(தந்தை பெரியார் சிந்தனைகள் 21 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 22

3. சாதிக்கொள்கை தொடர்ச்சி

 

(2) தீண்டாமை: தீண்டாமைபற்றிக் காந்தியடிகளும் சிந்தித் துள்ளனர்; அது பதமான வெறும் மழுப்பல்போல் தோன்றுகின்றது. அரின் (Harian) என்ற பருவ வெளியீட்டில் எவ்வளவோ எழுதியுள்ளார். பெரியாரும் இதனைத் தம்வாழ்நாள் பணியாக மேற்கொண்டு ‘குடியரசு’ ‘விடுதலை’ என்ற இதழ்களில் எவ்வளவோ எழுதியும் பெருங்கூட்டங்களில் ‘முழங்கியும்’ பணிசெய்துள்ளார். இப்பணியே பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ளது. ‘நாத்திகர்’ என்று பெரியாரை வெறுத்த உள்ளங்களில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ‘பூச்சி மருந்து’ அடித்ததுபோல் வேலை செய்துள்ளது. தம்மை அறியாமலேயே மனமாற்றம் செய்துள்ளது. பெரியாரின் இத்தகைய சிந்தனைகளில் ஈண்டு சிலவற்றைக் காட்டுவோம்.

(i) ‘தீண்டாமை விலக்கு’ என்பது பிறருக்குச் செய்யப்பெறும் பரோபகரமான செய்கை எனக் கருதுவது அறிவீனம். அது மனிதத்தன்மையை நிலைநாட்டச் சுயமரியாதையைக் காக்க நாட்டின் விடுதலைக்காக என்று கருதவேண்டும்.

(ii) கூறுவார்கள்: ‘பார்ப்பான் சிவப்பாக இருக்கிறான், பறையன் கறுப்பாக இருக்கிறான் என்று’; “ஒரு கறுப்புப் பார்ப்பானையும் ஒரு சிவப்புப்பறையனையும் நிறுத்தி எவன் பறையன்? எவன் பார்ப்பான்? என்று காட்டு” என்றால் காட்டமுடியுமா? எனவே சாதி என்பது இல்லாத ஒன்றாகும். அது கற்பனையே.

(iii)மலத்தைத் தீண்டினால் அசிங்கம் (அசஃயம்). மின் சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவையெல்லாம் இயற்கையிலேயே தீண்டமுடியாத பொருள்களாயிருப்பதால் தீண்ட அஞ்சுகின்றோம். ஆனால் மனிதனில் தீண்டாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ வேறுபாடோ காட்டமுடியுமா அதற்கு? இதற்கு ஆதாரம்தான் ஏதாவது சொல்ல முடியுமா? ஒன்றும் இல்லையே!

(iv) சாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக்கொண்டு தீண்டாமை போகவேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதும் அறிவுடைமையாகாது என்பது என் கருத்து” என்கின்றார் ஐயா.

(v) காவலர் பணியைத் தாழ்த்தப்பட்டவர்க்கே தரவேண்டும். அவர்களைப் பார்ப்பனர் சேரியில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த சிற்றூர்களுக்குப் பரிசளிக்கவேண்டும். தாழ்த்தப்பெற்ற மக்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்றவேண்டும். தாழ்த்தப் பெற்றவர்களுக்கென்று தனியாகச் சேரிகள் இருக்கக் கூடாது (இன்று கலைஞரின் சமத்துவபுரக் கருத்து இத்திசையில் சிறந்த பணியாற்றுகிறது).

இன்று தீண்டாமை குறைந்துவிட்டது. இக்கருத்தை வலியுறுத்துவதற்காக எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சிறுகதைகளும் புதினங்களும் தோன்றியுள்ளன. தீண்டாமை குறித்து ஒன்றிரண்டு புதுக்கவிதைகளும் உள்ளன. “வள்ளி சிரித்தாள்” என்ற தலைப்பில் உள்ள ஒரு கவிதை.

சப்பரத்தில் வள்ளியும் முருகனும்
கேசுலைட் தூக்கியவாறு
நான்முன்னால் சென்று கொண்டிருந்தேன்
அபிசேகத்திற்காகப்
பன்னீர் பாட்டலுடன் வந்த பட்டர்
என்மீது மோதிவிட்டார்.
“டேய் மடப்பயலே தீட்டாச்சேடா
நான்குளிச்சிகிட்டில்லேடா சாமி கிட்டே போகனும்”
நான் சப்பரத்தைப் பார்த்தேன்
வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது. (குறிப்பு 1)

நல்ல கிண்டல், தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர் குலப்பெண்ணை மணந்து கொண்டதை நினையாமலே, அந்த இறைவனுக்குப் பூசை செய்யும் பட்டர் தீட்டைப்பற்றிப் பேசுகின்றார். நல்ல நகைச்சுவைக் கவிதை இது.

இன்னொரு கவிதை. ஒரு பக்தன் தன் அருகே வந்த நாயை அடித்துத் துரத்தி ஆண்டவனைத் தரிசிக்க ஆலயத்துள் புகுகின்றான். அவனைப் பார்த்துக் கவிஞர் பேசுகின்றார். (குறிப்பு 2)

…………………
நாயும் கடவுளும்
ஒரே பிரம்மம்தான்
என்பதை அறிவாயா நீ?
வேண்டுமானால்
அந்த இரண்டுக்குமுரிய
ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளை (குறிப்பு 3)
மாறிப் போட்டுப்பார். (குறிப்பு 4)

ஆன்மாநுபவம் பெற்ற கைவல்யார்த்திக்கே இரண்டும் ஒன்றாகத் தெரியும். இறையநுபவம் பெற்ற உண்மை பக்தனுக்கு இந்தத் தத்துவ உண்மை கட்டாயம் தட்டுப்படும். வேதாந்த இரகசியம் இது!

இத்தகையவற்றைப் படிக்கும் மக்களிடம் இவை நல்ல மனமாற்றத்தை விளைவித்துள்ளன என்று கருதலாம்.

(3) சாதித்தொழில்: இது நம்நாட்டில் நடைமுறையில் இருப்பது. இதனைக் கடியும் பாங்கில் பெரியாரின் சிந்தனைகள் உருவாகியுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்!

(அ) தொழில்பாகுபாட்டைக் கொண்டே சாதிவகுக்கப்பட்டதே ஒழியப் பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் ஒரு சிலர்: ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும் மறுநாள் காலையில் உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், காவல்காரனாகவும், ஏன் இருக்கக் கூடாதென நான் அவர்களைக் கேட்கிறேன்.

தஞ்சைப் பக்கம் நாயுடுமார்களும் பிள்ளைமார்களும் வாணிகம் செய்தால் ‘செட்டியார்’ என்றே வழங்கப்பெறுகின்றனர். என் நண்பர் ஒரு தெலுங்கு பேசும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு சமயம் (1950-60) அவர் எனக்கு ஒரு திருமண அழைப்பு அனுப்பிவைத்தார். அதில் செட்டியார் மகன் ஒருவருக்கு நாயுடு மகள் ஒருத்தியைத் திருமணம் புரிவதாக இருந்தது. நான் கலப்புத் திருமணமா? என்று வினவ, அவர் செய்யும் தொழிலால் ஏற்பட்டது என்று நிலைமையை விளக்கினார்.

(ஆ) இந்த நாட்டில் பறையன், சக்கிலி, வண்ணான், நாவிதன் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நடைமுறையில் ஒவ்வொரு சாதியாக அல்லவா இருக்கின்றனர்? இந்த நிலையெல்லாம் ஒழிய வேண்டும் என்று நான் (பெரியார்) சொல்லவில்லை. இந்தத் தொழில்கள் உலகத்தில் எல்லா நாட்டிலும்தான் இருக்கின்றன. ஆனால் இந்தத் தொழிலை இன்னின்ன சாதி மக்கள்தாம் செய்யவேண்டும். அம்முறையில் செய்கின்ற அவர்கள் எல்லாம் “கீழ்ச்சாதி மக்கள்” என்று சொல்லுகின்றாயே? இது சரியா? என்று கேட்கிறார் ஐயா.

இன்று சென்னையில் ஒரு முதலியார் தச்சுவேலையையும், ஒரு போயன் கொத்து வேலையையும், ஒரு நாயுடு இரும்பு வேலையையும் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். நகர்ப்புறங்களில் இந்தச் சாதிமுறை மெதுவாக ஒழிந்து வருகின்றது. ஆயினும் அவர்கள் தம்மை ‘முதலியார்’, ‘போயன்’, ‘நாயுடு’ என்றே சொல்லி வருகின்றனர். ‘பிறவிக்குணம்’ இன்னும் மறையவில்லை.

(இ) உண்மையில் சாதியின் பெயரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப்பெறவில்லை என்று சொல்லப் பெறுவது உண்மையானால் ‘மலம்’ எடுக்கின்ற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. எந்தப் பார்ப்பானாவது மலம் எடுத்ததாக யாராவது கேள்வியுற்றீர்களா? தாழ்த்தப்பெற்ற மக்கள்தாமே அந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர்?

பெரியாரின் இந்த வினாவைப் பார்ப்பனர் ஒத்துக் கொள்வதில்லை. மலம் எடுக்கும் தொழிலை ஒரு முதலியார், ஒரு நாயுடு, ஒரு பிள்ளை செய்கின்றாரா? என்று எதிர்வினா தொடுத்தால், வாயடைத்துப் போய்விடுகின்றது. பேச்சு எழமுடியவில்லை.

(ஈ) சாதி இருக்கும் வரையில்தானே சாதித்தொழில்? சாதித்தொழில் இன்று இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழி இருக்காது. எல்லா மக்களும் படித்துவிட்டால் அவரவர் சாதித் தொழில் செய்ய முற்படுவார்களா? பேனா எடுக்கத்தானே நினைப்பார்கள்? நம் பெண்கள் எல்லாம் பள்ளியிறுதிப் படிப்பு வரை படித்து முடித்துவிடுவார்களேயானால் களை எடுக்கச் செல்வார்களா? படித்துவிட்டால் வயிற்றுக்கொடுமை ஒருபுறம் இருந்தாலும் பட்டினிகிடக்க முற்பட்டாலும் முற்படுவார்களே ஒழிய ஒருபோதும் சாதித்தொழில் செய்ய முன்வரமாட்டான். வெள்ளைச்சட்டை வேலையைத் (White collar job) தான் அனைவரும் நாடுவார்கள்.

(உ) நம் நாட்டில் சாதி என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பான், சூத்திரன் என்கின்ற இரண்டுதான். செட்டி, முதலி, பறையன், நாவிதன், வண்ணான் என்பவன் எல்லாம் அவனவன் செய்கிற தொழிலால் பிரிந்திருந்தவனே தவிர-பிரிக்கப் பெற்றவனே தவிர-மற்றபடி அவர்களுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

(ஊ) சாதியின் காரணமாகத் தொழில் என்கின்ற நிலைமை அடியோடு தொலைந்தால்தான் நாட்டில் உயர்வு தாழ்வு மனப்பான்மை ஒழியும். ஆனால் அந்த நிலைமை உருவாகிறவரை அந்தந்த வகுப்பினர்க்குரிய உரிமைகள் காக்கப் பெற்றாக வேண்டும்.

(4) சட்டத்தின் மூலம்: சட்டத்தின் மூலம் சாதியை ஒழிக்க முடியும் என்ற திசையில் கூட பெரியாரின் சிந்தனைகள் செல்லுகின்றன. அவற்றைக் காண்போம்.

(க) சாதிபேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமேயொழிய பொதுமக்கள் இசைவில் என்றால் ஒருநாளும் முடியவே முடியாது. (சனநாயக நாட்டில் இது எப்போதும் சாத்தியம் இல்லை).

(ங) சாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலத்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தின் மூலதார உரிமையாக மதத்தையும் சாதியையும் காப்பாற்றுவது என்று போட்டு விட்டான்.

(ச) சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அது அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாத விகிதம்பேச்சும் பேசாதே. அது வகுப்பு துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்கமுடியுமா?

(ஞ) சாதி உள்ளவரையிலும் எதையும் சாதிவெறி என்று சொல்ல முடியாது. சாதிவெறி ஒழிப்பதற்குச் சட்டம் வருமானால் வெறியை உண்டாக்க வேறு சாதனம் தேவையே இல்லை. அது சாதிப்புரட்சியை உண்டாக்கியே தீரும். இஃது என்தீர்க்கதரிசனம்.

(ட) உத்தியோகத்தினால் ஒருவன் மேல்சாதியானால் கீழ்ச்சாதிக்காரனுக்கும் மேல் சாதியான் பெற்றிருக்கும் அளவுப்படியே உத்தியோகம் கொடுத்துக் கீழ்சாதித் தன்மையை ஒழி என்கிறேன். தகுதியால் ஒருவன் மேல்சாதியானால், மேல்சாதியான் பெற்றிருக்கும் தகுதிமுறையைக் கீழ்ச்சாதியானும் பெறும் அளவுக்குத் தகுதியைக் கொடுத்துக் கீழ் சாதித் தன்மையை ஒழி என்றுதான் நான் கூறுகிறேன் என்கிறார்.

(ண) சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில்-பூசாரி வேலையைக்கூடப் பறையனுக்குக் கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிடமாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே. இன்றைக்குப் பார்ப்பான் எல்லா வேலைக்குப் போயும் மணியடிக்கும் வேலையைக்கூட விடமாட்டேன் என்கிறான். இன்று என்னைக்கேட்டால் புரோகிதர்கள் வேலைக்குக்கூட உரிமம் (License) கொடுக்கச் சொல்லுவேன். அதற்கும் யோக்கியதாம்சம் ஏற்படுத்தவேண்டும்.

(5) பார்ப்பனர்: இவர்களைப் பற்றியும் பெரியார் சிந்தனைகள் உள்ளன. அவற்றையும் காண்போம்:

(ங) தெருவில் மலம், மூத்திரம், எச்சில் இவற்றை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப்பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான், அதனைத் தொட்டால் தீட்டு என்கின்றான்.

(ஙா) சாதியை ஒழிக்கிறவருக்குப் (இராசகோபாலாசாரியாருக்குப்) பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அருத்தம்? சாதிவேறுபாடு காண்பவன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத்தானே தவிர வேறு எதற்காக?

(ஙி) பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துகிறவர்கள் அவன் மேல்சாதி, அவன் வந்துதான் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல்சாதி என்றும் தாங்கள் கீழ்ச்சாதி என்னும் ஒப்புக் கொள்வதாகத்தானே அருத்தம்? இதை ஒழியவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இப்படிச் செய்வார்களா?

(ஙீ) இந்த நாட்டில் இருப்பது போல் சாதிக்கொடுமை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. காரணம், சாதியை அழியவொட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்.

(ஙு) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிருவாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா?

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1  கோதண்டம், கொ, மா: கோழிக்குட்டிகளும் பன்றிக்குஞ்சுகளும்- பக்.41

குறிப்பு 2 மேலது(முன் கட்டுரை)-பக்.23

குறிப்பு 3 மேலது-பக்.23

குறிப்பு 4 DOG-GOD