இன்னோர் இலக்குவனார் வருவாரா?- இலக்குவனார் திருவள்ளுவன்

[03.09.2020 தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 47ஆவது நினைவு நாள்]

“இந்தி முதன்மை இன்னும் நீங்கியபாடில்லை. இந்தி முதன்மையை அகற்றப் பெரும் அறப்போரைத் தொடங்க வேண்டியிருக்கும்போல் உள்ளது (குறள்நெறி நாளிதழ்: கார்த்திகை 1, 1997: 16.11.66) என 1966இல் தமிழ்ப்போராளி இலக்குவனார் குறிப்பிட்டார். இன்றும் அதே நிலைதான் உள்ளது. ஆனால் தொலைநோக்கு அறிஞரான இலக்குவனார் 1965இல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற அவலநிலை வராமல் காத்திடச் செயல்பட்டு வெற்றியடைந்தார். இன்றைக்கு அப்படி ஓர் அறிஞரோ, தலைவரோ இல்லை என்பதுதான் வருந்தத்தக்க நிலை.

புலவர் கல்லூரி மாணாக்கராக இருக்கும்போதே அவர், “நமக்குத் தேவை தமிழில் முழு எழுத்தறிவுக் கல்வி. இந்தி பரப்புரை அவை எதற்குத் தேவை இங்கு?” என்று வினாவெழுப்பினார்.. இலக்கியப் பரப்புரைகளுடன் தாய்த்தமிழ் காக்கவும் மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டினார். 1940களிலேயே இந்தி என்பது பிற தேசிய மொழிகளை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என எச்சரித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் விருதுநகரில் பணியில் சேர்ந்தார். அப்போது அவர், “ஒரேமொழி ஒரே நாடு என்பதை இந்தியைத் திணிப்பதன் மூலம் நிறுவ மத்திய அரசு முயல்கிறது. இதனால் பிற தேசிய மொழியினர் தத்தம் உரிமைகளை இழக்கின்றனர்” என்றார்.

தமிழ்ப்போராளி இலக்குவனார் கல்லூரிப் பணி தவிர, வார விடுமுறை நாள்களில் தமிழ் வகுப்புகள் எடுத்துத் தமிழ்ப்புலவர்கள் பலரையும் பட்டதாரிகளையும் உருவாக்கினார். பணியாற்றும் ஊர்களில் எல்லாம் தமிழ் அமைப்புகள் நிறுவி, தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டினார். “எங்கும் தமிழ்! என்றும் தமிழ்!” என்பதை வலியுறுத்தினார். திருக்குறள் விழா, திருவள்ளுவர் விழா, தொல்காப்பியர் விழா, ஒளவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா, சங்கப்புலவர்கள் விழா முதலான பல்வேறு விழாக்களை நடத்தி மக்களிடையே தமிழ் இலக்கியங்கள், தமிழ்ப்புலவர்கள் குறித்த விழிப்புணர்வை ஊட்டினார். இவற்றுடன் தமிழ் காக்கப்பட வேண்டும் என்றால் அயல் மொழித் திணிப்பு கூடாது என்பதை வலியுறுத்தி இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தினார். மாணாக்கர்களும் இளைஞர்களும் இவர் உரைக்கும் எழுத்துக்கும் கட்டுப்பட்டனர். இதழ்கள் வாயிலாகத் தமிழ் உணர்வும் இந்தி எதிர்ப்புணர்வும் ஊட்டியதால் நாடெங்கும் உள்ள பொதுமக்களும் இவருக்குச் செவி மடுத்தனர்.

