சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)- இலக்குவனார் திருவள்ளுவன்
சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)
மரு.சுதா சேசையனைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக அமர்த்திய பொழுது செய்தி ஆசிரியர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார். தெரிவித்தவர், “தமிழறிஞர் அல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? கண்டித்து அறிக்கை வெளியிடுங்கள். வெளியிடுகிறோம்” என்றார். நான் அதற்குத், “தமிழ் தொடர்பான துறை என்றால் தமிழறிஞரல்லாதவர் அல்லது தமிழறியாதவர் அல்லது தமிழரல்லாதவரை அமர்த்துவதுதான் மரபு. இம்மரபைப் பின்பற்றி யுள்ளனர். இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றேன். மேலும் “இஃது ஓர் அதிகாரமில்லாத பதவி. இதை அறியாமல் அவர் வந்திருக்கலாம். இவர் வந்த பின்னராவது இப்பதவிக்கு அதிகாரம் கிடைக்கட்டுமே! எனவே, அவரை வரவேற்கலாமே!” என்றேன்.
ஆனால் நாளிதழ் ஆசிரியர் ஒருவர் இவரை வரவேற்றதுடன் நில்லாது,”தமிழைப் போலவே சமற்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புரிதல் உள்ள ஒருவர்தான் அந்தப் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவர். என்னதான் தனித்தமிழ் குறித்துப் பேசினாலும், சமற்கிருதத்துடனான ஒப்பீட்டுப் பார்வை இல்லாமல் தமிழாய்வு என்பது முழுமை யாகாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். பூனைக் குட்டியை வெளியே விட்டுவிட்டனர்
பிற்காலத்தில் மணிப்பிரவாளம் செல்வாக்காக இருந்த பொழுது தமிழ் மட்டும் அறிந்த புலவரை அரைப்புலவர் என்று எள்ளி நகையாடினர். அதைப்போல் கொண்டு வரப் பார்க்கிறார்கள். மருத்துவக் கல்லூரி, சிற்பக் கல்லூரிகளில் சமற்கிருதம் பாடமாக இருந்ததை அரும்பாடுபட்டு நீக்கிய பின் மீண்டும் அம்முறையைக் கொண்டுவர எண்ணுகிறார்கள் போலும். தமிழறிஞர்கள் பிற எந்த மொழியையும் எத்தனை மொழியையும் அறிந்திருப்பது சிறப்பதுதான். ஆனால், செம்மொழி யல்லாத சமற்கிருதம் அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இனிச் செம்மொழி நிறுவனப் பதவிகளுக்கெல்லாம் சமற்கிருத அறிவு தேவை எனக் கொண்டு வந்தால் வியப்பதற்கில்லை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே நாம் இக்கருத்தைக் கண்டிக்க வேண்டும்.
மேலும் இவர்பற்றிய குறிப்புகள் எதிலும் இவர் சமற்கிருதப் புலவர் எனக் குறிப்பிட வில்லை. ஒரு வேளை இவர் சார்ந்த குலத்தின் அடிப்படையில் சமற்கிருதம் அறிந்திருப்பார் எனக் கருதி அதைப் புலமையாகக் குறிப்பிடுகிறார் போலும். ஒருவேளை இவர் சமற்கிதத்தில் புலமை மிக்கவராக இருந்தாலும் அது குறித்து நமக்குக் கவலையில்லை.
மேலும், “சங்க இலக்கியமானாலும், சமய இலக்கியமானாலும்…. … ஒருசேரப் புலமை வாய்ந்த ஒருவர் ” என்கிறார்.
இவர் சங்க இலக்கியப் புலமை மிக்கவராக எங்கும் கூறியதில்லை. ஆன்மிக/ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்றுதான் கூறப்படுகிறார். அதுவும் அரசுப் பதவியில் இருந்த பொழுதே பெரும்பாலும் இவற்றிலேயே நேரத்தைச் செலவழித்தவர் என்றும் கூறப்படுகிறார். அப்படியானால் இனி, இறைநெறிச் சொற் பொழிவாளர்கள், கதைப் பொழிவாளர்கள், தொகுப்பாளர்கள் முதலானோர் தமிழ் சார்பான பணிகளுக்கு நியமிக்கப்படுவார்களோ?
சமய இலக்கியம் என்பது கி.பி. 7 ஆம் நூற்றாண்டுதான். “கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்க்குமுகம் பற்றிய ஆய்வுகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது” என இதன் நோக்கம் தெளிவாகக் கூறுகிறது. எனவே, செம்மொழிக் காலம் இல்லாத பிற கால இலக்கியப் புலமை குறித்துப் பேசுவதற்கே வாய்ப்பில்லை. எனவே, இவற்றைத் தகுதியாகக் கொள்ள இயலாது. சிறந்த பல் மருத்துவர் என்பதற்காகக் கண் மருத்துவம் பார்க்க அவரிடம் ஒப்படைக்க இயலாது. மரு.சுதா சேசையன் மருத்துவக் கல்வியிலும் மருத்துவப் பணியாண்மையிலும் பட்டறிவு மிக்கவர். அவர் பட்டறிவிற்கும் பணியறிவிற்கும் ஏற்ற பதவியை அளித்தால் வரவேற்கலாம். அனைத்திந்திய மருத்துவக் குழு, தேசிய மருத்துவ ஆணையம் போன்றவற்றில் பதவி வழங்கினால் மகிழலாம். அதைவிட்டு விட்டுச் செம்மொழி நிறுவனத்தில் புகுத்துவது ஏன் என்பதுதான் தமிழறிஞ்களின் கேள்வி; தமிழன்பர்களின் வருததம்.
