தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 35 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 36
5. தமிழ்மொழியாராய்ச்சி
மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்.
(1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்று சொல்லப்பெறுகின்றது, கருநாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான்.
(2) திராவிடமொழிகள் என்று சொல்லப்பெறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை பிரித்துக் கொள்ளப்பெற்ற- பிரிக்கப்பெற்ற- மொழிகளேயல்லாமல் கிளை மொழிகள் அல்ல.
(3) பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் (தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஒன்றிலிருந்து வந்தவை, ஒரேதாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இந்தத் தாய்க்கு பிறந்தது ஒரே மகள்தான்; அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாலு பேரிட்டு வழங்குகிறோம். நாலு இடத்தில் பேசப்பெறுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதேயொழிய நாலிடங்களிலும் பேசப்பெறுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தவறு. ஒன்றுதான் நமது அறியாமையால் நாலாகக் கருதப்பெற்று வருகிறது. இதனை மெய்ப்பித்துக் காட்ட என்னால் முடியும்.
(4) தமிழை நன்கு அறியாதவன்தான் இவை நான்கும் தமிழ் அல்ல என்று கூறுவான்.
தந்தை அவர்களின் கருத்து எளிதாகத் தள்ளப்பெறுவது அல்ல. நம்முடைய கல்விச் செருக்கால் படியாதவர் உளறுகின்றார் என்று நினைப்பது தவறு. தந்தையாரின் கருத்து மேலும் மேலும் ஆழ்ந்து ஆராய்தற்குரியது.
இவற்றிற்குள்ளும் சில சொல்ல ஆசைப்படுத்துகிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நம்நாட்டில் கிறித்தவ சமயத் தொண்டர்களும் அரசு அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க நிலையான பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். மொழிநூல் துறைக்கு வித்திட்டவர்கள் மேனாட்டார். டாக்டர் குண்டர்ட்டு மலையாள மொழியைச் செவ்வனே கற்று ‘வடமொழியில் திராவிடக்கூறுகள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார் (1809). டாக்டர் கிட்டல் என்ற அறிஞர் கன்னட மொழியை முட்டறுத்துணர்ந்து 1872இல் ‘வடமொழி அகராதியில் திராவிடச் சொற்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். ஆந்திரத்தில் அலுவல் பார்த்த சி.பி. பிரெளன் (மாவட்டத்தலைவர்) என்பார் தெலுங்கு மொழியினைத் துருவி ஆராய்ந்து தமது கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டார். நீலகிரியில் வாழும் தோடர்மொழிச் சொற்களை ஆய்ந்து போப்பு வெளியிட்டார். இவையெல்லாம் பின்னர் வந்த கால்டுவெல்லுக்குத் துணையாக இருந்தன. அவர் தமிழில் கவனம் செலுத்தினார். அனைத்தையும் ஒரு சேரவைத்து ஆராய்ந்து ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of Dravidian Languages) என்ற நூலை வெளியிட்டார். இவரால் ‘திராவிட மொழியினம்’ உலகுக்கு உணர்த்தப் பெறலாயிற்று. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறும் திருந்திய மொழிகள். தூதம், கோடம், கோந்த்து, கந்த்து, ஒரொவன், இராசுமகால் என்ற ஆறும் திருந்தாமொழிகள். இவற்றுடன் பிராகுய் மொழியும் சேர்தல் உண்டு.
6. எழுத்துச் சீர்திருத்தம்
இன்றைய தமிழ் வரிவடிவத்தில் செய்யப்பெற வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப்பற்றிப் பலருக்குக் கருத்து இருந்தாலும் எவரும் துணிவாய் முன்வராமலே உள்ளார்கள். ஆனால் தந்தை பெரியார் அரைநூற்றாண்டிற்கு முன்னதாகவே துணிவாகவே சில வரிவடிவங்களில் மாற்றம் செய்து விடுதலை, குடியரசு இதழ்களில் செயற்படுத்திவிட்டார்கள். எழுத்துச் சீர்த்திருத்தம் (குறிப்பு 1) பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகளில் சில:
(1) பல நாட்டுமக்கள் கூட்டுறவால் பலமொழிச் சொற்கள் கலக்கும்படி நேரிட்டுவிட்டன. அவற்றை உச்சரிக்கும் போதும் எழுதும்போதும் தமிழ்மொழியும் தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்படவேண்டிய தன்மையில் உள்ளன. இதனால் சில எழுத்துகள் வேறு மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது கூட இன்றியமையாததாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும் பட்சத்தில் புதியனவாகவாவது எழுத்துகளை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.
