சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை
டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.),
முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு.
நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை.
6, (17), முதல் நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி: 044-24417705
அணிந்துரை
அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று அவர்களைப் பாராட்டுகின்றேன். இந்த நூலில் சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப்பற்றிய தெளிவான விளக்கங்களைத் தெரிந்து கொள்கிறோம். சித்தர் நெறிக்கு அடிப்படையான ஓகப்பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதற்கு மேலாகப் பாண்டியன் தம்பதியர், சித்தர் உலகில் பெற்ற சொந்தப்பட்டறிவுகள், நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவர்கள் ஞானம் பெற்றுள்ள சித்தர் தத்துவக் கல்வியும் பயிற்சி முறை ஞானமும் இந்த நூலின் மூலம் இயல்பாகவே வெளிப்படுவது கண்டு பெருங்களிப்படைகிறோம். இந்த ஆசிரியர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சித்தர் துறையில் ஆராய்ச்சி செய்துவருகின்றனர் என்பது ஒரு பக்கம். அதேநேரத்தில் தாங்கள் கண்ட உண்மைகளைப் பட்டறிவாக ஆக்கிக்கொண்டு, ஆன்மிக உயர்வு பெற்று வருவது என்பதே மிக்க போற்றத்தக்கது.
தமிழ்நாடு சித்தர்களின் பூமி. பதினெட்டுச் சித்தர்களைத் தவிர, தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவரும் பல சித்தர்களைப்பற்றித் தெரிந்து கொண்டுவருகிறோம். அவர்கள் வாழ்ந்த புனித இடங்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. திரு.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகிக்கும் உலகச் சித்தர் ஆராய்ச்சி மையம் இதற்காகச், சிறப்பான தொண்டாற்றி வருகிறது. தமிழனுடைய உணர்வில் சித்தர்கள் எப்போதும் இருப்பர். காரணம் சித்தர்கள் நிறைவு பெற்றவர்கள். கடவுளைக் கண்டவர்கள். தமிழன் கடவுளைக் காண விரும்பும் போதெல்லாம் சித்தர்களின் நெறிமுறைகளை மேற்கொள்ள விரும்புவதில் வியப்பு ஒன்றும் இல்லை. வெறும் ஓகஇருக்கை(யோகாசன)ப் பயிற்சி என்பது ஒன்று. சித்தர் நெறியோடு இணைந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கடவுளை நெருங்கும் உபாயம் வெளிப்படும்.
திரு. இரா.கற்பூரசுந்தரபாண்டியன் பல ஆண்டுகளாக என்னுடைய நெருங்கிய நண்பர் ஆவார். ஆட்சிப்பணியில் இணைந்து பணியாற்றி இருக்கின்றோம். முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஞ்சியார், முதலமைச்சர் புரட்சித்தலைவி செ. செயலலிதா ஆகியோருடைய நன்மதிப்பைப் பெற்றவர். திறமை மிக்க பணியாளர். அதேநேரத்தில் எளிமைபோன்ற பல உயர்ந்த பண்புகளை தன்னுள் கொண்ட காரணத்தால் இயல்பாகவே நன்னடத்தை உடையவர். எனவே எல்லாராலும் போற்றப்படுபவர். சித்தர் கல்வி பெற்றிருந்த காரணத்தால் பண்பு நிறைந்த பணிகளையே செய்துவரும் தன்மையுடையவராக இருக்கின்றார்.
திருமதி. சாந்தா பாண்டியன் சிறந்த கல்வியாளர். மேனிலைப் பள்ளிகளைச் சிறப்பாக நடத்திக் கல்வித்துறையில் நல்ல பட்டறிவு பெற்றவர். ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையாளர். பல பட்டறிவுகளைப் பெற்றவர்.
இந்த இணையரின் கடந்த இருபது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பயனாகத் தங்களுக்குத் தெரிந்த மற்றும் உணர்ந்துகொண்ட சித்தர்கள் கூறும் பயிற்சிமுறைகளையும் தங்கள் பட்டறிவுகளையும் தெளிவாக இந்த நூலில் பகிர்ந்து கொண்டது பாராட்டத்தக்கது. சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்து வகைகளைப் பற்றிய விவரங்களும், தமிழகத்தில் சித்தர்கள் உயிர்ச்சமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்நூலில் இடம் பெருவது வரவேற்கத்தக்கது. மேலும் சித்தர்களைப் பற்றிய ஆழமான செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
படிப்பதற்கு மட்டுமின்றிச், சிந்தித்து நடைமுறைப் படுத்துவதற்கும், இந்த நூல் மிக்க பயனுள்ளதாக இருக்கும். ஏராளமான அன்பர்கள் படித்துச் சித்தர்கள் வழிச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.
(டி.வி.வெங்கட்டராமன்)
நாள்: 28.5.2017
இந்நூலை வாங்கும் முறை தெரிவிக்கவும்.
இப்பதிப்பு விற்றுவிட்டது.மறு பதிப்பு வர உள்ளது. எனினும்
9994499944
எண்ணில் தொடர்பு கொள்க.