நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம்

மேனாள் நீதியரசர் – உயர்நீதிமன்றம், கருநாடகா & சென்னை,

நிறுவனர் – மனித உரிமைகள்  குழு.

‘சீதாநெல்’, எண்.20 /28, கிருட்டிணா தெரு,

தியாகராயநகர், சென்னை – 600 017.

தொலைபேசி: 044-42606222 ; கைப்பேசி: 98404 99333

 

சுந்தரஅறிமுகம்

                ஞானத்திலே பல்வகை உண்டு என ஞானிகள் அன்று வகுத்தனர். அதிலே தலை சிறந்த ஞானம் கற்பூர ஞானம். (கற்பூர புத்தி என்று வழக்காடு மொழி வழங்கும்) அத்தகு ஞானம் நிறைந்தவன் பிறந்துவிட்டான் என்று முக்காலம் உணர்ந்த பெற்றோர்கள் அன்று சுந்தரமான நாமத்தினை இவருக்குச் சூட்டி இந்த நாட்டை சிறந்த முறையில் ஆண்டவன் பாண்டியன் என்ற நிறைவோடு கற்பூர சுந்தரபாண்டியன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். அந்த பெயரின் கருப்பொருளை நிறைவு செய்தது போல, கல்வியில், பல கலைகளில், பன்முகப் பணிகளில் மனதோடு மனதாக இணைந்து செயலாற்றிப் பணி நிறைவு செய்த மணிமகன் இவர். ஆங்கிலேயர் நாள்முதல் இந்த நாட்டின் அல்லது ஒவ்வொரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்து ஆவன செய்கின்ற ஆட்சிப்பணி அதிகாரிகளில் இவர் ஒருவர். எங்குமே பயணித்து ஆனால் பொருள் சேராமல் ஏங்கி கொண்டிருந்த போக்குவரத்துக் கழகங்களுக்குப் பொன்வர இலாபத்தில் இயக்கியவர் என்ற சிறப்பு இவர் மணிமகுடத்தில் ஒரு சிறப்புச் சிறகு. ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற புரட்சித்தலைவர் எம்ஞ்சியார் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்தபோது அவர்களின் செல்லப் பிள்ளையாக நல்ல பேர் சொல்லும் பிள்ளையாகத் தமிழகத்தில் உலாவந்த உத்தமர் இவர். ஆட்சியை தொடர்ந்த புரட்சித்தலைவி செயலலிதாவின் நம்பிக்கை நாயகராக நின்று மக்களின் உள்ளங்களை வென்று செயலாற்றிய செம்மல் இவர். உலகம் தமிழனை உச்சிமுகர்ந்து உவக்கின்ற பொழுதெல்லாம் உலகத் தமிழ் மாநாடுகளில் சென்னை, மதுரை, மொரீசியசு, தஞ்சாவூர் சென்று (1968, 1981, 1989, 1998) சுந்தரத் தமிழினில் மந்திரப் பேச்சு தந்து, மாநாட்டினை மயக்கிய மணிநாயகன் இவர். அந்த மந்திரம் தெரிந்ததாலே சென்னை, மலேசியா, மதுரையில் (2008, 2010, 2011) நடைபெற்ற உலகச் சித்தர் நெறி ஆராய்ச்சி மாநாடுகள் துணைத் தலைவராக முனைந்து முன் நின்ற முனிபுங்கவர் இவர். ‘சித்தர் செம்மல்” என்கின்ற விருது மலேசியாவில் 2015- இல் நடந்த 9 ஆவது உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு இவருக்கு வழங்கி மகிழ்ந்தது. நெற்றிக்கண்ணைத் திறக்கும் வித்தையைக் கற்றவர் இவர். மூன்றாம் விழி முகிழ்த்து காட்டி, தன்னை நாடினோருக்கு எல்லாம் அந்த விழி திறக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தவர்.

                ”இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை” என்ற வெல்லமொழி சொல்லாகத் திருமதி. சாந்தாபாண்டியன் இவருக்கு இறைவன் தந்த வரமாக அமைந்துள்ளது நமக்கெல்லாம் புண்ணியமே. இந்த எடுத்துக்காட்டான இணையர்  ஆற்றிடும் பணிகளெல்லாம் உலகத்தை மாந்தர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் மணிஓசையாக அமைந்தது என்பது இந்தப் பூவுலகு கண்ட காட்சி. இவரது மனைவி கல்வியில் சிறந்தவர். குறிப்பாகச் ‘சிவகங்கை கற்பூர சுந்தர பாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி”, தலைமை பூண்டு கலைவாணி என அமர்ந்து இளம் பிள்ளைகளுக்குக் கல்வி தந்து கடமையாற்றும் கலையரசி இவர். இந்தப்பள்ளி மாநிலப் பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு பெற்று சிகரத்தில் கொடிகட்டி பறக்கின்றது இவரது திறத்தால், கவனத்தால், உழைப்பால், உன்னத மனத்தால். சித்தர் பலர் இவர் கண்முன்னே தோன்ற ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையாளராகப்பட்டறிவுகள் பெற்ற பெருமகள் இவர்.

                இனிய இணையர் இருவரும் இணைந்து பிறப்பித்த இந்நூல் சித்தர்கள் பயிற்சி முறையையும் தீராத நோய்களைத் தீர்க்கும் இயற்கை மருந்துகளைப்பற்றியும், சித்தர்கள் உயிர்ச்சமாதியிலிருந்து நல்லதிர்வுகள் (Vibrations) நன்மைதரும் நிலை பற்றியும், குறிப்பாக எட்டு வடிவ நடை, எளிய ஓகஇருக்கை(யோகாசனம்), கிரியா ஓகம் பயிற்சிகள் பற்றியும் இந்நூல் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது.  பட்டறிவுகளின் வடிப்பாக ஆன்மிகத்தின் துடிப்பாக வாழ்க்கையின் படிப்பாக பிறந்துள்ள இந்நூல் உலகச் சித்தர்வானில் சிறந்த கொடியாகப் பறந்து பரவும் என்பதில் ஐயம் இல்லை. நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

(நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம்)

நாள்: 29.05.2017