(2) சிலமாற்றங்கள்: 12 எல்லா உயிர்மெய் எழுத்துகளுக்கும் ஆ-காரம், ஏ-காரம் ஆகிய ஒலிகளுக்கு ‘கால்’, ‘இரட்டைக் கொம்பு’ ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொண்டுள்ளோமோ அதுபோலவே, மேல்கண்ட கி, கீ, கு, கூ முதலிய ஒலிகளுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விசயமாகும்.
(3) ஒள-காரத்துக்கும் கெள என்பதற்குப் பதிலாக கவ் என்றோ கவு என்றோ எழுதினால் ஒலிமாறுவதில்லை. கெளமதி,கவ்மதி, கவுமதி என்பவற்றின் ஒலிகள் ஒன்றுபோலவே உச்சரிப்பதைக் காணலாம்.
(4) உயிரெழுத்துகள் என்பவற்றில் ஐ, ஒள என்கிற இரண்டு எழுத்துகளும் தமிழ்மொழிக்குத் தேவையில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயம். ஐகாரம் வேண்டிய எழுத்துகளுக்கு ஐ என்னும் அடையாளத்தை சேர்ப்பதற்குப் பதியலாக ‘ய்’ என்ற எழுத்தைப் பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார ஒலி தானாக வந்துவிடுகிறது (ஐ-அய்). (குறிப்பு 2.)
(5) எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துகளை, அதாவது அவசியமல்லாத எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும். ( குறிப்பு 3.)
(6) வரிவடிவத்தில் மாற்றம் செய்வது மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் பெற்று, அவை எளிதில் தெரிந்து கொள்ளக்கூடியனவாகவும், கற்றுக் கொள்ளக்கூடியனவாகவும் இருப்பதைப் பொறுத்ததேயொழிய வேறல்ல.
(7) தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளை எடுத்துக் கொண்டால் எல்லாம் காட்டுமிராண்டிக்காலத்திய எழுத்துகள்தாம். எத்தனை சுழி! எத்தனை கோடு! எத்தனை மேல் இழுப்பு! எத்தனைக் கீழிழுப்பு! இந்தக் காலத்தில் இத்தனை எழுத்துகள் எதற்காக இருக்கவேண்டும்? நமக்கு எதற்காக 216 எழுத்துக்கள்? உலகத்திலேயே உயர்ந்த அதிசய அற்புதம் எல்லாம் பண்ணுகிறானே வெள்ளைக்காரன்? அவனுடைய மொழியான ஆங்கில மொழியில் அவன் 26 எழுத்துகளைத்தானே கொண்டிருக் கின்றான்? அந்த 26 எழுத்துகளை வைத்துக்கொண்டு அவன் உலகத்தையே புரட்டுகிறான். (குறிப்பு 4. )
(8) நமது பெண்கள் கோலம் போடுவதையாவது விரைவில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது எழுத்துகளைக் கற்றுக் கொள்வது நமது குழந்தைகளுக்குச் சிரமமாக உள்ளது. பல ஆண்டுகளாக நான் எழுத்துச் சீர்த்திருத்தம்பற்றிச் சொல்லி வருகிறேன். எவன் கேட்கிறான்? இன்றைக்கு நேரு இந்தியாவுக்குப் பொதுஎழுத்து (லிபி) வேண்டும் என்கிறார். மொழியில், எழுத்தில் மாறுதல் உண்டுபண்ணவேண்டும் என்றால் நமது புலவர்கள் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கின்றார்களே!
(9) தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முன் வருவோமானால், மொழிபற்றி, எழுத்துபற்றி கற்பதுபற்றிய சிரமங்களும் பிரச்சினைகளும் பறந்தோடிவிடும்.
(10) மனிதன் விஞ்ஞானத்தில், நாகரிகத்தில், நடப்பில் தலைகீழாக மாற்றம் பெற்றபின் அதற்கேற்ப மொழியை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது மடமையாகும்.
(11) எளிதாகக் கற்றுக்கொள்வதற்கு எழுத்துகள் எளிதில் எழுதக்கூடியனவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், இருக்கவேண்டியது இன்றியமையாததாகும்.
வரிவடிவச் சீரமைப்பில் பெரும்பங்கெடுத்து முயன்றுவரும் அறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் கூறியவற்றைத் திரும்பக் கூறுதல் இவ்விடத்தில் பொருந்துவனவாகும்.
