சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை:

நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி தாலின் பேசியதற்கும் அம்மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதற்கும் கண்டனம் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அறியாப் பிள்ளைகள் தெரியாமல் பேசுகின்றனர் என்றும் கட்சிக் கண்ணோட்டத்தில் பழி தூற்றுகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். நீதிபதிகள் சிலரும் இந்த எண்ணத்தை எதிரொலிக்கலாம் என்றும் ஐயம் வந்தது.  அதை உண்மை என்று மெய்ப்பிக்கும்  வண்ணம்  மாண்பமை நீதிபதி  செயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.  

திராவிடக் கருத்தியலுக்கு எதிராகத் “திராவிட ஒழிப்பு மாநாட்டை” நடத்த திருவேற்காட்டைச் சேர்ந்த மகேசு கார்த்திகேயன் என்பவர்  இசைவு கேட்ட முறையீட்டில், மாண்பமை நீதிபதி  வழக்கறவு –  தள்ளுபடி – செய்துள்ளார். இம்மாநாட்டை நடத்துவதாகக் கூறியதன் நோக்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டின் எதிர்ப்பே என்பதால் அம்மாநாடு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.  எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தரும ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையைப் புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து உதிர்த்துள்ளார்.

மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசக்கூடாது என்றால் நாத்திகம் என்னும் இறை மறுப்பியத்தையும் ஒரு மதமாகக் கூறுவோர் உள்ளனர். அப்படியாயின் நாத்திகத்திற்கு எதிரான கருத்தை மத எதிர்ப்பாகக் கொள்ள இயலுமா? கடவுட் கொள்கையற்ற புத்த மதம் போன்ற சமயங்கள் உள்ளனவே. அப்படியானால் அவர்கள் நம்பிக்கைக்கு எதிராகக் கடவுட் கொள்கையைத் திணிக்கிறார்கள் எனக் கடவுள் நம்பிக்கையாளரை நீதி மன்றத்தில் எதிர்க்க இயலுமா?

சாக்ரடீசு, பிளேட்டோ, அரிசுடாட்டில் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் ஓர் இறைக் கொள்கையினர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரும் அவருக்கு முப்பும் பின்பும் இருந்த தமிழக ஆன்றோர்களும் அவ்வகையினரே. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது திருமூலர் நம்பிக்கை. இந்நம்பிக்கையுடையோர் அவருக்கு முன்பும் இருந்தனர். இப்போதும இருக்கின்றனர். தி.மு.க.வின் கொள்கையாக இதையே பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.  அப்படியானால் பல்லிறைக் கொள்கையினரை அவர்களுக்கு எதிரானவர்களாகக் கூறலாமா?

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.(திருவாசகம்)

எனத் திருநாவுக்கரசர் கடவுளுக்குக் குறிப்பிட்ட பெயரோ உருவமோ இல்லை என்பதை உணர்த்துகிறார். அதே நேரம் அந்த உண்மையை அறிந்தாலும் வெவ்வேறு பெயராலும் உருவத்தாலும் கடவுளை வணங்குவது மரபு என்பதையும் கூறுகிறார். அவ்வாறில்லாமல் உருவமற்ற கடவுளை அருவமாகக் காண வேண்டும் என்ற நம்பிக்கை யுடையார் உள்ளனர். அருவ வழிபாட்டினர் உருவ வழிபாடு தங்களுக்கு எதிரானது என்று வழக்கு தொடுக்க இயலுமா? அதே போல் ஒளி வழிபாட்டினரும் பிற வழிபாடு குறித்த உரைகள் தங்கள் நம்பிக்கைக்கு எதிரானது எனக் கூறி வழக்காட இயலுமா?

உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராசசுதான்,  முதலிய இந்திய மாநிலங்களிலும் இலங்கையிலும் இராவணன் கோயில்கள் இருக்கின்றன. இராவணனை வணங்குவோருக்கு எதிராக ஆண்டுதோறும் இராவண லீலா என நடத்தி இராவணன் உருவ பொம்மையை அழிப்பதும் தலைமையமைச்சர் முதலான அமைச்சர் பெருமக்கள் பஙகேற்பதும் பெரும் அநீதி யல்லவா? 

இராவணன் மேலது நீறு” என்று திருஞான சம்பந்தர் போற்றுகிறாரே! ‘இராவண காவியம்’ என்றே புலவர் குழந்தை காப்பியம் எழுதிச் சிறப்பித்துள்ளாரே.

“இராவ ணன்தன்கீர்த்திசொல்லி

அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!”

எனப் பாவேந்தர் பாரதிதாசன் போற்றுகிறாரே.

இத்தகைய சிறப்பு மிக்கு தமிழ் வேந்தர் இராவணனுக்கு எதிரான அவதூறு நிகழ்ச்சிக்கு எப்படி இசைவு தருகிறார்கள்?

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதற்கு ஆதரவாகவும் பேசலாம், எதிர் நம்பிக்கைக்கு எதிராகவும் பேசலாம். ஆனால், பேச்சு அவையல் கிளவி யாக – ஓர் அவையில் சொல்லக்கூடாததாகப் பொதுவெளியில் பலர் முன்னிலையில் சொல்லத்தகாததாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்கள் தாங்கள் காலங்காலமாகத் தங்கள் தாய்மொழியான தமிழில்தான் கடவுளை வணங்கி வந்தனர். அதுபோல் இப்போதும் வணங்க வேண்டும் என விரும்புகின்றனர். அரசும் அதற்கு ஆதரவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ் வழிபாட்டிற்கு எதிரானவர்களுக்குத்தானே நீதிமன்றங்கள் ஆதரவாக உள்ளன.

இந்து மதம் என்பது நம் மீது திணிக்கப்பட்ட பெயர். இதனால் இந்து மதம் எனப்படும் சனாதனமும் நம் மீது திணிக்கப்பட்டதாக ஆகிறது. மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்துப் பிராமணர்களை மட்டும் உயர்வாகக் கூறும் இதை நாம் ஏற்கவில்லை.  பிராமணர்களில்கூடப் பலர் இதை ஏற்கவில்லை. அவ்வாறிருக்க மக்களைப் பாழ்படுத்தும் சனாசனாதனத் தீமையை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?  அதனைத் தெரிவிப்பது எங்ஙனம் தவறாகும்? சனாதனத்தின் தீமைகளைப் புரிவதற்காக ஒப்புமையாகக் கொசு போன்றவற்றைச் சொன்னது எப்படிக் குற்றமாகும்? உண்மையில் இந்துமதத்தில் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதாக நீதி மன்றம் அவ்வாறு சொன்ன உதயநிதி தாலினைப்பாராட்டி இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் சொன்ன அவரையும் அப்பொழுது உடன் இருந்த  அறநிலையத்துறை யமைச்சர் சேகர் பாபுவையும் காவல் துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் எனக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்?

பிறப்பால் மக்களைப் பிளவு படுத்துகிற, செய்யும் தொழிலால் மக்களை இழிவுபடுத்துகிற, ஒழுக்கக் கேடானவற்றையும் உயர்வாகச் சொல்கிற சனாதனத்திற்கு எதிராகக் கூறுகிறவர்கள் யாராயினும் நீதிமன்றங்கள் அவர்களைப் போற்ற வேண்டும். மக்களின் உள்ளங்களை எதிரொலிக்கும் உரையாற்றியமைக்கும் உடனிருந்தமைக்கும் நடவடிக்கை எடுத்துத் தவறு செய்யாமல் காவல்துறை தன் கடமையை ஆற்றியுள்ளமைக்கு நீதிமன்றம் பாராட்டு வழங்கட்டும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள் 423)

என்னும் திருவள்ளுவர் கூறும் அறவழி நின்று சமய வாதிகள் மெய்ப்பொருள் காணட்டும்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (திருக்குறள் – 355)

என்னும் திருவள்ளுவர் வழி நின்று மக்கள் உண்மையை ஏற்கட்டும்.

சனாதனக் கொள்கை தொடர்பான ஏற்புரைகளுக்கும் மறுப்புரைகளுக்கும் யாரும் முட்டுக்கட்டை போடாமல் பகுத்தறிவிற்கும் இறைநெறிக்கும் வழிவிடட்டும்.

சனாதனத்தை எதிர்ப்போரை

எதிர்ப்பவர்களுக்குத் தடை விதிக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை – 21.10.2054 / 07.11.2023