பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தீக்கதிர் : ilakkuvanar,theekkathir

சி.இலக்குவனார் – சில நினைவுகள்

“ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம்

மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ

வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய

ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…”

என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத் தமதுபள்ளித்தோழர்கள் வினவியகாலை, ‘நான்இராமாயணப் பெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை. என் வாழ்வு தமிழ்நலன் காக்கும் குறிக்கோள் வாழ்வு; இலக்கு உடைய வாழ்வை விரும்புவதால் தான் இலக்குவன் எனப் பெயரிட்டுக்கொண்டேன்’ என அழுத்தம் திருத்தமாக விடையளித்துள்ளார்.

  1936 ஆம் ஆண்டு நாட்டாண்மைக் கழகம் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியேற்ற இலக்குவனார் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் அமைந்த பள்ளிகளில் பணி ஆற்றினார். தமிழாசிரியர் பணியேற்ற நாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளில் தொல்காப்பியர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், இளங்கோ அடிகள் திருநாள், ஒளவையார் திருநாள், மறுமலர்ச்சி நாள் என்று ஐந்து விழாக்கள் நடத்துவதை தமதுகடமையாகக் கொண்டார். தமிழ்ப் புலவர்களின் சிறப்புகளை மாணவர்கள் மட்டுமின்றி அவர்தம் பெற்றோரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும், பெற்றோரும் ஆசிரியரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பையும் இத்தகைய விழாக்கள் நல்கியதாக இலக்குவனார் தமது தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்புலவர்களின் விழாக்களைத் தமிழ்நாட்டிலேயே முதலில் நடத்தியவர் என்னும் சிறப்பும்இலக்குவனாருக்கே உரியது. நாட்டாண்மைக்கழகப் பள்ளிகளில் ஆறாண்டுக்காலம் பணியாற்றியபின்னர் திருவையாறு அரசர்கல்லூரியில் விரிவுரையாளர் பணி ஏற்றார். அதன் பின்னர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணி ஆற்றினார். பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முதல்வர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட ஆற்றினார். நாற்பதுகளின் தொடக்கத்தில் தமிழ் வகுப்புகளில் கூட ஆங்கில முழக்கம் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆசிரியர்களும் ஆங்கில மேற்கோள்களைக் கூறுதலைப் பெருமையாகக் கருதிவந்தனர். இலக்குவனார் இந்நிலை மாறக் காரணமாக விளங்கினார். வருகைப் பதிவில் ஆங்கிலச் சொல் தொலைந்தது.

  இலக்குவனார் “உள்ளேன் ஐயா” எனும்தொடரை அறிமுகப்படுத்தினார். நெல்லையிலே புறப்பட்ட தமிழ்தென்றல் மதுரை வழியாக சென்னை வரை வலம்வந்து நிலைபெற்றுவிட்டது. பல்கலைக்கழக இடைநிலை வகுப்பில் பொதுத்தமிழ் பயின்ற நினைவில் வாழும் கல்வியாளர் கி.வேங்கடசுப் பிரமணியாரும், பிஓஎல் இரண்டாண்டுகள் வரை பயின்று பின் கல்வியைத் தொடராத தோழர் இரா. நல்லகண்ணு அவர்களும் இச்செய்தியை வழங்கினர். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நாளிலிருந்தே கவிதைகளைப் படைக்கும் ஆர்வம் இலக்குவனாருக்கு மேலோங்கியிருந்தது. இதன் விளைவாகத் தமது கல்லூரிப் பருவத்திலேயே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ எனும் குறுங்காப்பியத்தைப் படைத்து நூலாகவும் வெளியிட்டார். இந்நூலைக் கவிஞர் சுரதா பெரிதும் பாராட்டியுள்ளார். “பாரதிதாசன் ஒரு குறுங்காப்பியத்தை வெளியிடுவதற்கு முன்னமேயே 1933 ஆம்ஆண்டில் இலக்குவனார் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. தூய தமிழில் இனிமையான நடையில் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதமுடியும் என்பதை இலக்குவனார் இப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல கவிதைப் படைப்புகளை இயற்றி அவர் வெளிக்கொணர்ந்திருந்தால் தமிழுக்கு இன்னொரு பாரதிதாசன்கிடைத்திருப்பார்” என்பது சுரதாவின்கருத்து. எழிலரசி என்னும் இக்குறுங்காப்பியத்தின் தலைவி ஆளுமைத்திறனும் முற்போக்குச் சிந்தனையும் பெற்றவளாக இலக்குவனாரால் படைக்கப்பெற்றிருந்தாள்.

  இதன் விளைவாக கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் தமிழ்ப்பெருங்காப்பியத் தலைவிகளுடன் ஒப்பவைத்து நோக்கத்தக்கவளாக விளங்குகிறாள். பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண்ணின் தலைமை ஆகியமுற்போக்கு சிந்தனைகளை இக்குறுங்காப்பியம் முப்பதுகளின் தொடக்கத்திலேயே முழங்கியமை குறிப்பிடத்தக்கது. முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை மிக்க மகிழ்வோடு இலக்குவனார் போற்றினார்.