இன்னும் சிலர் “இதன் தலைவர் முதல்வர். அவரே பாசகவிற்கு அஞ்சி வாய்மூடி அமைதி காக்கிறார். நீங்கள் ஏன் குதிக்கிறீர்கள்” எனத் தமிழன்பர்களைக் கேட்கின்றனர். அவருக்கும் சேர்த்துத்தான் தாங்கள் குரல் கொடுப்பதாகத் தமிழன்பர்கள் கூறி வருகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் கீதையைப் புகுத்தியதுபோல் கல்வித்துறைகளில் வரணாசிரமத்தை – சனாதனத்தை – புகுத்தி வருவதுபோல் தமிழாய்வு நிறுவனம் மூலம் இவற்றைப் புகுத்துவதே ஒன்றிய அரசின் நோக்கம் என்கின்றனர். இதை நாம் மறுப்பற்கில்லை. எனவேதான் தமிழாய்வு நிறுவனத்திற்குச் சமற்கிருதப்புலமை அறிந்தவர் இருப்பதே சிறப்பு என்று குரல் எழுகிறது.
இந்தியாவில் 18 சமற்கிருதப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. உலகெங்கும் ஒன்றிய அரசு பல்வேறு சமற்கிருத அமைப்புகளை நடத்துகின்றது. இவற்றிலெல்லாம் உலகின் மூத்த செம்மொழியான தமிழ் அறிந்தவர் அமர்த்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தால் இவரின் நாணயத்தைப் பாராட்டலாம். அவ்வாறில்லாமல் தமிழ் நிறுவனங்களில் மட்டும் சமற்கிருதம் வேண்டும் என்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியே!
பிற அமைப்புகள் போல் இந்நிறுவனத்தின் அதிகாரம் மிக்க அமைப்பு ஆட்சிக் குழுதான். இதில் இவரைத் துணைத்தலைவராகச் சேர்த்திருப்பதன் மூலம் துணைத் தலைவர் பதவியை அதிகாரம் மிக்க பதவியாக மாற்றி அதன் மூலம் சமற்கிருதத்தைத் தமிழுக்கு மேம்பட்டதாக அறிவிக்கச் செய்யச் சதி நடப்பதாக உணர்வதால் இது கண்டிக்கத்தக்கதே! எனவே, இவரின் நியமனமும் கண்டனத்திற்குரியதே கண்டனத்திற்குரியதே!
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௫௰௨ – 652)
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர்
தமிழ்க்காப்புக் கழகம்
சுருக்கமான, அதே நேரம் மிகவும் அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் ஐயா!
“சிறந்த பல் மருத்துவர் என்பதற்காகக் கண் மருத்துவம் பார்க்க அவரிடம் ஒப்படைக்க இயலாது” என்று நீங்கள் குறிப்பிட்டது துறைசார் புரிதல் இல்லாத என்னைப் போன்ற படிக்காதவர்களுக்கும் இது எப்பேர்ப்பட்ட தவறான பதவியமர்த்தல் என்பதைத் துல்லியமாக உணர்த்துகிறது.
தமிழறிஞர்கள் இந்தப் பதவியமர்த்தலைக் கண்டித்தால் “இவருக்கு அந்தப் பதவி மீது கண் போல. காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கண்டிக்கிறார்” என வாய் கூசாமல் சொல்வார்கள். அதற்கு இடம்தரா வண்ணம் முதலில் ஒருவர் இது குறித்துக் கண்டித்து எழுதக் கேட்டபொழுது மறுத்தவர்தாம் நீங்கள் என்பதைப் பதிவு செய்து விட்டு அதன் பிறகு கட்டுரையின் மையப்பொருளைப் பேசியது அத்தகைய வெட்டிப் பேர்வழிகளின் வாயடைக்கும் வகையில் நன்றாக அமைந்திருந்தது.
சமற்கிருதப் பல்கலைக்கழகங்களிலெல்லாம் தமிழும் அறிந்தவர்தாம் தலைமைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்ப முன்வராதவர்கள் தமிழ் அமைப்புகளின் தலைமைப் பதவிக்கு மட்டும் சமற்கிருதம் அறிந்தவரை அமர்த்த வேண்டும் என்பது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலக் கண்டிப்பாகத் தமிழுக்கு அநீதி இழைக்கும் முயற்சியே!
மேலும் பார்ப்பனர் என்றாலே சமற்கிருதம் அறிந்தவராகத்தான் இருப்பார் என நினைப்பதும் முற்றிலும் தவறு. 99.99% பார்ப்பனர்கள் சமற்கிருதம் அறியாதவர்களே! வேண்டுமானால் இதை மறுப்பவர்கள் தங்கள் பார்ப்பன நண்பர்களிடம் ஏதாவது ஒரு சமற்கிருத மந்திரத்தைச் சொல்லி உடனே பொருள் கூறக் கேட்டுச் சோதனை செய்து பார்க்கட்டுமே! யாருக்கும் தெரியாது. கோவிலில் பூசை செய்யும் பார்ப்பனப் பூசாரிகளுக்குக் கூடத் தாங்கள் அன்றாடம் ஓதும் சமற்கிருத மந்திரங்களின் பொருள் தெரியாது என்பதே உண்மை.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரே முதல்வர்தான் எனும்பொழுது இதில் வெறுமே ஒன்றிய அரசை மட்டும் அனைவரும் கண்டித்துக் கொண்டிருப்பது கண்துடைப்பு நாடகம். ஒன்றிய, மாநில ஆட்சியாளர்கள் இருவரையுமேதான் கண்டிக்கிறேன் என்று நீங்கள் விடுத்திருக்கும் இந்த ஓர் அறிக்கைதான் இது குறித்து வெளிவந்திருக்கும் உண்மையான, முழுமையான கண்டன அறிக்கை என நான் தயங்காமல் சொல்வேன் ஐயா!
மிக்க நன்றி!
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா.