செஞ்சீனா சென்றுவந்தேன் – பொறி.க.அருணபாரதி
- அறிமுகம்
அலுவலகப் பணி காரணமாக, ஒரு மாத காலம் சீனா (மக்கள் சீனக் குடியரசு) செல்ல நேர்ந்தது. அங்கு நான் பெற்ற பயணஅறிவுகளின் தொகுப்பே இக்கட்டுரை!
வட அமெரிக்காவில் நடைபெற வேண்டிய பல அலுவலக வேலைகளை அங்குள்ள நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்திலேயே செய்து முடிக்க, பல வட அமெரிக்கர்களை பணியிலமர்த்த வேண்டும். அவர்களுக்கு அதிகளவில் சம்பளமும் தர வேண்டும். எனவே, அப்பணிகளை குறைந்த கூலியில் முடித்துத் தருபவர்கள் எங்கிருக்கிறார்களோ, அவர்களை அமெரிக்காவிற்கு வெளியில் பணியிலமர்த்தி அப்பணிகளை முடித்துக் கொள்ள முடியும். இந்த முறைக்குப் பெயர், வெளிப் பணியமர்த்தல் (Out sourcing) என்பதாகும்.
சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் அதிகளவில் மக்கள் தொகை இருப்பதால், இப்பணிக்கு நிறைய பேர் இங்கு கிடைக்கின்றனர். இவ்வாறு தொழில் மேற்கொள்ளும் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், அதன் இன்னொரு கிளை அமைந்துள்ள சீனாவிற்கு சென்று சில பணிகளை மேற்கொண்டு வருவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சீனக் கணினிப் பணியாளர்களுக்கு, மென்பொருள் ஒன்றைப் பயிற்றுவிக்கும் பணி அது! தகவல் தொழில்நுட்பத்துறையில், இப்பணியை செயற்களப்பணி அல்லது அகநிலைப்பணி(On-Site ) என்பார்கள். ஒரு மாதக் காலம் சீனாவில் தங்கி அப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக, சீனதேசம் நோக்கிப் புறப்பட்டேன்.
தமிழினப் பகைமையையே தனது முழுமுதல் கொள்கையாக ஏற்றுச் செயல்படுகின்ற இந்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை மிகவும் துணிவாகச் செய்து வருகின்றது. அது, நமது கடவுச்சீட்டில், Nationality (இனம்) என “இந்தியன்” என அச்சிட்டுத் தருவதுதான். அவ்வாறு அச்சிடப்பட்டுத் தந்த கடவுச்சீட்டை உற்றுபார்த்தபடி எனது விமானப் பயணம் தொடங்கியது.
சீனாவில் நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் சியான்(Xi’an). சான்சி (Shaanxi)மாநிலத்தின் தலைநகரம் இது. சென்னையிலிருந்து இந்நகருக்கு நேரடியான விமானம் கிடையாது என்பதால், ஆங்காங்கு வழியாக மற்றொரு விமானம் ஏறிச் சென்றுதான் அவ்விடத்தை அடையமுடியும். அவ்வாறே சியான் நகரம் நோக்கிப் பயணமானேன்.
ஆங்காங்கிலிருந்து சீனாவிற்குள் நுழையும் போது, விமானத்திலேயே சீன அரசின் குடியேற்றத்துறையின் விண்ணப்பப் படிவம் ஒன்றை அளித்தார்கள். அதில், சீனாவிற்குள் வேறெந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் முறையான இசைவின்றி நிலையான பணியாளர்களாகப் பணி செய்ய முடியாதென்றும், அவ்வாறு வருபவர்கள் முறைப்படி பதிவு செய்து கொண்டு வேலை இசைவுமம்(Work permit) வாங்க வேண்டும் என்றும், அதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எழுதியிருந்தது.
தமக்கென இறையாண்மை கொண்டுள்ள ஒரு நாடு, தமது நாட்டு மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், குடியேற்ற விதிகளைச் செயலாக்குகின்றன. உலகெங்கும் இது நடைமுறை. அவ்வாறான நடைமுறையைத்தான் சீன அரசும் பின்பற்றுகிறது.
(தொடரும்)
திரு க.அருணபாரதி அவர்களின் பயணக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள படங்கள் அருமை. கட்டுரைத் தொடரைப் படிக்க ஆவல்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.