வரிவடிவம்பற்றி வந்த ஒன்று: தமிழ் வரிவடிவம் ஏதோ தொல்காப்பியர் காலத்திலிருந்து நிலைத்து நிற்கும் ஒன்றன்று. வள்ளுவரும் இளங்கோவும் எழுதிய வரிவடிவத்தில் ஓர் எழுத்தும் நமக்குப் புரியாது. இன்று நாம் எழுதும் வரிவடிவத்திலும் அவர்கட்கு ஓர் எழுத்தும் புரியாது. அவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியின் அடிப்படையும் அடையாளமும் மாறவில்லை. மொழிக்கு ஒலிதான் அடிப்படை; வரிவடிவம் ஒலிக்கு நாம் கொடுக்கும் குறியீடு. வரிவடிவமாற்றத்தால் மொழி அணுவளவும் பாதிக்கப் படுவதில்லை நாம் புரிந்து கொள்ள இயலாத சுருக்கெழுத்தில் (Short Hand) எழுதப்படும் தமிழும், நாம் எழுதும் பேசும் தமிழ் தான். வரிவடிவமே மொழி அன்று.
சோதனைக்காலம்: தமிழ்மொழி தனது மேடும் பள்ளமும் நிறைந்த நீண்டவாழ்வில் பல சோதனைகளைச் சந்தித்திருக்கின்றது. ஆனால் இன்றைய நிலைவேறு. நாம் வாழ்வது கல்வியுகம். அறிவியலும் தொழில் நுட்பமும் ஆட்சி செய்யும் காலம். 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போக்குவரத்துப் புரட்சியும், 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சியும் பரந்து விரிந்த உலகை ஒரு ‘வையச்சிற்றுார்’ (Global Village) என்று கூறும் அளவிற்குச் சுருக்கிவிட்டன. இந்தச் சூழ்நிலை வலியர் மொழியும் பண்பும் வளரவும், மெலியவர் மொழியும் பண்பும் தேயவும் துணைநிற்கின்றது. சிறுபான்மை எதுவாயினும் பெரும்பான்மையில் கரைந்து மறையும் காலகட்டத்தில் இருக்கிறோம். இருப்பதை இறுக்கிப் பிடிப்பது மட்டும் போதாது. சற்று இளக்கமும் (Flexility) தேவை. வளர்ச்சிக்கு மாற்றங்கள் தேவை. (குறிப்பு 5. )
சிறந்த ஆய்வாளர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய பணியை உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூடப் பெறாத தந்தை பெரியார் செய்த பணியை எண்ணிப் பார்த்தால் புலவர்கள் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொள்ளவேண்டும்; அறிஞர்கள் பெரியாருக்குச் ‘சலாம்’ போடவேண்டும்.
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்),
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,
சென்னைப் பல்கலைக் கழகம்
(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்பு 1. திருத்தம் செய்யும்போது வரிவடிவம் மேற்கொள்ளும்போது ஒலிவடிவம் மாறாதிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. நான் திருப்பதியில் பணியாற்றியபொழுது (1960-77) -1975இல் மானமிகு கி.வீரமணி கேட்டபடி எழுத்துச் சீர்த்திருத்தம் வரைந்து அனுப்பினேன். அது பெரியார் ஆண்டுவிழா மலர் ஒன்றில் வெளிவந்தது; பின்னர் அவராலேயே நூல்வடிவமும் பெற்றது.
குறிப்பு 2. ஐ என்ற எழுத்தே ஒரு சொல்லாக வழங்கி பொருள் தருவதால் அதை அப்படியே வைத்துக் கொள்ள நேர்ந்தது (எம்.சி.ஆர். ஆட்சிக்காலத்தில்).
குறிப்பு 3. உயிர் எழுத்துகள் 12இல் ஒள காரம் நீக்கப்பெற்றால் உயிர்மெய் எழுத்துகளில் (216களில்) 18 எழுத்துக்கள் குறைந்து விடுகின்றன.
குறிப்பு 4. பெரும்பாலான ஐரோப்பியமொழிகளின் எழுத்துகள் யாவும் ஆங்கில மொழியில் பயன்படும் 26 எழுத்துகளே. ஒரு குறிப்பிட்ட கணக்குப்படி இயக்கினால் ஆங்கில மொழிவரும். வெவ்வேறு வகைகளில் இயக்கி வெவ்வேறு மொழிகளை உண்டாக்கலாம். இத்தனை விதமாக இயக்கி இத்தனைவிதமான மொழிகளை உண்டாக்கும் ஒருவனுக்கு மிகப் பெரிய ஊதியம். ஐரோப்பாவில் இவனுக்கு அளிக்கப்பெறும் ஊதியம் போல் எந்த உயர்ந்த அலுவலர்க்கும் இல்லை!
குறிப்பு 5. கட்டுரை: தமிழ் வரிவடிவச் சீரமைப்பு – தந்தை பெரியார் 121-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (விடுதலை)-பக். 156.
Leave a Reply