சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன்
சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம்!
சசிகலா நடராசன் அதிமுக பொதுச்செயலராகப் பதவி ஏற்றதும் முதல்உரையாற்றியுள்ளார். பிறர் எழுதித் தந்ததாக இருந்தாலும் கருத்து அளித்ததும் வடிவமைத்ததும் இவராகத்தான் இருக்கும். அந்த வகையில் சிறப்பான உரை வாசித்துள்ளார். தொண்டர்களின் மனநிலைக்கேற்பவும் பொதுவான நலன் கருதியும் அமைந்த உரை நல்ல உரைகளுள் ஒன்றாக இடம் பெறுகிறது எனலாம் அரசின் சார்பாக உரையாற்றுபவர்கள் பெரும்பாலும் எழுதி வைத்துள்ள உரையைத்தான் வாசிக்கின்றனர். எனவே, முதல் உரை வாசிப்பாக அமைந்ததில் குற்றம் எதுவுமில்லை. எனினும் மெல்ல மெல்ல வாசிப்பைக் கை விட்டு நேரடியாகத் தானே உரையாற்றும் பாங்கிற்கு இவர் மாறவேண்டும்.
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். (திருவள்ளுவர், திருக்குறள் 643)
என்னும் இலக்கணத்திற்கிணங்க அமையும் சொல்வன்மை பெற்றார் எனில், நானிலம் இவர் நா வயப்படும்.
இக்குறளுக்கு இருவகையாகப்பொருள் காணலாம்.
பேச்சைக்கேட்டுக்கொண்டிருப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் இப்பேச்சைக்கேட்கத் தவறியவர்கள், இப்பேச்சைக்கேட்க விரும்பும் வகையிலும் அமைதல் ஒருவகை.
பேச்சிற்குக் கட்டுப்படும் அன்பர்கள் மட்டுமன்றிப் பகைவர்களாகக் கருதுநரும் பேச்சைக்கேட்க வேண்டும் என்ற ஆவலில் அமைதல் மற்றொரு வகை.
இத்தகைய சிறந்த நாவன்மையைப் பெற வாழ்த்துகிறோம்.
சிலர், பயிற்சி எடுத்தார் என்பதுபோன்ற செய்திகளைக் குறை சொல்வதுபோல் சொல்கின்றனர். பயிற்சி எடுத்துப் பேசினார் எனில், மிகவும் பாராட்டத்தகும் முயற்சியாகும் இது. ஏதோ பேசவேண்டும் என்றில்லாமல் எப்படிப் பேசவேண்டும் என்று திட்டமிட்டு ஒத்திகை பார்த்தார் எனில், திட்டமிடும் வினைப்பாங்கு உடையவர் என்றுதானே பொருள். இவருக்கு எதிரான பரப்புரை மேற்கொள்பவர்கள் நிறையையும் குறையாகக் கூறுகிறார்கள் என்பதற்கு இத்தகைய கிண்டலும் ஒரு சான்று.
கட்சியில் ஒதுங்கியுள்ளவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை அரவணைத்துச்செல்லும் போக்கு தெரிகிறது.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 874)
என்பதற்கேற்பவும்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 530)
என்பதற்கேற்பவும் பகைமீது நட்பு பாராட்டலும் பிரிந்தவர்களைச் சேர்த்தலும், தலைமைக்கேற்ற சிறந்த பண்புகளாகும். எனவே, இவரது தலைமையில் கட்சி நல்ல வளர்ச்சியுறும் எனத் தெளியலாம்.
அதிமுகவிலும் அக்கட்சி ஆட்சிகளிலும் பொறுப்புவழங்கல், மாற்றுதல், நீக்குதல் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு இருந்துள்ளது. ஆனால், அரசின் கொள்கை முடிவுகளில் பங்களிப்பு இருந்ததா எனத் தெரியவில்லை. அவ்வாறு இருந்ததெனில், செயலலிதாவின் தவறான செயற்பாடுகளில் இவரின் பங்களிப்பும் இருந்தது என்றுதான் பொருள். அவ்வாறெனில் அத்தகைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறான செயல்பாடு எதுவும் இல்லாமலிருந்தது எனில், ஆட்சியின் நல்லனவற்றைத் தொடரவும் அல்லவனவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயலலிதாவின் தமிழ் ஈழம் தொடர்பான மாற்றம் பெற்ற கருத்துகளையும் செயல்களையும் தொடரும் வகையில், இவரது பணியமைதல் வேண்டும்.
செயலலிதா ஆட்சிகளில் எம்ஞ்சியார் புறக்கணிக்கப்பட்டதுபோல் இல்லாமல் அவருக்கும் முதன்மை அளிக்கிறார். எனவே, அவரின் நூற்றாண்டுநிறைவு தொடக்கத்தை முன்னிட்டு இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்ட எழுவரையும் காப்புவிடுப்பில் விடுவித்தல்வேண்டும். அடுத்து முழு விடுதலைக்கும் ஆவன செய்தல் வேண்டும். இதே போல், 14 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசத்தில் உள்ள இசுலாமியர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவரது வளர்ச்சியும் புகழும் நிலையானவையாக இருக்க வேண்டுமெனி்ல் தமிழ்நலச்செயற்பாடுகளில் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை இப்போதைக்கு ஏற்காதிருக்கும் நல்ல முடிவை எடுப்பின், ‘தமிழ்நாட்டு மேம்பாட்டுக்குழு’ அமைத்து அதன் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும். இதன் வழியாகக் கல்வியிலும் இறைமையிலும் பிற துறைகளிலும் தமிழ்மட்டுமே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உழவர் துயரங்களைப் போக்கி வேளாண்துறையில் முன்னணியாகத் தமிழ்நாடு விளங்கச் செய்ய வேண்டும்; தொழில் வளர்ச்சிக்கு முதன்மை அளிக்க வேண்டும்; இறைநெறிப் போர்வையில் பரப்பப்பட்டு வரும் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.
செயலலிதா வழியைப் பின்பற்றுவேன் என்று சொன்னதற்காக அவரின் எல்லா செயல்களையும் பின்பற்றவேண்டும் என்று பொருளில்லை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, ஊடகங்கள் இணையத்தளங்கள், பிற பகிர்வுத்தளங்கள் மூலமாக எதிரான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றிற்கு எதிர் கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நாட்டு நலனில் கருத்துசெலுத்துவதே நிலையான தீர்வாக அமையும்.
எனவே, வெற்றிக்கு அறிகுறியாக நல்ல தொடக்கத்தில் இறங்கியுள்ள சசிகலா இனிவரும் காலங்களிலும் சிறப்பாகப் பணியாற்றிப் புகழ்பெற வாழ்த்துகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
திருக்குறள் இருபொருள் உரை இனிமை – களப்பால் குமரன்