சொல்லாக்க நெடு வழியில். . . . இராம. குருநாதன்

சொல்லாக்க நெடு வழியில். . . .

கவிஞர் சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்க நூலின் முன்னுரை

புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார்.

தமிழின் சொற்பொருள் வரலாற்றைக், குறிப்பாக, கடந்த இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த நூல்கள் வழி அறிவதற்கு ஒரு வழித்துணையாக உள்ளது இந்நூல். இந்நூலிலிருந்து பல்வேறு அரிய சொற்களின் பொருள்களை உணர்ந்து கொள்கிறோம். அரிதின் முயன்று தொகுத்த நூல்கள் கவிஞரிடம் மிகுதியும் உள்ளன. அவற்றிலிருந்து அருமையான தகவல்களை அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லியும், இதழ்களில், நூல்களில் எழுதியும் வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அவர். இது போன்றவற்றிற்கு அவரே ஒரு தகவல் களஞ்சியம்.

வடமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைத் தந்தமை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் சொற்களைப் பெயர்த்தல் முதலிய நிலைகளில் பழந்தமிழ் அறிஞர்கள் எத்தகைய இயல்புகளை மேற்கொண்டனர் என்பதற்கு இந்நூல் ஓர் தகவல் ஆவணமாக விளங்குகிறது.

பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் அரிய சொற்களை அவற்றின் திறனறிந்து தொகுத்துத் தந்தமைக்காகக் கவிஞரைப் பாராட்டவேண்டும். இதனைத் தந்துள்ள முறைமையும் அருமையாய் உள்ளது. சொற்களைப் பட்டியலாக மட்டும் தந்திருப்பாரேயானால் அவர் பங்கில் சிறப்பிராது. இத்தொகுப்பு நூலை அவர் அமைத்துக்கொண்ட விதம் சிறப்புடையது. சொல், சொல் வழங்கப்பட்டுள்ள நூலில்/இதழில் உள்ள பத்தி, நூல்/ இதழ்ப்பெயர் நூலாசிரியர், ஆண்டு என்ற நிரலில் அமைத்துக்கொண்டு, அதற்கப்பால் ஆங்காங்கே சிற்சில இடங்களில் குறிப்பையும் தந்துள்ளமை பாராட்டுக்கு உரியது. தகவல்களைத் தரும்போது, “இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது எனவும் இம்மொழிபெயர்ப்பு அடிக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது எனவும் ஆங்காங்கே சொல்லிச் செல்வன கவிஞரின் சொற்பொருள் தேடும் வேட்டையை / வேட்கையை நமக்குப் புலப்படுத்துகின்றன.

தமிழாக்கச் சொற்கள் தமிழ் நூல்களில் பெய்யப்பட்டதை நிரலாகத் தந்திருப்பது அறிதற்குச் சுவை பயக்கிறது. தொகை விளம்பி (ப.12), நிறுத்தற்குறி (ப.13), புகைத்தேர் (ப.18), ஆவி வண்டி (ப.34), காற்றெறி விளக்கு (ப.24), கடைவழி (ப27), நீர்நிலைக் கண்ணாடிக் கூடு (ப.30), ஜலதரங்கம் (ப.106) நிலைச் செண்டு (ப.123), ஒளி அஞ்சல் (ப.171), இலவந்திகை (ப.182) முதலிய சொற்களின் ஆக்கம் படித்தறிவதற்கு இனிமை தருவதாகும்.

நூற்பகுதியில் சொல் இடம் பெற்றிருப்பதை அறியும்போது, அச்சொல் பெய்யப்பட்ட சூழ்நிலை, அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட மொழிநடை ஆகியவற்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாராளுமன்று (1904), உயிரணு (1909), நிழற்படம் (191) வாக்கு (1912) போன்ற சொற்கள் அக்காலத்திலேயே அழகியதாய் மொழி பெயர்த்திருக்கும் திறனை / தேவையை அறிந்துகொள்ள முடிகிறது. சில சொற்களின் பெயர்ப்பு நமக்கு வியப்பூட்டுவதாயும், மருட்கை தருவதாயும் அமைந்திருப்பதை உணர்கிறோம். மதி வல்லோன் (ப112, நெய்யாவி ஊர்தி (ப160), முதலறிவு (ப96), இறப்பு ஏற்பாடு (ப.125) ஆட்டக் கடுதாசிகள் (ப.135), சூடளந்தான் (ப.136), பாழ் (ப.163) முதலியவை இத்தகையன.