அன்றும் அதே உத்தி

இதனால், அவர் பணியாற்றிய விருதுநகரில் பேராயக் (காங்கிரசு) கட்சியினர், “இலக்குவனாரைச் கைது செய்!” என்றும்இலக்குவனார் மீது நடவடிக்கை எடுத்து வேலை நீக்கம் செய்!” என்றும் சுவரொட்டிகள் ஒட்டினர். சட்டமன்றத்தில், அரசு உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு அரசின் கொள்கைக்கு எதிராக இந்தியை எதிர்த்து மாணாக்கர்களைத் திசை திருப்புகின்றனர் என்று பேசினர். இதனால் அரசு கல்லூரி நிருவாகத்திற்கு இவரை வேலை நீக்கம் செய்யுமாறு கட்டளை அனுப்பினர். ஆனால், இவர் பணியாற்றிய வி.இ.நா.செந்தில் குமாரநாடார் கல்லூரி ஆட்சிக்குழுவினர், “இவரின் கல்லூரிப் பணி சிறப்பாக உள்ளது. நல்ல மாணாக்கர்களை உருவாக்குகிறார். கல்லூரிக்கு வெளியே இவர் என்ன செய்தாலும் அது குறித்துக் கல்லூரி கவலைப்படவும் நடவடிக்கை எடுக்கவும் தேவையில்லை” என்று மறுத்துவிட்டனர்.

ஒரு நாடு தன் மொழியை இழக்குமேல் மீண்டும் பெறல் அரிது. எடுத்துக்காட்டுக்கு வேறு எங்கும் வேண்டாம். நம் நாடே தக்க சான்றாகும். … … செந்தமிழ்ப் பகுதிகளெல்லாம் வேற்று மொழி நாடுகளாக மாறுபட்டு விளங்குகின்றன. இனி மீண்டும் அவற்றைத் தமிழ் வழங்கும் நாடாகக் காணல் கூடுமா? ஆதலின் எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும்” என மக்களிடையே இந்தித் திணிப்பால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார்.

இந்தியை விருப்பப்பாடமாகப் பொய்யுரை கூறும் மத்திய அரசுக்கு எதிராக இந்தி மொழியைக் கற்றால்தான் வாழ்வுண்டு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு ‘‘இந்தியை விரும்பாதவர் மீது சுமத்தவில்லை’’ என்று கூறுவது அறநெறிக்கு ஒத்தாகவும் இல்லை; மக்களாட்சி முறைக்கு மாறான தனிக் கொடுங்கோன்மையாட்சிக்குரியதாகவும் உள்ளது என்பதைப் பசுமரத்தாணிபோல் மக்களிடம் புரிய வைத்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1965 சனவரியில் இந்தி ஒற்றை ஆட்சி மொழியாக மாறும் என்பதைப் பலவகையிலும் அறிவுறுத்தினார். எனினும் இதனை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகக் ‘குறள்நெறி’ இதழை மீண்டும் தொடங்கினார். இது குறித்து அவரே, பின்வருமாறு கூறியுள்ளார்.

“இந்தி முதன்மையைத் தடுப்பதும் தமிழைத் தூய நிலையில் வளம்படுத்துவதும் குறள்நெறியில் மக்கள் வாழ்வதற்கு ஒல்லும் வகையால் உழைப்பதும் மக்களாட்சி முறை மாண்புற வழிகாட்டுவதுமே நம் இதழின் குறிக்கோளாகும்.”

அண்ணாவும் இலக்குவனாரும்

மொழிப்போரில் முப்பதாண்டுக் காலமாக ஈடுபட்ட பேராசிரியர் வகித்த முன்னோடிப் பங்களிப்பைப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பின்வரும் உரை தெள்ளிதின் விளக்குகிறது; முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட நற்றமிழர்களாக மாற்றி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் அறியவில்லை போலும்.” என்றார் இலக்குவனாரின் 55ஆவது பிறந்தநாள் பெருமங்கலத்தின் பொழுது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது கட்சிகள் சார்பான எழுச்சியாக மாறினால்தான் முழுப்பயன் கிட்டும் என்பதை பேரா.இலக்குவனார் உணர்ந்தார். எனவே, 1960இல் பேரறிஞர் அண்ணாவைத் தியாகராசர் கல்லூரிக்கு அழைத்தார். திமுக விலைவாசிப்போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடத் தமிழ்மக்களின் வாழ்வை அழிக்கும் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார். இல்லையேல் 1965 இல் இந்தி ஒற்றையாட்சி மொழியாகிப் பிற எல்லா மொழிகளையும் அழிக்கும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பேரறிஞர் அண்ணா, கட்சியினரைக் கூட்டி இது குறித்த முடிவை ஏற்று அறிவிப்பதாகக் கூறினார். பேரா.சி.இலக்குவனார் இவ்வாறு உணர்த்தியிராவிட்டால் திமுக. இந்தி ஆட்சிமொழி என்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்காது. திமுகவின் போராட்டங்களால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது.

