சட்டச் சொற்கள் விளக்கம் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 876-880
876. alternative and cumulative remedy | மாற்று – திரள் தீர்வழி மாற்று ஒட்டுமொத்தத் தீர்வழி திரள் தீர்வழி என்பது தரப்பாருக்கு நடைமுறையில் உள்ள தீர்வைவிடக் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகும். ஒரே இரண்டு தீர்வழிகளும் தவறு செய்பவருக்கு அல்லது தவறு செய்பவர்களுக்கு எதிராக அவரால் அல்லது அவர்களால் பாதிப்புற்றவருக்கு அல்லது பாதிப்புற்றவர்களுக்கு வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. தீங்கிழைத்தவர் ஒரே ஆளாக இருப்பின் தீர்வழிகளில் மிகுதியான மாறுபாடு இருக்காது. எடுத்துக்காடடாக மண முறிவு வழக்குகளில் மண முறிவு அல்லது உறவில் விலகியிருத்தல் என இரு தெரிவைக் குறிப்பது. |
877. Alternatively | மறுதலை மாற்றாக மாற்றுத்தேர்வாக முறைப்படி கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அது மெய்ப்பிக்கப்படாமல் ஆனால் உள்நோக்கமற்ற உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தார் என்னும் பொழுது மாற்றாக வழங்கும் தண்ட னைக்குரிய தீர்ப்பைக் குறிக்கும். காண்க: alternative |
878. amicus curiae | நீதிமன்ற நண்பர் நீதிமன்ற இடையீட்டாளர் வழக்கு தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கும் ஒருவர். வழக்குத் தரப்பில் இல்லாத ஒருவர், அல்லது ஒரு நிறுவனம், தகவல், வல்லமை (சிறப்புத் திறன்), நுண்ணறிவு முதலியவற்றை வழங்குவதற்கு இசைவளிக்கப்படும் முறை. ஆனால், நீதிமன்றம் அவற்றை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்காவில் நீதிமன்ற இடையீட்டாளர் என அழைக்கப்பெறுகிறார். வழக்கு தொடர்பான கருத்தினை நீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதால், நேர்சொல்லாகக் குறிக்காமல் நீதிமன்றக் கருத்தாளர் என்றோ, வழக்குக் கருத்தாளர் என்றோ அழைக்கலாம். இலத்தீன் தொடர். |
879. ante | முந்தைய முந்தை முன்னால் மேலே முன் முன்பாக முன் என்பது பொதுவான பொருள். இருப்பினும் நீதித்துறையில் இதற்கு முன்னர்த் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பு அல்லது ஆணை அல்லது குறிப்பைத் தெரிவிக்கையில் முந்தைய எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒரே பக்கத்தில் அல்லது தீர்ப்பில் அல்லது செய்தியில் அல்லது கட்டுரையில் முன்னரே குறிக்கப்பட்டவற்றைக் குறிப்பிடும் பொழுது மேலே சொன்னவாறு, மேலே தெரிவித்தவாறு, மேலே விளம்பியவாறு, மேலே அறிவித்தவாறு என்பனபோன்று மேலே என்னும் பொருளில் வரும். ante-bellum – போருக்கு முந்தைய ante-room-முகப்பு அறை, (முதன்மை அறைக்குச் செல்வதற்குரிய) இடைவழி யறை ante natal-பேறுகாலத்திற்கு முந்தைய ante date cheque- (வரும் நாளைக் குறிப்பிடும்) முன் நாளிட்ட காசோலை ante-adoption agreement- முன் மகவேற்பு உடன்படிக்கை ante-debt – முன் கடன் ante mortem – மரணத்தின் முன் ante-mortem record – இறப்புக்கு முந்தைய குறிப்பேடு/பதிவுரு/ஆவணம் ante chamber- இடைக்கூடம் ante meridian – முற்பகல் என இடத்திற்கேற்பப் பொருள்படும். நூல்களிலும் அவற்றின் அடிப்படையிலும் வழக்கத்திலும் முந்திய என்று குறிக்கப்பெறுகிறது. முந்திய என்பது முந்திச் செல்வதைக் குறிக்கிறது. முந்தியக் காலம் என்பது முன்னதான காலம் எனப் பொருள் படுவதால் முன் என்னும் பொருளைத் தெரிவிக்கும் அடிப்படையில் முந்திய என்று சொல்லையும் குறிக்கிறோம். எனினும் முந்தை, முந்தைய என்பனவே சரியாக இருக்கும். நம் முன் வாழ்ந்தவர்களை ‘முந்திசினோர்’ என்கிறது பதிற்றுப்பத்து. இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே – பதிற்றுப்பத்து(69.17) அஃதாவது (விளங்கும் கதிர்களோடு கூடிய ஆணைச்சக்கரத்தைச் செலுத்தியவர்கள்) நின் முன்னோர் என்பதை முந்திசினோர் எனக் குறிக்கிறது. முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் (பரிபாடல் 13.17) என்பதுபோல் சங்க இலக்கியங்களில் பத்து இடங்களில் முந்து என்பது முன்னர் என்னும் பொருளில் வந்துள்ளது. முந்துற, முந்துறல், முந்துறுத்து என்பன போன்று 19 இடங்களில் முந்து என்னும் சொல் வந்துள்ளது. முந்தை யாமம் சென்ற பின்றை(மதுரைக்காஞ்சி, 620) என்பது போன்று சங்க இலக்கியங்களில் முந்தை என்பது ஐந்து இடங்களில் வந்துள்ளது. “முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்”(கலித்தொகை, 84.29) என்பது போன்றும் வந்துள்ளது. முன்புறம் என்னும் பொருளில் முன்னால் எனக் குறிப்பதைத் தவிர்க்க வேண்டும். முன்னதான என்னும் பொருளிலான முன்னால் அல்லது முன் நாள் என்பதே இச் சொல்லிற்கு உரிய பொருளாகும். |
880. animus contrahendi | ஒப்பந்த நோக்கம் பொதுவாக ஒப்பந்த முடிவு நோக்கத்தைக் குறித்தாலும நடைமுறையில் ஒப்பந்தம் மேற்கொள்ள விழைவதைக் குறிக்கிறது. இலத்தீன் தொடர். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply