seethayanam03

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர்ச் சிலர் எடுத்துரைத்து பாதையில் தன் கருத்தை வெளிப்படுத்த இந்நாடகத்தைப் படைத்துள்ளார். ஆனால், தன் கருத்து என்று திணிப்புத் தோற்றம் இல்லாமல் இராமன், சீதை, பரதன், சத்துருக்கணன், இலக்குமணன், இலவன், குசன் முதலான அவரவர் பார்வையில் அவரவர்கள் சொல்லியனபோன்றே படைத்துள்ளார் என்பதுதான் நாடகத்தின் சிறப்பு. ஓரங்க நாடகம் என இவர் குறித்திருந்தாலும் ஆறு காட்சிகள் உள்ளமையால் குறுநாடகம் என்றுதான் கூற வேண்டும். இராமன் புத்தருக்குப்பிற்பட்டவனே! ஆதலின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னவன் என்பது தவறாக வழங்கிவரும் கருத்தின் அடிப்படையில் இவர் குறிப்பிட்டுள்ளதே! இராவணனை அரக்கன் என்பதும் தவறே! இலங்கைப்போர் எனச் சொல்லாமல் ஈழப்போர் எனக் குறித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை. என்றபோதும், உளவியல் அடிப்படையிலும் பெண்ணுரிமை நோக்கிலும் மனித உரிமைகள் அடிப்படையிலும் ஏரண (அளவையியல்) நோக்கிலும் நன்கு அமைத்துள்ளார். நல்ல நாடகங்களை மக்களும் அரசும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாடகச் செம்மல்கள் உருவாவார்கள்; நல்ல நாடகங்கள் பெருகும். இந்நாடகத்தை இவர் எழுதி ஏழு ஆண்டுகள் ஆயிருக்கும் போலும்! விவரம் தெரியவில்லை் ஆனால், இப்பொழுதுதான் மின்குழுமத்தில் பகிர்ந்துள்ளார். நல்ல படைப்புகளைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் நம் கடமைதானே! அந்த வகையில் இந் நாடகம் அகரமுதல இதழில் இடம் பெறுகிறது.நாடக இலக்கியர் செயபாரதன் பாரதத்தின் மறுபக்கத்தையும் தன் நாடகம் மூலம் காட்ட வேண்டும். – ஆசிரியர், அகரமுதல ]

  seethayanam04

முகவுரை:

வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டா. இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு உரைாயாடல்கள்

புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக்காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்படமாக்கப்பட்ட ஒரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராச கோபால்(ஆச்சாரியார்) கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிப்பேரரசர் கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையைச் சற்று மாற்றியுள்ளதாக இராசாசி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் பிறப்பாக(அவதாரமாக)ச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராசாசி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராசாசி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப்போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரக்காண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் தூய்மையை இராமனுக்கு மெய்ப்பிக்க, இராமகதையில் வால்மீகி தீக்குளித்தேர்வு(அக்கினிப் பரீட்சை) வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாகவில்லை. உத்தரக் காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராசாசி மனமுடைகிறார் (Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்தரக் காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன்.

தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னதத் துன்பியல் வரலாறு என்பது என் கருத்து!

இலங்காபுரியில் போரிட்டுச் சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

*உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரணமானவனான(கர்த்தாவான) இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கருப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி துறவர்மனையில்(ஆசிரமத்தில்) வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத இணையராய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வப் பிறப்பாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் ‘சீதாயணம்’ எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விட்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்படவில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்படவில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால்முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு பேராயிரம்(மில்லியன்) யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் இட்லர், நச்சுவளியிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக்கொன்று குழியில் மூடிய சதாம் உசேன் போன்ற அரக்கப்பிரிவினர் உலகில் ஒவ்வொரு உகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும்முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடியதோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி அறிவியல் மேதை சார்லசு தார்வின் விதியைப் பின்பற்றி, இராமர்காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன்.

இந்நாடகத்தில் வரும் முதன்மை நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களேநிகழ்வுகளே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முதன்மைக் காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதத் தொடங்கினேன். இலவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்குச் சென்று இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத வேள்வியின் போது இலவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு விற் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டும் மெய்யாக நிகழ்ந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் இலவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுவமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் இலவா, குசா இராமனைச் சந்தித்த நிகழ்வை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

துறவர்மனையில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி இலவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதைப்பாத்திரமாக இருந்ததாலும், இராமகதை நிகழ்வுகள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பதிகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

(தொடரும்)

s.jayabharathan01

https://jayabarathan.wordpress.com/seethayanam/