பிற துறைச் சொற்கள் அழகியக் கலைச் சொல்லாக்கம் பெற்றிருப்பதையும் காண்கிறோம். மருத்துவம் தொடர்பான கலைச் சொல்லாக்கம் பெற்ற பல சொற்கள் அவ்வாறு அமைந்துள்ளன. உமிழ் நீர்க்கோளம் (ப.39), உடற்கூற்று நூல் (ப126), சிற்றணுக்கூடு (ப.126) முதலியனவற்றை இதற்கு எடுத்தக் காட்டலாம்.

ஒரு துறை சார்ந்த பல சொற்களை ஆங்காங்கே காட்டியிருப்பதும் நன்று. (ப. 42, 118, 142)

பழந்தமிழ் அறிஞர்களான தொழுவூர் வேலாயுத முதலியார்; பாம்பன் சுவாமிகள், திருமணம் செல்வ கேசவ முதலியார், திரு.வி.க., பரிதிமாற் கலைஞர், கா. நமசிவாய முதலியார் முதலான பலர் சொற்பொருளைத் தந்திருக்கும் பாங்கை இந்நூல் விளக்கும்போது அவர்களின் மொழிநடை இயல்பையும் அறிந்து இன்புறுகிறோம்.

மொழி வளர்ச்சியில் பழமைக்கும் இடம் உண்டு; புதுமைக்கும் வரவேற்பு உண்டு. பழையன கழிவதும், புதுமையை ஏற்பதும் மொழியின் இயல்பு. இக்கருத்தைக் கூறும் நூற்பாவில் உள்ள ‘காலவகை‘ என்ற சொல்கூட ஒரு வகையில் மொழியாக்கச் சொல்லே! இன்றைக்கு Fashion என்றழைக்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற சொல்லாக அது உள்ளது.

அதேபோல் இன்று வழங்கப்படும் பிற சொற்களுக்குப் பழைய நூல்களிலிருந்தும் ‘இணை’ அல்லது சமன் சொற்களைத் தேடலாம். சான்றாகக் கூற வேண்டுமானால், Himalayan Blunder என்ற மரபுத் தொடரை ‘வான்பிழை‘ எனக் கம்பன் கூறிய சொற்களில் பொருத்திக் காட்ட வாய்ப்புண்டு. இது தனியோர் ஆராய்ச்சி. விரிப்பிற் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

இந்நூலைத் தொகுத்த கவிஞர் சுரதாவிற்குத் ‘தமிழகம்’ நன்றிக் கடன் செலுத்தவேண்டும். அவரைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படைப்புத் துறைமுகத்திலிருந்து அவர் ஒதுங்கிக் கொண்டாலும், படித்தறிந்த நூல்களின் தேன்மழையில் நம்மைத் திளைக்க வைத்துள்ளார். இது போன்ற தகவல்களின் தமிழ்ச் சுரங்கம் அவர். அக்கவிச்சுரங்கத்தில் இருந்து கவிதைகளைவிட இனி, கனிமங்களை வெட்டி எடுக்கலாம்.

இந்நூலைக் கவிஞர்க்கு ஒரு காணிக்கையாக அளித்துள்ளார் வரலாற்றறிவும், தமிழறிவும் பதிப்புக்கலையும் அறிந்த திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள். இதற்காக அவரைப் போற்றவேண்டும்.

இந்நூலை அழகிய முறையில் வெளிக் கொணர்ந்திருக்கும் சேகர் பதிப்பகத்தார்க்கு என் பாராட்டுக்கள் பல.

பேராசிரியர், முனைவர் இராம. குருநாதன்

தமிழ்ச்சொல்லாக்கம், உவமைக் கவிஞர் சுரதா

இராம.குருநாதன்

Related Posts

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 345

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 345

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 340 – 341

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 340 – 341

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 333 – 339

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 333 – 339

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *