(சூன் 28, 2015 இதழின் தொடர்ச்சி)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/06/83tha.uri_.sa_._thalaippu.jpg

4

உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்

  பிரிவு 24: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசால் நிறுவப்பட்ட உளவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது எனப் பிரிவு 24 கூறுகிறது. இதில், 25 வகையான நிறுவனங்கள் அடங்கும். இருந்தபோதிலும், இந்நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தகவல் கேட்டால் அதனைப் பொதுத் தகவல் அலுவலர் மறுக்கக் கூடாது;   தொடர்பான தகவல்களை வழங்கவேண்டும் என்று விதிமுறை தளர்த்தப்படுகிறது. நாம் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவுடன் அது கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.

  ஆனால், இந்தப்பிரிவு 24 இல் வழங்கப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து நாம் தகவல் கேட்டு விண்ணப்பித்தால், அது கிடைக்கப்பெற்ற 45 நாட்களுக்குள் நமக்குத் தகவல் தரப்படவேண்டும். மேற்கண்ட தகவல்களுக்குப் பொதுத்தகவல் அலுவலர் மத்திய தகவல் ஆணையத்தின் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இல்லாத ஊருக்கு வழிகாட்டும் தகவல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொதுத்தகவல் அலுவலர்

  இந்நிலையில் நாம் கேட்கும் தகவலை 30 நாட்களுக்குள் எந்த ஒரு பொதுத்தகவல் அலுவலரும் தருவதில்லை. நாம் கேட்க கூடிய தகவலால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி நம்முடைய மடலைச் சுற்ற வைத்துவிடுவார்கள். சான்றாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இசைவு பெற்றுள்ளதா என்ற தகவல் கேட்பிற்கு அத்துறையிடமிருந்து நமக்கு மறுமொழி வந்தது. அதில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தங்கள் மனுவில் கேட்டுள்ள தகவல்கள் நாகர்கோவில் மாவட்டத்தைச் சார்ந்துள்ளதால், கீழ்க்குறிப்பிடும் அலுவலருக்குப் பார்வை இல் உள்ள இவ்வலுவல மடல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கீழ் வரும் அலுவலரிடம் தங்களின் மனுவிற்குண்டான மறுமொழி அறிக்கையை உடனடியாகத் தங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவி நிருவாகப் பொறியாளர்- பொதுத்தகவல் அலுவலர்

த.கு.வ.வாரியம்,

சிற்றூர் குடிநீர்த்திட்டம்

நாகர்கோவில்

நாகர்கோவில் மாவட்டத்திற்கு மேற்கூறிய அலுவலரே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டுள்ள மனுவுக்குரிய விபரங்களை அளிக்க கூடிய பொதுதகவல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இம்மனு தொடர்பாக மேற்கண்ட அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது ” என்ற மறுமொழி உள்ளது.

  நாகப்பட்டினம் மாவட்டம் ஒரு மூலையில் இருக்கிறது. நாகர்கோவில் மற்றொரு மூலையில் இருக்கிறது. மேலும் நாகர்கோவில் மாவட்டம் என்று எம் மாவட்டமும் தமிழகத்தில் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர்தான் நாகர்கோவில். இவ்வாறு முறையான   தகவல் தராமல் அதிகாரிகள் கடிதத்தைச் சுற்ற வைக்கும் நிகழ்வுகள் பல உண்டு.

  இதே போன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ளாட்சி நிதித் தணிக்கை நடைபெற்றுள்ளதா என்ற 5 விதமான தகவல்கள் கோரப்பட்டன. அதற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலகத்திலுருந்து தகவல் கொடுக்கபட்டது. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அந்தத் தகவல் அமைந்துள்ளது.

கேள்வி எண்:1 திட்டச்சேரி பேரூராட்சியின் 2013-2014 ஆம் ஆண்டு தணிக்கை இதுநாள்வரை மேற்கொள்ளப்படவில்லை.

கேள்வி எண்: 3,4:கேள்வி எண்.1 -இன் தொடர்ச்சியான விவரம் என்பதால் இவ்விவரங்களை அளிக்கும் நிலை எழவில்லை என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 நாம் கேட்டது தகவல் ஆனால் அவர்கள் மடலில் கேள்வி என்று கூறப்பட்டுள்ளது. தகவலுக்கும் கேள்விக்கும்   பொருள் புரியாமல் பல அரசு அதிகாரிகள் உள்ளனர்.

தகவல் கேட்பு உரிமையை நாம் பயன்படுத்தினால் இதுபோல்தான் தவறான அல்லது திசைமாற்றக்கூடிய, மறு மொழி கிடைக்கிறதே தவிர, நாம்வேண்டும் விவரம் கிடைப்பதில்லை.

(தொடரும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/06/83vaigaianeesu_name-300x188.jpg