தலைப்பு-செயாஅம்மையார்,நன்றி, வினா :thalaippu_seyaammaiyaar_jayaammaiyaar_nandriyumvanakkamum

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும்

சொல்வீர்கள்! செய்வீர்களா?

செந்தமிழினி பிரபாகரன்

மோடியை சந்தித்த செயா அம்மையார் தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி.

அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டமைக்கும் நன்றி.

சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என நம்புகின்றேன். ஆனாலும் வலிக்கின்ற ஈழத் தமிழர் இதயங்களுக்கு இந்த செய்திகள் பால் வார்க்கும் சில கணமேனும்.

அம்மா உங்களிடம் சில கேள்விகள்:

ஈழத்தமிழரைப் படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடியிடம் கேட்கின்றீர்களே? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளில் இந்தியாவுக்கும் முதன்மை பங்கு உண்டு அல்லவா?  குற்றவாளிகளிடம் எப்படி நீதி கேட்க முடியும்?

சரி காங்கிரசு அரசு என்பதால் மோடியிடம் பேசலாம் என வைத்துக் கொள்வோம். முள்ளிவைக்காலின் பின் மோடி இனப்படுகொலையாளிகளுடன் நல்லிணக்கம் கொண்டு ஆயுத உதவி, படைப் பயிற்சி உதவி என சிங்கள பேரினவாத அரசுக்கு உதவிக்கொண்டு தானே இருக்கின்றார்? இன்று வரை கண்டிக்காதவரா இனி ஈழத்தமிழர் படுகொலைகள்பற்றி அக்கறை எடுக்கப் போகின்றார்?

சரி மோடி நீதி நாடி தருவார் என்ற பொய்மைக் கதையை விடுவோம். நீங்கள் எழுவர் விடுதலையை யார் தடுத்தாலும் செய்தே தீருவீர்கள் என்ற வாக்குறுதியை அற்புதம்மாளுக்கும் மக்களுக்கும் கொடுத்தீர்களே? செய்தீர்களா?

கருணாநிதி தனது தன்னலத்திற்காக 1990 களில் அமைத்த ஈழத்தமிழர்களைக் கொடூரமாக வதைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கொடிய வதை முகாம்களான சிறப்பு முகாம்களை மூடி ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்ய ஏன் உங்களுக்கு இன்னமும் இரக்கம் பிறக்கவில்லை?

சொந்த மண்ணில் வாழ முடியாத ஈழத் தமிழினம் உலகெங்கும் புலம் பெயர்ந்து பல நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வாழ்கின்றது. எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை அன்னைத் தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நடக்கிறது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து இதர நாடுகளில் அகதியாகச் சென்று உரிமையோடு வாழும் தமிழ் மக்கள் போல் வாழ விட கருணை காட்ட மாட்டீர்களா?

கருணை இல்லாத கருணாநிதிக்குத்தான் ஈழத் தமிழரை வதைத்து பார்க்கும் குரூரம் இருந்தது. நீங்களேனும் சிறப்பு முகாமை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து ஈழத்தமிழர் மேல் உண்மையில் அக்கறை இருப்பதை மெய்ப்பித்துக் காட்டலாமே?

மோடிக்குச் சொல்ல தில்லிக்குச் சென்றீர்கள்? நீங்கள் முதலில் ஈழத் தமிழர் மீதான அக்கறையை எழுவர் விடுதலையிலும் சிறப்பு முகாம் மூடுவதிலும் செய்து காட்டலாமே?

சொற்கள் பெரிதல்ல! செயல்களே உயர்ந்தவை! சொல்வீர்கள்! செய்வீர்களா?


செந்தமிழினி பிரபாகரன்