maraimalai Ilakkuvanar01

சமயச் சார்பற்ற மொழியும்

புனிதமான மொழியும்!

  புராணங்களின் அடிப்படையை மட்டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழிகளுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடையதாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழியாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான மாற்று அணுகுமுறையை அடைவது கடினமாகி விட்டது என்னும் கருத்தினைக் காணுங்கால் இதனை யார் உரைத்திருப்பர் என்னும் ஐயம் எழலாம்.

 ஒப்பியன் மொழி நூல் வகுத்த தேவநேயப் பாவாணரோ தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழின் தொன்மையை உலகுக்கு உரைத்த இலக்குவனாரோ திராவிட இனத்தின் தனிச் சிறப்பை ஆய்ந்து அறிவித்த கா.அப்பாதுரையோ என நீங்கள் ஐயுறலாம். அவர்கள் தமது ஆய்வுகளால் திராவிட மொழிகளின் தனித் தன்மையையும் தொன்மையையும் நன்கு விளக்கியுள்ளனர்.

  முதன்முதலாகப் பா.ச.க. நடுவண் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இந்துத்துவக் குழுவினர் சமற்கிருத ஆண்டு கொண்டாடியும் பள்ளிகளில் சமற்கிருதப் படிப்பைக் கட்டாயமாகப் புகுத்தியும் மகிழ்வுற்ற சூழலில் கெயில் ஆம்வெத்து என்னும் மேலை நாட்டார்தான் இக் கருத்தைத் தம் மனக்குறையாகவே குமுறலுடன் கட்டுரையாகத் தீட்டியுள்ளார். “மொழி-புனிதமானதும் சமயச்சார்பற்றதும்” என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை இந்து ஆங்கில நாளேடு 19.9.1999 ஆம்  நாளிட்ட  இதழில் வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலில் இக் கட்டுரை இன்னும் பொருள் பொதிந்ததாகவும் முற்போக்கு அறிஞர்களுக்கு அவர்கள் கடமையை உணர்த்துவதாகவும் திகழ்கிறதல்லவா?

 கெயில் ஆம்வெத்து அம்மையார் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அமெரிக்காவில் மின்னாபொலிசு நகரில் பிறந்து (1941) கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் முனைவர் பட்டம் (1973) பெற்றவர். குடியிருப்பாதிக்கச் சமுதாயத்தில் பண்பாட்டுப் புரட்சி; மேற்கிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் (Cultural Revolt in a Colonial Society: The Non-Brahman Movement in Western India, 1873-1930.)  என்னும் தலைப்பில் சோதிராவ் பூலேயின் இயக்கம் பற்றியதே இந்த ஆய்வேடு.

  அமெரிக்காவின் இனவாதக் கோட் பாட்டை வெறுத்து இந்தியாவுக்கு வந்து இந்தியக் குடியுரிமை பெற்றுப் பெண்ணியம்,ஒடுக்கப்பட்டோரியல் என்னும் துறைகளில் பல ஆய்வுநூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். 1979 இல் “சிறையை உடைத்தெறிவோம்; போராட்டக் களத்தில் இந்திய மகளிர்” என்னும் நூல் தொடங்கி 2010-இல் “சாதியைப் பற்றிய புரிந்துணர்வு: புத்தரி லிருந்து அம்பேத்கர் வரையும் அதற்குப் பின்னரும்” என்னும் நூல் வரை பன்னிரண்டு நூல்கள் இயற்றியுள்ளார். சாதிய அணுகுமுறையை இனவெறிக்கு இணையான கொடுமையாகக் கருதும் இந்தச் சமூக ஆர்வலர் பெண்ணிய, தலித்தியப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட போராளி எனலாம். சிம்லாவில் இயங்கி வரும் இந்திய உயராய்வு மையத்தில் ஆய்வாளராக விளங்கும் இந்த அறிஞர் கருத்தரங்குகள், விவாதமேடைகளில் மராட்டிய மாநிலத்திலும் டில்லி நகரத்திலும் கலந்துகொண்டும் ஆய்வுநூல்கள் வழங்கியும் தொண்டாற்றி வருகிறார்.

