திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்
–

திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய்
தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (திருக்குறள், ௨௱௬௰௪ – 264)
என்கிறார் திருவள்ளுவர்.
உவந்தாரை ஆக்கல் என்பதற்கு.
தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதல்,
தமக்கு அன்புடைய நண்பர்களை வாழ வைத்து உயர்த்துதல்,
நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதல்,
நட்பினால் மகிழும் நண்பர்கு உதவுதல்
எனவாறு பொருள் தருகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆக நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்பதே திருவள்ளுவர் அருள் வாக்கு. பாகுபாடு காட்டக் கூடாத தவ வலிமை உடையவர்களே நண்பரா இல்லையா எனப் பார்த்து நண்பருக்கு உதவ வேண்டும் என்றால் பிறர் இவ்வாறு செய்தல் இன்றியமையாதது அலலவா?
அவ்வாறாயின் திருக்குறள் வழியில் நண்பர்களுக்கு வாய்ப்பளிததல் சிறப்பல்லவா?
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். (திருக்குறள், ௮௱௰ – 810)
என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.
இக்குறள் மூலம், பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்புடன் இருக்க வலியுறுத்துகிறார். அஃதாவது தான் உயர்ந்த நிலைக்குச் செல்லும் பொழுது பழைய நண்பர்களை விலக்காமல் சேர்த்து அணைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. (திருக்குறள், ௭௱௮௰௧ – 781)
என்றும் திருவள்ளுவர் வினவி விளக்குகிறார்.
நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருஞ் செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை என்கிறார். இவ்வாறு கூறி இத்தகைய காவலாய்த் திகழும் சிறப்பு மிக்க நட்பைப் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
பணியை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர்,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருக்குறள், ௫௱௰௭ – 517)
எனக் கட்டளையிடுகிறார்.
ஒரு செயலை, ஒருவன் இன்ன காரணத்தால் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அச் செயலை அவனிடமே ஒப்படைத்துச் செய்யச் சொல்ல வேண்டும் என இதன் வழிக் கூறுகிறார்.
அவ்வாறு ஆராயும் பொழுது தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து செய்தால் முடியாதது என ஒன்றுமில்லை என்கிறார். அதற்கான குறள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருக்குறள், ௪௱௬௰௨ – 462)
என்பதாகும்.
நமக்கு அறிமுகமில்லாதவரிடம் எப்படிச் செயலை ஒப்படைக்க முடியும்? நமக்குத் தெரிந்த நண்பர்கள் என்றால் எதையும் எளிதில் கலந்து பேசி முடிக்கலாம் அல்லவா?
எனவே, திரைத்துறையில் இருந்து முதல்வர் ச.சோ.விசய் தனக்கு நட்பாய் உள்ளதனால் நன்கு அறியப்பட்டவரிடம் ஒரு செயலை ஒப்படைப்பதுதானே முறையாகும். ஆகவே, திருக்குறட் பாதையில் நடைபோடும் முதல்வர் ச.சோ.விசய் பாராட்டப்பட வேண்டும் அல்லவா? அவ்வாறில்லாமல் பழிப்பானேன்?
திரைப்பட மாணாக்கர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவில் பெண் உறுப்பினர் யாருமில்லை என்றும் ஓர் அங்கலாய்ப்பு. இவ்வாறு புலம்புவோரின் ஆட்சியிலும் இருந்திருக்கின்றது இதே நிலை. சட்டமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்களை இடம் பெறச்செய்தவர்; அமைச்சரவையில் பெண்கள் நால்வருக்கு வாய்ப்பளிததவர்; பெண்களைப் புறக்கணிப்பார் என்று எப்படி எண்ண முடியும்?
முதல்வர் நாளும் திரைப்படக்காரர்களையே சந்திக்கிறார் என்றும் நாளும் அழுகுரல் எழுப்பப்படுகிறது. ஒருவர் உயர் பொறுப்பிற்கு வந்தார் என்றால் அதுவரை அவர் பணியாற்றிய இடத்தில் உடன் இருந்தவர்கள் மகிழ்ந்து வாழ்த்துவது இயற்கைதானே! அவ்வாறு உயர்நிலைக்கு வந்தவர் மருத்துவராயின், மருத்துவர் முதலான மருத்துவத்துறையினர், வழக்குரைஞராயின், வழக்குரைஞர், நீதிபதி முதலிய சட்டத்துறையினர், அதிகாரியாயின், அதிகாரிகள், பணியாளர்கள் எனச் சந்திப்பது நடைமுறைதானே! அவ்வாறு சந்தித்து மகிழ்ச்சி தெரிவிக்க வருபவர்களைச் சந்திக்க மறுத்தால் அது பண்பாகுமா? முதல்வர் ச. சோ.விசய் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர். அவ்வாறாயின் நடிகர், நடிகைகள், திரை நுட்பக் கலைஞர்கள்,பட உருவாக்குநர், பட வெளியீட்டாளர், பிற திரைத் துறையினர் எனப் பணித்தோழர்கள்(colleagues) வருவது இயற்கைதானே! ஏதேனும் பழி சொல்ல வேண்டும் என்பதற்காகக் குற்றமாகக் கூறினால் என்னென்பது? இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தாலின், துணைமுதல்வரான பொழுது இப்படித்தானே சாரைசாரையாகத் திரைத்துறையினர் அவரை வந்து பார்த்தனர். நடைமுறை அறிவுமின்றி, தான் வந்த பாதையையும் மறந்து குறை கூறுவதை இனியேனும் உரியவர்கள் நிறுத்தவேண்டும்.
குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தட்டியும் கேளுங்கள். நல்லன செய்தால் தட்டிக் கொடுங்கள். மனமில்லையேல் அமைதி காத்திடுங்கள். அல்லன களையவும் நல்லன தொடரவும் வழிகாட்டுங்கள்!
மக்கள் நட்சத்திரமாக இருந்து மக்கள் முதல்வராக உயர்ந்துள்ள
வினைத்திறன்மிகு ச.சோ.விசய்க்குப்
பிறந்த நாள் பெருமங்கல வாழ்த்துகள்!
நிலைத்த ஆட்சி நல்கி நிலைபுகழ் பெறுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இதழுரை ஆனி 08, 2057 / 22.06.2026


Leave a Reply