பேரறிஞர் அண்ணா இந்தி ஆட்சிமொழியாக மாற உள்ள 1965ஆம் ஆண்டுக் குடியரசு நாளான 26.01.1965 ஐக் கறுப்பு நாளாக அறிவித்தார். எனினும் மாணாக்கர்களிடம், “ஒவ்வொருவரும் மிக மிக அமைதியான முறையில் அவரவர் இல்லத்தில் இந்தி எதிர்ப்புக்கு அடையாளமாகக் கறுப்புக் கொடியைப் பறக்க விடுங்கள். வேறு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்” என்றார். (முனைவர் தமிழரசி ம.நடராசன் எழுதிய இந்தி எதிர்ப்புப்போர் குறித்த நூல்)

ஆனால், பேராசிரியர் சி.இலக்குவனார், இந்தித்திணிப்பு மாணாக்கர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல். அவர்கள் போராடாமல் யார் போராடுவார்கள் என்று கேட்டு மாணாக்கர்களை இந்தி எதிர்ப்புப் போரில் குதிப்பதை வரவேற்றார். நாடெங்கும் மாணாக்கர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சட்ட எரிப்புப் போராட்டம்

மதுரையில் மாணாக்கர்கள் இந்தி ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான பக்கத்தின் தட்டச்சுப்படியை எரிக்கப்போவதாக அறிவித்தனர். நா.காமராசு, கா.காளிமுத்து முதலான மாணாக்கர்கள் வாழ்த்து பெறுவதற்காகப் பேரா.சி.இலக்குவனாரை வந்து சந்தித்தனர்.

மதுரையில் திலகர் திடலில் அல்லது சான்சிராணி பூங்கா அருகில் உள்ள நியூ சினிமா எனப்படும் திரையரங்கு முன்னர் எரிக்க இருப்பதாகத் தெரிவித்தனர். பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களிடம், சட்டத்தை எரிக்க ஓரிடத்தைத் தெரிவு செய்துவிட்டு மற்றோர் இடத்தில் எரிக்க இருப்பதாக அறிவியுங்கள். சட்டத்தை எரிப்போர் தலைமறைவாகி விடுங்கள். பிறர் களப்பணியாற்றுங்கள். உரிய நாளில் திட்டமி்ட்டவாறு சட்டத்தை எரித்து விடுங்கள் என்றார். அதற்கேற்ப அவர்கள் செயலாற்றியதால் காவல் துறையினர் மோப்பம் பிடித்து வருவதற்குள் சட்டத்தை எரித்து விட்டனர். இதனால் கைதாகி ஆறு மாதச் சிறைத்தண்டனையும் பெற்றனர். பேரா.சி.இலக்குவனார் வறுமையில் இருந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறு மாதங்களும் பொருளுதவி அளித்து வந்தார்.

மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மதுரை விசை

எதிர்பார்த்ததைவிட இந்தி எதிர்ப்புப் போர் பன்மடங்கு தீவிரமடைந்தது. தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அஞ்சிய அரசு, மாணவர்கள் போராட்டங்களை நிறுத்தச் சொல்லி அறிக்கை விடுமாறு திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவிடம் வேண்டியது. அவரோ, இது திமுகவின் போராட்டமல்ல. நான் சொன்னால் கேட்பதற்கு மாணாக்கர்கள் திமுகவினருமல்லர். பல கட்சியினரும் கட்சி சாராதவர்களும் உள்ளனர். எனவே, நான் அறிவித்தால் பயனில்லை. மாணாக்கர்களைக் கட்டுப்படுத்தும் விசை மதுரையில் பேராசிரியரிடம் (சி.இலக்குவனாரிடம்) உள்ளது என்றார்.

இதனால் மதுரை வந்த காவல் துறை அதிகாரிகள் பேரா.சி.இலக்குவனார் பணியாற்றிய தியாகராசர் கல்லூரியின் தாளாளர் கருமுத்து தியாகராசரைச் சந்தித்தனர். இலக்குவனாரிடம் பேசுமாறு கூறிய அவர்களிடம் அவர், “தமிழ் அரிமா இலக்குவனாரின் ஆளுமைக்கு முன்னர் நான் மாணாக்கனாக நடந்து கொள்வேன். என்னால் அவரிடம் ஒன்றும் பேச இயலாது” என்றார்.

பின்னர் அவர்கள் நேரடியாகப் பேரா.சி.இலக்குவனாரைச் சந்தித்து “இந்தி எதிர்ப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள்” என அறிக்கை விடுமாறு கேட்டனர். அதற்கு அவர், “தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் போராடும் மாணாக்கர்களிடம் இவ்வாறு தெரிவித்தால் நான் எப்படி நல்ல ஆசிரியனாக இருக்க முடியும்? ஒருவேளை நான் தெரிவித்து அவர்கள் அதன்படி நடந்தால் அவர்கள் எப்படிச் சிறந்த மாணாக்கர்களாக இருக்க முடியும்” என்று மறுத்து விட்டார். போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்ததால் பேரா.சி.இலக்குவனாரை ‘இந்தி எதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டி 01.02.1965 அன்று கைது செய்தனர். உலகில் மொழிக்காக கைதான முதல் பேராசிரியராக இலக்குவனார் இருந்தார். இவ்வழக்கில் விடுதலையானதால், 02.05.1965 அன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தி: அன்றும் இன்றும்

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் திடீரென்று ஒரு நாளில் வெடித்தது அல்ல. ஒரு நாள் கூத்தாக இருந்தால் இந்தி எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாக இன்றும் இருக்காது. எந்த ஓர் ஆணையுமின்றி 26.01.1965 அன்று இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாகும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் விளைவுகளைப் பிறர் பொருட்படுத்தாமல் இருந்தனர். அப்பொழுது இதனால் பிற மொழி பேசுநர் வாழ்வு இருண்டுபோவதை உணர்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் தொலைநோக்கு உணர்வுடன் சிந்தித்து இதற்கு எதிராக மக்களை ஆயப்படுத்தினார். எனவேதான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரால் அச்சட்டம் நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்த பேராயக் (காங்கிரசு) கட்சி தமிழக அரிணையை இழந்தது. அதன் பின்னர் மீண்டும் அரியணை ஏறமுடியாமல் தவிக்கின்றது.

இன்றைக்கு மத்திய பாசக ஆட்சி ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் சில நூறுபேர் அறிந்த சமசுகிருத மொழியை நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. விருப்பப்பாடம் என்ற போர்வையில் இந்தியை நாடெங்கும் திணிக்கவும் செயலாற்றுகிறது. இதனை அறிஞர்களும் தமிழ் அமைப்பினரும் எதிர்க்கின்றனர். எனினும் பாசக சிலர் கூறும் ஆதரவு உரைகளைப் பரப்பி மக்களை மூளைச்சலவை செய்ய முயல்கிறது.

தமிழ் படித்துத் தமிழால் செல்வம் திரட்டித் தமிழால் தரணி எங்கும் உலா வருவோரும் திமுகவினரால் இந்தி படிக்க முடியாமல் போயிற்று என்று அழுகுரல் எழுப்புகின்றனர்.

அவர்களுக்குத் தெரியும் அவர்கள் இந்தி படித்திருந்தால் இருந்த இடம் விட்டு வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார்கள் என்று. எனினும் பொய்யுரை புகல்கின்றனர். இத்தகைய பொய்யுரைகளை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர்.

தேசிய மொழிகள் பல பேசப்படும் நம்நாட்டில் புதிய கல்விக் கொள்கையால் அவை யாவும் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. அம்மொழிகள் பேசுநர் நான்காம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டு இருண்ட திசைக்குத் திருப்பப்படுகின்றனர். ஆனால், இது குறித்து ஆழமாகவும் விரிவாகவும் மக்களிடையே கொண்டு செல்வோர் யாருமிலரே!

தொலைநோக்கு உணர்வுடன் செயல்பட்டு இந்தித் திணிப்பை விரட்டிய இலக்குவனார் போல் இன்றைய இந்தி, சமசுகிருதத் திணிப்புகளை விரட்ட இன்னோர் இலக்குவனார் வருவாரா?

இலக்குவனார் திருவள்ளுவன்

மின்னம்பலம்

வியாழன், 3.09. 2020