து எழுந்த இவ்வெண்ணமே வாழ்வாக-நனவாக-மலராதோ!’என்று ஏங்கினான்; தன் அருமை மக்களின் மனம் அறிய முயன்றான்; தான் பெற்ற செல்வர்கள்-அறிவும் ஆண்மையும் அருளும் ஒருங்கே பெற்ற காளையர்-கருத்தும் எவ்வாறோ தம் மனம் போலவே இருக்கக்கண்டான். பருவ மழை கண்ட பயிர் போல அவன் உள்ளம் பூரித்தது. ‘நெடுமாப் பாரியின் மகளிர் என் மருகியர்!’ என்ற நினைவு அவன் சிந்தையெல்லாம் தேனாகச் செய்தது. அளவிலா மகிழ்வு கொண்டான் அத்தேர்வண் தோன்றல். ’பறம்பின் கோமான் செல்வியரை அடைய மலையமான் குடி செய்த மாதவம் என்னையோ!’ என இறும்பூது கொண்டு, இருந்தமிழ்ப் புலவர் கோனிடம் தன் கருத்தையும் இசைவையும் கூறி, உவகைக் கடலாடியிருந்தான். கபிலர் பெருமானர் கொண்ட மகிழ்விற்கும் ஒர் எல்லையுண்டோ! அவர் தமிழ் நெஞ்சம் இன்பவாரியாயிற்று. ‘பாரியே, பறம்பின் கோமானே, சேட்புலஞ்சென்ற செம்மலே, என் கடன் இனிது முடியலாயிற்று!’ என்று அவர் உள்ளம் இன்ப வெள்ளத்தில் துள்ளிக் குதித்தது; ஆடிப் பாடி ஆனந்தக் கண்ணீர் மல்கித் திளைத்தது. இந்நிலையில் மலையமான் மைந்தர் இருவரும் மாவண் பாரியின் மகளிர் இருவரையும் திருக்கரம் பற்றி, இருநில மக்கள் இதயம் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தனர்.

அருமைத் தலைவனது ஆவி குளிர நட்புக் கடனாற்றிய புலவர் கோமானார் நெஞ்சம் மகிழ்வுக் கடலில் நீந்தி விளையாடியது. அவர், எல்லையில்லா மகிழ்வால் எம்மான் காரியின் புகழெல்லாம் இன்பத் தமிழ்க் கவிதைகளால் பாடி, அவனி உள்ள வரை அவன் பெருமை அழியா வண்ணம் செய்தார். அவர் பாடிய அருந்தமிழ்க் கவிதைகள் அந்நாள் புலவர் நெஞ்சிலெல்லாம் இன்பத் தேன் பாய்ச்சிற்று.

‘பறையிசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்(கு) இனியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.’         (புறம். 126)

என நல்லிசைப் புலமை மெல்லியலாராகிய மாறோக்கத்து நப்பசலையார் போற்றிப் புகழ்ந்துள்ளார் என்றால், செஞ்சொற்கபிலரின் அருந்தமிழ்க் கவிதையின் ஆற்றலை எவரே அளந்துரைக்க இயலும்!

நெடுமாப் பாரிக்குத் தாம் செய்ய வேண்டிய ஒரே கடமையையும் செய்து முடித்த பின் இவ்வுலகத்தில் கபிலருக்குச் சுமை ஏது? ‘உள்ளம் கலந்து உயிர் கலந்து பழகிய பாரியில்லையே!’ என்ற ஏக்கமே புலவரின் இதயத்தைப் பிளந்தது.
‘கடமை முடிந்தது; பாரியில்லா நம் வாழ்வும் முடிக!’ என்று கருதினார் கபிலர் பெருமானார். அந்தோ! நானிலமெல்லாம் கண்ணீர் சிந்தி நடுங்கு துயர் அடைய, நற்றமிழ்க் கவிஞர் தாம் எண்ணியதை நிறைவேற்ற உறுதி கொண்டார்; பெண்ணையாற்றின் நடுவில் திண்ணிய சிந்தையராய் வடதிசை நோக்கி அமர்ந்தார்; உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்க உளங்கொண்டார். “அந்தோ! அருந்தமிழ்ப் புலவரேறே, பறம்பின் கோமான் ஆருயிர்த் தோழரே, செய்ந்நன்றி மறவாச் செம்மலே, மதியாரை மதியாத மாற்றுயர்ந்த பசும் பொன்னே, மறைந்த வள்ளலின் மாணிக்கங்களைக் காத்த கருணை முகிலே, மாமணியே, மங்காப் புகழ் ஒளியே, வண்டமிழ்ச் செல்வரே, சங்கத் தமிழ் வளர்த்த எங்கள் குலச் செல்வமே,” என்று நாத் தழுதழுக்கக் கூறிஉடல் நடுங்க-உள்ளங்குமுற-உயிர் சோர நற்றமிழ் மக்களெல்லாம் குவித்த கையராய்க் கூடி நின்று கண்ணீர் பெருக்கினார்கள்.

அந்நிலையில் இருந்தமிழ்ப்புலவர் கபிலர் பெருமானார் இதயம் பீரிட்டு எழுந்த கவிதையை என்னென்பது! “அண்ணலே, பாரியே, உளங்கலந்த உயிர் நட்பிற்கு ஒவ்வா வகையில் உன்னுடன் நானும் வருதலைத் தடை செய்து விட்டாயே! நினக்கு நான் ஏற்ற நட்பினன் அல்லேனெனினும், இம்மைபோல மறுமையிலும் இடையிலாக் காட்சியுடை நின்னோடு இயைந்து வாழ ஏங்கி கிற்கின்றன என் உள்ளமும் உயிரும்! ஊழ்-உயர்ந்த ஊழ்-இவ்வுள்ளத்தின்-உயிரின்-ஆரா வேட்கை தீர அருள் புரிவதாக!” என்னும் கருத்தமைய,

மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்(கு) ஒவ்வாய் நீஎற்
புலந்தனே யாகுவைபுரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லா(து)
ஒருங்குவரல் விடாஅ(து) ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு, மற்றியான்
மேயினேன் அன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொ(டு)
உடனுறை வாக்குக உயர்ந்த பாலே.’         (புறம். 236)

என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கல்லும் புல்லும் கரைந்துருகப்பாடி, மாநில மக்களை எல்லாம் கண்ணீர் வெள்ளத்தில் வீழ்த்தி, ஊணின்றி வடக்கிருந்த கபிலர் பெருமானார் உயிர் துறந்தார்.

வீரப்போர் புரிந்து மாண்டான் வேள் பாரி; வடக்கிருந்து உயிர் துறந்தார் கபிலர். கலைக்காகவே வாழ்ந்த கொடைப்பெருஞ்சான்றோனும் மறைந்தான்; அவன் நட்பிற்காகவே வாழ்ந்த அருந்தமிழ்ச் சான்றோரும் மறைந்தார். வெங்கதிரையும் தண்ணிலவையும் இழந்த வானம் போலத் தமிழகம் ஆராத் துயர்க்கடலில் ஆழ்ந்தது. ஈராயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. கபிலர்-பாரி காலம், இலக்கியக் காலமாய்-பழந்தமிழ் நூற்றாண்டாய் மாறிவிட்டது. எனினும், இன்றும்-என்றும்-இவ்விரு பெருஞ் சங்ககாலச் சான்றோரையும் இன்பத் தமிழகம் தன் இதயக் கோயிலில் வைத்துப் போற்றி வழிபடுவது திண்ணம்.

(அடுத்துக் காண்பது ஒளவையாரை)

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி:

சங்கக்காலச் சான்றோர்கள்