(சொல்லாக்க நெடு வழியில். . . தொடர்ச்சி)

சொற்களஞ்சியம் சுரதா!

நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர்.

உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர்.

பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு.

வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு.

பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், வாணிதாசன், முடியரசன், தமிழ்ஒளி, கண்ணதாசன் போன்றோர் பல துறைகளில் கால் பதித்ததை இலக்கிய வரலாறு காட்டுகிறது.

இவ்வரிசையில் சுரதா அவர்கள் சற்று மாறுபட்டவராகத் தோற்றமளிக்கிறார்.

இவர் வரலாற்றுணர்வு மிக்கவர். பழமைச் சிறப்புகளைப் படியெடுத்துப் பாராட்டுகிறார்; பரப்புகிறார். பழைய செய்திகளை, பழைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் தேடித் திரட்டுவது இவரது தனித்தன்மை.

தேடித் தேடிக் கண்டவற்றைத்தக்கவாறு வெளிப்படுத்துவதில் இவர் ஊக்கம் மிக்கவர்.

சுரதா செய்திக் களஞ்சியமாய்த் திகழ்கிறார். கவிஞர்களில் இவர் ஒரு தனிப் பிறவி, அமைதியானவர்; அடக்கமானவர் துணிச்சல்காரர்; இடக்காகவும் மடக்குவார்; இயல்பாயும் மடக்குவார். எளிமையாய்ப் பழகுவார்; இனிமையாய் உரையாடுவார்.

முன்னோரைப் போற்றுவார்; முன்னேற்றம் தரும் அரியவற்றையும் போற்றுவார். எடுத்தெறிந்து பேசும் துணிச்சலும் கொண்டவர். சாதியைக் கேட்டுக் குடைந்தெடுக்கும் சுரதா சாதிப்பித்து அற்றவர்.

முரண்பாடுகளின் மொத்த உருவாய்ச் சொல்லாடும் சுரதா அவர்கள், முழுமையான பெருங்கவிஞர் என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. இதுவே இவரது வெற்றி வாழ்வு எனத்தக்கது.

மறைந்த சொல்லாட்சிகளை எளிதாய் அமைத்து அவற்றுக்கு மறுபிறப்பு தருவதில் வல்லவர். புதிய புதிய உத்திகளில் உவமைகளைத் தந்த சிறப்பால் உவமைக்கவிஞர் எனும் புகழைப் பெற்றார். உரையாடும் பொழுதில் புதிய புதிய செய்திகளைக் கொட்டுவார். மேலும் தம் பெயரையும் புதிதாய் அமைத்துக் கொண்டவர் சுரதா. அவ்வாறே பல புதுமைகளையும் செய்து வருகிறார்.

சிலர் முதலில் வெறுப்பர்; சிலர் வீண் வேலை என்பர். ஆனாலும் சுரதா தளராமல் செய்துகாட்டுவார் தொடர்ந்தும் செய்கிறார்.

அறிஞர், கவிஞர், கலைஞர் போன்ற பலதுறை சார்ந்த சாதனையாளர்களை எந்தவித வேறுபாடும் கருதாமல் போற்றச் செய்வது, அடையாளங் காட்டுவது, நினைவுபடுத்துவது, அவர்கள் பிறந்த ஊரில், வாழுமிடத்தில் மண் எடுத்து வைப்பது இவரது பெரு முயற்சிகளாகும்.

விமானக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், சிலைக் கவியரங்கம், குதிரை மீது கவியரங்கம், வண்டிக் கவியரங்கம், குன்றுக் கவியரங்கம் என்பன இவரது தனிக் கண்டுபிடிப்புகள்; சாதனைகள், வீடுகளில் கருத்துக் கல்வெட்டுகள் பதிக்கச் செய்ததும் புதிய வரலாறே.

பிறந்தநாள் பட்டியல், திருமண நாள் பட்டியல் அச்சிடச் செய்து பரப்பி வருவதும் புதுமைகளல்லவா!

நல்லோரையும் சிறந்தோரையும் பாடும் சுரதா, நடிகர் – நடிகையையும், பல்வேறு தரப்பினரையும் பாடுவார். பொரி, கடலை வறுப்போரையும் மறவாது போற்றுவார். தொழில் வேறுபாடுகளைக் கருதாமல் செய்திகளைப் பாடுவது இவர் வழி.

இவர் ஆத்திகத்தை அறவே எதிர்க்கிறார்; நாத்திகத்தை முற்றாக வளர்க்கிறார்.

இலக்கியத் தேனீயாகவும் வரலாற்றுச் சுவைஞராகவும் வாழ்பவர் சுரதா!

எழுத்தாளர்க்கும் இளங்கவிஞர்க்கும் ஊக்கந் தருபவர். பேராசிரியர்க்கும் பாடக் குறிப்புகள், நுண்மைச் சிறப்புகள் உணர்த்துவார்.

பக்தியை நம்பாத சுரதா, பக்தி வளர்க்கும் பைந்தமிழை மதிப்பார்; சுவைப்பார்.

புதிய சொல்லாக்கத்தில் ஆர்வமிக்க இவர், புதுப்புதுச் சொற்கள் எங்கே பிறந்தாலும் அதைக் கண்டு வியப்பார்; மகிழ்வார்; பரப்புவார்!

முட்டை என்பது ஒரு விதை என்று கூறிய இளங்கவிஞரை இதயந் திறந்து பாராட்டிப் பரிசும் அளித்தார்; பிறரையும் அவ்வழியில் ஊக்கங் கொள்ளச் செய்தார். இவ்வகையில் புத்தார்வங் கொண்டோர் பலராவர்.

வடசொற்கள், ஆங்கிலச் சொற்கள் முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பலரும் பல காலங்களில் தமிழ்ச் சொற்களாகப் படைத்தனர்; படைத்து வருகின்றனர்.

இன்று நம்மில் பலர் அப்புதிய சொற்களைக் கையாள்கிறோம்.

ஆனால் புதிய தமிழ் வடிவம் தந்தவரை நினைவில் கொள்வதில்லை. எப்பொழுது, யாரால், எந்த நிலையில் மொழியாக்கம் நிகழ்ந்தது என்பதைப்பற்றி நாம் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை.

சுரதா அவர்கள் அப்படி ஒதுங்கி விடுவதில்லை. முனைந்து அதைக் கவனிப்பார். குறித்து வைப்பார். பிறர்க்கும் உரைப்பார். அவ்வகை அரும்பணியின் தொகுப்பே இந்நூல். சொற்கள் பிறந்த காலம், இடம், நூல் எனும் முழு விவரங்களும் தொகுத்லு வைத்தார். அதுவே ஒரு நூலாய் வெளி வருகிறது.

இந்நூல் ஒரு திரட்டு, சுரதாவின் தேன் கூடு!

சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. 42 இதழ்களையும் தெரிந்து கொள்ளலாம். அவரது ஆர்வ முயற்சிக்கு நூல் வடிவம் தந்துள்ளோம். சொல்லடைவுகளைக் கொண்டு சொற்களைத் தேடிப் படித்தறியலாம்.

கவிதை படைக்கும் கற்பனையுள்ளம் கலைச்சொல் தேடியுள்ளது; புதுச்சொல் கண்டு பூரித்துப் பொற்குவியலாய்த் திரட்டிக் காத்து, அதன் பிறப்பையும் காலத்தையும் நாம் அறிய வழங்குகிறது.

இத்தொண்டு தக்கது. தனித்தது. இனிப்பது உயர்ந்தது.

அவர் உள்ளத்தில் கொந்தளித்துக் கிடக்கும் கவிதைகளும் காப்பியங்களும் எழுத்துருவில் முழுமையாகத் தராவிடினும் கருதத்தக்க, மொழி வளர்ச்சிக்குரிய தமிழாக்கச் சொற்களைத் தொகுத்தளித்திருக்கும் தொண்டு தனிச் சிறப்புடையது. தேவைப்படும் தமிழ்த்தொண்டு.

தமிழாக்கச் சொற்களை எழுதியோர் – எழுதப்பெற்ற நூல்கள் பற்றிய பட்டியலும், தமிழாக்கச் சொற்களின் அகர வரிசைப் பட்டியலும் பின் இணைப்பாகத் தரப்பெற்றுள்ளது. வாசிப்போர் பார்த்துப் பயனடைய வேண்டுகிறோம்.

மொழி வளர்ச்சிக்கும் பேராசிரியர்களுக்கும் உதவும் பெருந்தொண்டு.

தமிழ்க் கல்வியுலகம் கவிஞரைப் பாராட்டும் என்பது உறுதி. எமது நிலையம் இதனை வெளியிட, விரும்பி அளித்த உவமைக் கவிஞருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1965 ஏப்பிரல் 14ஆம் நாள் கவிஞரின் கவிதைத் தொகுப்பைத் தேன் மழை எனும் பெயரில் வெளியிட்டோம். அதையடுத்து, கவிதைத் தலைவர் நேரு எனும் 16 பக்கமுள்ள அரிய கவிதைப் புத்தகம் ஒன்றை அழகுற வெளியிட்டோம். 38 ஆண்டுகளுக்குப் பின் மொழியாக்கச் சொற்களின் தொகுப்பை 2003இல் வெளியிட்டு மகிழ்கிறோம். தமிழுலகம் பயன்பெறும் என நம்புகிறோம்.

அன்பன்

வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழ்ச்சொல்லாகம், சுரதா – நூல் பதிப்புரை.