thiruma02vellam_koatturpuram-dinamalar

சீரமைப்பதற்கு ஏறத்தாழ

உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை!

– திருமாவளவன்

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகச், சென்னை மாநகரம் வரலாறு காணாத வகையில் முற்றிலும் நிலைகுலைந்துபோய் கிடக்கிறது. சென்னை மாநகரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்  ஏதிலியராக வாழும் அவலத்திற்கு ஆளாகி உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மதிப்பிட இயலவில்லை. மாற்று உடைகள் இல்லாமலும் உணவு மற்றும் குடிநீருக்கே அல்லாடும் நிலையிலும் மக்கள் படும் இன்னல்கள் விவரிக்க இயலாத அளவுக்கு மிகவும் கொடுமையாக உள்ளன.

 சில தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், தன்னார்வ, சமூகப் பணியாளர்களும் ஆங்காங்கே சில உதவிகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும் அந்த உதவிகள் பாதிக்கப்பட்டோரில் இருபது விழுக்காட்டுப் பேரைக் கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்கிற அளவுக்கு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீட்பு, துயர்துடைப்புப் பணிகளில் அதிதீவிரமாக ஈடுபட வேண்டும்.

  மத்திய அரசு இரு தவணைகளாக ஒதுக்கியுள்ள உரூ.1,940 கோடி சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடு செய்வதற்கே போதுமானதாக இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுமெனத் தெரிய வருகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் முழுமையாகப் பொறுப்பேற்று போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். அதாவது மத்திய அரசு மூன்றில் இரு மடங்கும், மாநில அரசு ஒரு மடங்கும் என நிதி ஒதுக்கீடு செய்து துயர்துடைப்பு, மீள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

  சென்னையில் அடையாறு, கூவம் ஆறு, கொற்றலையாறு(கொசத்தலை ஆறு) ஆகிய ஆறுகளின் ஓரங்களில் வசிக்கும் இலட்சகணக்கான மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்க ஆவன செய்யவேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் போதிய கழிப்பறை வசதிகள் இன்றிக் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, நடமாடும் கழிவுக் கூடங்களை ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பகுதிகளிலும் கூடுதலான அளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

  பால், குடிநீர் ஆகியவற்றைச் சில மாதங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் ஊர்திகளுக்குரிய இசைவு, ஒட்டுநர் உரிமச் சான்றிதழ்கள் போன்ற முதன்மை ஆவணங்களை இழந்த அனைவருக்கும் கட்டணம் இல்லாமலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் தீவிர நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.