  மொழி மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள உதவும் வாழ்வியற் கூறு; உணர்வு, பூசல், எதிர்பார்ப்பு ஆகியவற்றின் முதன்மை ஊற்று எனக் கூறும் கெயில் இந்தியா, பன்னூற்றுக்கணக் கான மொழிகள் புழங்கும் ஒரு பன்முகப் பண்பாட்டுக் களம். இஃது ஒரு வரமா சாபமா எனத் தெரியவில்லை என்கிறார். இந்தப் பன்னூற்றுக்கணக்கான மொழிகளுள் சமற்கிருதம் தன்னைத் தேவ மொழியாக, புனித மொழியாக அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கு மாறாகத் தமிழ்மொழி சமயச்சார்பற்ற, தொன்மை வாய்ந்த இலக்கியம் உடைய மொழியாக விளங்குகிறது என்கிறார் கெயில்.

  புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சார்சு கார்ட்டு கூறுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

 சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அமைந்துள்ள புறநானூறு தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கியங்களுள் ஒன்று. ஆரியச்செல்வாக்கு தென்னகத்தில் ஊடுருவுவதற்கு முன்னரேயே படைக்கப்பட்ட சிறப்பை யுடையது. ஆரியவருகைக்கு முந்தைய தென்னிந்தியாவையும் பெரும்பான்மையும் ஆரிய வருகைக்கு முற்பட்ட இந்தியாவையும் அறிந்துகொள்ள உதவும் சான்றாவணம் புறநானூறு எனலாம். தெற்கு ஆசியாவின் வரலாறு, பண்பாடு, சமயம், மொழியியல் ஆகியவற்றை அறியப் பயன்படும் இன்றியமையா நூல் புற நானூறு. எனத் தமது ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் சார்சு கார்ட்டு தெரிவிக்கிறார். இந் நூலும் கொலம்பியா பல்கலைக்கழக வெளியீடாக 1999-ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. (பின்னர் 2002-ஆம் ஆண்டில் பெங்குவின் வெளியீடாக வந்தது.)

  செவ்வியற்கால இந்தியாவின் நூல்களுள் புறநானூறு போன்ற அரிதான சில நூல்களே வாழ்க்கையைத் தத்துவமுற்சாய்வு கொண்டு நோக்காத சிறப்பையுடையன எனலாம். வாழ்க்கையை எதிர் கொள்ளும்போது தத்துவக் கேடயத்தை ஏந்திக் கொள்ளாமல் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பாங்கு புறநானூற்றுக்கே உரிய ஒன்று. கருமா கோட்பாட்டை முன் மொழியும் எத்தகைய குறிப்பையும் புறநானூற்றில் காண இயலாது. இன்னொரு உலகத்தைப் பற்றிய சிந்தனையும் அந் நூலில் எங்கும் முன்மொழியப்படவில்லை என சார்சு குறிப்பிடுவது நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

  புறநானூறு ஆங்கில மொழியாக்கப் பணி நிறைவுற்றவுடன் (இந்நூல் வெளி வருதற்கு முன்னரே) அறிஞர் சார்சு அவர்களுக்குப் பாராட்டு விழாவை வளைகுடாத் தமிழ்ச்சங்கம் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பாப்லோ நகரில் நடத்தியது. பொறியாளர்கள் குமார் குமரப்பன், மணி மணிவண்ணன் ஆகியோர் முன்னிருந்து நடத்திய விழாவில் சிறப்புரை யாற்றும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கிய சார்சு கார்ட்டு புறநானூற்றில் தம்மைப் பெரிதும் கவர்ந்த பண்பு அதன் சமயச்சார்பின்மையே என்றார்.

  உலகத்தில் இத்துணைத் தொன்மை வாய்ந்த சமயச்சார்பற்ற நூல் வேறெம் மொழியிலும் இல்லை எனக் கூறிய சார்சு பதினெட்டு மொழிகளில் புலமைமிக்கவர் என்பதனை நோக்குகையில் அவர் கருத்தின் ஆழம் நமக்குத் தெரியவரும்.  செவ்வியல் மொழிகளாகிய சமற்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய நான்கினையும் புலமை நலம் தோயக் கற்றறிந்த சார்சு, செவ்வியல் இலக்கியங்களுள் வாழ்க்கைக்குக் கற்பனை மிக்க சமயநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் நேரடியாக அதன் அறைகூவல்களை எதிர்கொள்ளும் மனப் போக்கு புறநானூற்றில் மட்டுமே காணப்படுகிறது எனக் கூறும்போது அந் நூலை மட்டுமின்றித் தமிழ்மொழியையும் சமயச்சார்பற்ற நோக்கின் வழிகாட்டியாகப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

  இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் பெருமையைப் போற்றுவதில் தயக்கம் காட்டாத முற்போக்கு அறிஞர்கள் புறநானூற்றைப் புனைகதையாக ஒதுக்கித் தள்ளும் போக்கிலிருந்து மாறி னார்களா? அமெரிக்காவிலிருக்கும் சார்சு கார்ட்டுக்குத் தெரிவது இந்தியாவிலிருக்கும் ரொமிலா தாப்பருக்கு ஏன் தெரியவில்லை?

  அதே 1999 ஆம் ஆண்டில் பெங்குவின் வெளியீடாகவந்த தமது ‘இந்திய வரலாறு’ எனும் நூலில் ரொமிலா தாப்பர் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை எடுத்துரைக்காத போக்கினைக் கெயில் வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். சிந்துவெளி நாகரிகம் திராவிடநாகரிகம் என அவர் தெரிவிக் காதது பெருங்குறை என்கிறார் கெயில்.

  இந்திய வரலாற்றின் வரலாற்றுக்கு முந்தைய முன்னோர்களின் நாகரிகமாகச் சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிடும் தாப்பர் அதன் திராவிடச் சார்பையோ அல்லது ஆரியமல்லாக் கூறுகளையோ சற்றேனும் கூறவில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துவிசையாகத் திகழ்ந்தது ஆரியரின் வருகையும் அவர்கள் கொணர்ந்த பண்பாடுமே; அதனிலிருந்து பிரிந்து பலதிசைகளில் சென்ற பல இயக்கங்களும் இந்திய வரலாற்றில் தாக்கம் செலுத்தின என்கிறார் தாப்பர்.

  தாப்பர் போன்ற அறிஞர்களின் இத்தகைய போக்கு மாறவேண்டும் என்பதே கெயில் வலியுறுத்த விரும்பும் கருத்து. 1999 ஆம் ஆண்டில் இக்கட்டுரை வெளி வந்த பின்னர் பதினாறாண்டுகள் கழிந்துவிட்டன. பல்வேறு கருத்துப் பூசல்களிலும் வாக்கு வாதங்களிலும் தாப்பர் பல்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள சூழலில் கெயில் 1999 இல் கூறியுள்ள கருத்து பொருந்துமா என்னும் ஐயம் எழலாம். இந்தியாவில் வைதிக, அவைதிகக் கோட்பாடுகள் மலர்ச்சி பெற்ற சூழலையும் பன்முகப் பண்பாட்டுச் சூழலில் இந்தியப் பண்பாட்டுக்கு ஒற்றைத் தனிமுகம் காட்டுவது பொருந்தாது என்பதனையும் தாப்பர் பல நூல்களில் வலியுறுத்தியுள்ளார். எனினும் ஆரிய/திராவிட எதிர்நிலைகளை ஆரியத்திற்கு முந்தைய திராவிடத்தின் தனிச்சிறப்பை அவர் எங்கேயாயினும் எடுத்துரைத்துள்ளாரா?

  இன்று இந்தியாவெங்கும் கல்வி பயிலும் மாணவர்கள் இந்தியப் பண்பாட்டுக்குச் சமற்கிருதம் மூல ஊற்றாகவும் ஆரியர்களையே நமது முன்னோர்களாகவும் பாடநூல்களில் படிப்பதும் கருதுவதும் தமக்கு எத்தகைய வியப்பையும் அளிக்க வில்லை எனக் கூறும் கெயில் திராவிட மொழிகளின் தொன்மையையும் முதன் மையையும் ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் காட்டும் தயக்கமே இதற்குக் காரணம் என்கிறார்.

  தொடக்கத்தில் ஐரோப்பியர்களை மிலேச்சர்கள் என ஒதுக்கித் தள்ளிய திலகர் உள்ளிட்ட வைதிகச் சார்பினர் ஆரியர்களின் முதன்மையை வலியுறுத்தியதுடன் வெள்ளை நிற ஐரோப்பியர்களுடன் ஆரியர்களையும் இணைத்துக் கொண்டனர். கறுப்பு நிறச் சூத்திரர்கள் இழித்தொதுக்கப்பட்டனர்.

  சமற்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தலைமைப் பீடத்தில் அமர்த்தப்பட்டது. திராவிட மொழிக் கூறுகளே சமற்கிருதத் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்கியதனை அறிந்துகொள்ளப் பெரிய மொழியறிவு எதுவும் தேவையில்லை என்கிறார் கெயில். நா வளை ஒலிகளை அடிப்படை யாகக் கொண்டு நோக்கினாலே திராவிட மொழிகள் இந்திய மொழிகளில் பெற்றுள்ள பெரும்பங்கு புலப்படும் என்கிறார். அவர் கூறும் ஓர் எடுத்துக்காட்டை இங்குக் காண்போம். ண, ந என்னும் வேறுபட்ட ஒலிகளைத் தம்மைப் போன்ற அமெரிக்கராலோ வேறு ஐரோப்பியராலோ எளிதில் ஒலிக்க இயலாது என்கிறார். அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் ராமா யணா, பாநி என்னும் இரு சொற்களில் இடம்பெற்றுள்ள இருவேறு ஒலிகள் (ண, ந) ஆகும். இத்தகைய மரபுகள் திராவிட மொழிகளின் தனித்தன்மைக்கு எடுத்துக் காட்டு என்கிறார்.

 ஒரு வாக்கியத்தின் இறுதியில் வினைச் சொல் வருவது இந்தியமொழிகளின் பொதுத்தன்மையாகும்.

  நான் பள்ளிக்குச் செல்கிறேன் என்பதனை நான் செல்கிறேன் பள்ளிக்கு என யாரும் கூறுவதில்லை. இது தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமல்ல பல வட இந்தியமொழிகளுக்கும் பொருந்தும் எனவும் திராவிட மொழிகள் என்பதால் தென்னிந்திய மொழிகள் எனக் கருதிவிட முடியாது எனவும் அவர் கூறுவது கால்டுவெல் ஏற்கெனவே கூறிய கருத்தே. (பிராகுயி, குமர்பாக் பஃகாரியா, குறுக்சு, நேபாளி குறுக், சௌரியா பஃகாரியா மொழி ஆகியன வட திராவிட மொழிகள் ஆகும்.) எனினும் கால்டுவெல்லுக்கு ஒருபடி மேலே சென்று கெயில் கேட்கும் வினா நம் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. சொற்றொடர் அமைப்பிலும் இலக்கண அமைப்பைக் கொண்டு நோக்கினாலும் திராவிடமொழிகளைப் போன்றே விளங்கும் இந்தியையும் மராத்தியையும் ஏன் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கவேண்டும் என்பதே கெயில் கேட்கும் வினா.

  மெசபொட்டோமிய மக்கள் சிந்து வெளி நாகரிகத்தைக் குறிக்க மெலூகா என்னும் சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கும் கெயில் இச் சொல்லே பின்னர் மிலேச்சர் என்னும் சொல் உருவாக அடிப்படையாக விளங்கியிருக்கவேண்டும் என்கிறார். ஆரியர்கள், சிந்துவெளிவாழ் மக்களைக் குறிக்கப் பயன்படுத்திய இந்தச் சொல், பின்னர், தூய்மை குறைந்தோரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. மெசபட்டோமியரின் இச் சொல்லாட்சியைச் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க்குரியது என்பதனை வலியுறுத்தும் சான்றுகளுள் ஒன்றாகக் கொள்ளலாம்.

  இவ்வாறு பல சிந்தனைகளைத் தூண்டும் கருத்துகளைத் தமது கட்டுரையில் வழங்கிய கெயில், நடுநிலையுணர்வும் முற்போக்குப் பார்வையும் கொண்ட அறிஞர்கள், திராவிடமொழிகளின் சிறப் பையும் ஆரியம் திராவிட மொழிகளுக்குக் கடன்பட்டிருப்பதையும் விளக்கும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார்.

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால் மெய்போலும்மே

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே.

–   பேரா.முனைவர்  மறைமலை இலக்குவனார்

http://viduthalai.in/e-paper/98063.html

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png