“குடியரசு ஓச்ச குடிமக் கட்கு

உரிமை உண்டென உரைக்கப் பட்டது

“எவர்க்கும் விடுதலை எங்கும் விடுதலை”

என்ற முழக்கம் எங்கும் ஒலித்தது;

“மக்களுக் காக மக்கள் ஆட்சி 

மக்களே நீங்கள் மன்னர் ஆயினீர்

ஆட்சி மன்றம் அமைக்க வருக 

இதனை இதனால் இவன் முடிக் குமென்று

அதனை அவன் கண் அளிக்க” என்றார்.

வெள்ளையர் ஆட்சி அகன்று தன்னுரிமைபெற்றபின் வாக்குரிமை பெற்ற செய்தியை மிகமகிழ்ச்சியுடன் இலக்குவனார் இயம்புகிறார். அதேவேளையில் சாதி வேறுபாடுகள் தகர்ந்தொழிந்தாலே நாம் முழு உரிமை பெற்றமகிழ்வைக் கொண்டாட முடியுமென்பதையும் அவர் சுட்டிக் காட்டத்தவறவில்லை.“மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க அறநெறி கோடி அல்லது புரியும்சாதிமுறைகள் சாகுநாள் என்றோ?”எனத் துயருடனும் சீற்றத்துடனும் வினவும் இலக்குவனாரின் வினாவுக்கு இன்னும் ஆறுதலளிக்கும் விடை கிட்டவில்லை. கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவதுடன் தமது பணி நிறைவுற்றுவிட்டதாக இலக்குவனார் கருதிவிடவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பரப்பவும் தமிழ் இலக்கண இலக்கிய நலன்களை மக்களுக்கு எடுத்துரைக்கவும் சொற்பொழிவு, எழுத்து என்னும் இரண்டையும் கருவிகளாகக் கொண்டார். ‘எழுதுதற்கு ஏடும் பேசுதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்பரப்ப’ என்பது இலக்குவனாரின் முழக்கங்களில் ஒன்றாகும்.

  அவர் திருநெல்வேலியில் பணியாற்றியபோது ஒரு கூட்டத்தில் யாரோ ‘ சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் எறிவோம்” எனக் கூறியதாகக் கேள்வியுற்று உளம் பதைத்துப் போனார். சங்க இலக்கியப் பெருமையைத் தமிழ் படிக்காதவர்களும் தெரிந்திருந்தால் இத்தகைய வீண்பேச்சு வந்திருக்காதே எனக் கவலை கொண்டார். உடனே செயலில் இறங்கியவர் இலக்குவனார். ‘சங்க இலக்கியம்’ என்னும் பெயரில் வாரஇதழ் நடத்தமுனைந்தார். அன்றிருந்த நாணயமுறையில் அதன் விலை ஓரணா. 1944 முதல் 1947 வரை நடந்த இந்த இதழ் வாரந்தோறும் சங்க இலக்கியத்தை ஓரளவு தமிழ் கற்றோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய விளக்கங்களோடு சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடக வடிவிலும் வழங்கியது. இதற்கு நல்லவரவேற்பு இருந்தது. அதுவரை புலவர்களுக்கே உரியதாகக் கருதப்பட்ட சங்க இலக்கியம் மக்கள் இலக்கியமாகக் கருதப்படும் நிலைமலர்ந்தது. இந்த இதழ் செலுத்திய தாக்கத்தால் சங்க இலக்கியங்களைப் பற்றிய இலக்கிய விளக்க நூல்கள் வெளிவரத் தொடங்கின. நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் சங்க இலக்கிய காட்சிகளைக் காணும் வாய்ப்பை மக்கள் பெற்றனர். உயர்கல்வி கற்ற ஒரு சிலர்க்கே உரியதாகக் கருதப்பட்ட சங்க இலக்கியத்தை மக்கள்சொத்து என நிலைநாட்டியவர் பேராசிரியர் இலக்குவனார் எனலாம். இதேபோன்று விருதுநகரில் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது ‘இலக்கியம்’ எனும் திங்களிருமுறை இதழை நடத்தினார். அந்த இதழில் நடத்தப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்பட்டது. ஓர் இலக்கியஇதழ் இலக்கியங்களைப் பற்றிய செய்திகளைப் பற்றி குறுக்கெழுத்து போட்டி நடத்திப்பரிசு வழங்கியது என்னும் பெருமையை இந்தஇதழ் பெற்றது.

  இதுபோன்றே ‘குறள்நெறி’ என்னும் இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வள்ளுவர் வாய்மொழி போற்றும் முனைப்புடன் நடத்தினார். தாம் பணியிழந்த வேளையில் குறள்நெறியை நாளிதழாகவும் நடத்தினார். நம் நாட்டில் ஒரு மொழிப்பேராசிரியர் அந்த மொழியைத் திருத்தமாக மக்கள் பயன்படுத்தத் துணைபுரியும் நோக்கில் ஒரு நாளிதழை நடத்தினார் என்னும் பெருமை இலக்குவனார்க்கே உரியது. இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை ஆற்றும் துணிவும் உழைப்பும் இலக்குவனாரின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளாகும்.

(முனைவர் மறைமலை இலக்குவனார் உரையிலிருந்து சில பகுதிகள்)

இலக்கியச்சோலை, தீக்கதிர்

தலைப்பு-முத்திரை-இலக்கியச்சோலை,தீக்கதிர்: muthrai_ilakkiyachoalai,theekathir முத்திரை,தீக்கதிர்: muthirai_theekathir